மாங்காய் கூட்டம்
27 May 2012 Leave a Comment
காலை ஒன்பதரை மணிக்கு அந்த இளைஞனைப் பார்த்தேன். கெல்லிஸ் முனைக்குப் பக்கத்தில் உள்ள குப்பத்தைப் போன்ற ஒரு பகுதியைக் கடக்கும்போது அடிக்கடி தென்படுவான். வயது இருபத்தைந்து இருக்கலாம். அவன் கூட இரு நண்பர்களும் வந்திருந்தார்கள். இளைஞனுக்குத் தூக்கம் கலையாத முகம். கையில் பாதி கடித்த மாங்காய். அருகில் இருந்த டீக்கடையில் புகுந்து கொஞ்சம் உப்பு வாங்கி மாங்காயில் தடவிக்கொண்டான். சட்டென்று கடைக்குப் பக்கத்தில் உள்ள டாஸ்மாக் கடை வாசலில் நண்பர்களோடு உட்கார்ந்துவிட்டான். டாஸ்மாக் இன்னும் திறக்கவில்லை.
மாங்காய் சைடு டிஷ் என்பது எனக்கு அப்போதுதான் புரிந்தது. சைடு டிஷ் ரெடி. சரக்கு இல்லையே. அவன் முகத்தில் தெரிந்த எதிர்பார்ப்பைத் திருப்பதிக்கு முந்தின நாள் இரவே போய் காலை தரிசனத்துக்கு வரிசையில் காத்திருக்கும் பக்தர்களிடம் மட்டுமே பார்க்க முடியும்.
அப்போது என் மனதில் தோன்றிய ஈவிரக்கமற்ற ஒரு கமெண்ட்டை அங்கே வந்த ஒரு ஆட்டோ டிரைவர் சொன்னது வெகு ஆச்சர்யம். ‘இன்னிக்குக் கடை கிடையாதுன்னு சொல்லிட்டா எப்படி இருக்கும்?’. நண்பனின் கேலியை இளைஞன் ரசிக்கும் நிலையில் இல்லை. தரையில் மாற்றி மாறி துப்பிக்கொண்டேயிருந்தான்.
சரி, இன்னிக்குக் கடை கிடையாதுன்னு சொல்லிட்டா எப்படி இருக்கும்? என்னை நானே கேட்டுகொண்டேன். எனக்கென்னவோ அந்த இளைஞன் யாரையாவது அடித்தே கொன்று விடுவான் என்று தோன்றியது.
தேவையில்லாத ஃபீலிங்ஸ் எதற்கு? அரசு மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற வறிய நிலையிலும் தங்களை வருத்திக்கொண்டு நிதி வழங்கும் மாங்காய் கூட்டத்தைப் பாராட்டுவோம்.
அடடே ஆச்சர்யக்குறி-3
22 May 2012 Leave a Comment
*மனைவியிடம் கணவன் பொய் சொல்வது அவன் தன்னைத் தானே ஏமாற்றிக்கொள்வதாகும். சில உண்மைகளைச் சொல்லாமல் தவிர்ப்பது குடும்பத்தில் அமைதியைத் தழைக்கச் செய்வதாகும் – யாரோ.
*ஒரு வீட்டில் திடீரென புகுந்து, அங்குள்ளவர்களிடம் வாதம் செய்தே, அவர்களின் விருப்பப் பட்டியலில் ஒருபோதும் இல்லாத பொருட்களை வாங்க வைத்துவிட முடியும் என்று நம்பும் விற்பனைப்பிரதிநிதிகள் பீதியூட்டுகிறார்கள்.
*சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரைக்கும் துணிக்கடையோ கறிக்கடையோ விளம்பரப்பலகைகளில் ஓவியமாகச் சிரிப்பது சினேகாதான். புன்னகை அரசியின் திருமணத்தால் ஓவியர் பெருமக்கள் வேறோர் அரசிக்குப் பட்டம் சூட்டி விடுவார்களோ?
*உச்சி வெயில் மண்டையைப் பொளக்கும் நேரத்தில் ஏடிஎம்மில் ஏசி குளிரை அனுபவித்தபடி பணம் எடுக்கும்போது பணத்தின் மீது மரியாதை கூடுகிறது.
*ஒரு க்ளாஸ் ஜூஸைக் குடித்து முடித்துவிட்டு, கிளம்பத் தயாராகும் வாடிக்கையாளர்களை நிறுத்தி, மிக்ஸியில் மிச்சமிருக்கும் ஜூஸையும் ஊற்றிக் குடிக்கத் தரும் கடைக்காரர்கள் அம்மா கையால் ஜூஸ் குடித்த நாட்களை நினைவுப்படுத்துகிறார்கள்.
மானசரோவர் மக்களின் கனவா?
16 May 2012 2 Comments
in Uncategorized Tags: மானசரோவர்
”தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது சீன நாட்டில் உள்ள மானசரோவருக்கும் நேபாளத்தில் உள்ள முக்திநாத்துக்கும் புனிதப்பயணம் செல்ல வேண்டும் என்பது பல இந்துக்களின் விருப்பமாக இருந்துவருகிறது’’ என்று சமீபத்தில் சட்ட மன்றத்தில் கூறியுள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. ஒவ்வொரு வருடமும் 250 பேர் மானசரோவர் செல்லவும் 250 பேர் முக்திநாத் செல்லவும் ஆகும் செலவில் ஒரு பகுதியை மானியமாகக் கொடுத்து தமிழக அரசு உதவும் என்றும் அவர் அறிவித்திருக்கிறார்.
இந்தச் செய்தியைக் காலையில் படித்ததிலிருந்தே, மானசரோவருக்கும் முக்திநாத்துக்கும் செல்வதை வாழ்நாள் லட்சியமாக வைத்திருக்கும் இந்துக்கள் யாராவது இருப்பார்களா, அப்படி யாராவது இருந்தால் எத்தனை பேர் இருப்பார்கள் என்று யோசித்துப்பார்க்கிறேன். அறுபது வயதைக் கடக்கும்போது நம்மவர்கள் பலருக்கு காசிக்குப் போக வேண்டும் என்ற உந்துதல் எழும். ஒருமுறையாவது திருப்பதிக்குப் போக வேண்டும் என்ற விருப்பம் இளைய தலைமுறையினர் சிலருக்கே இருப்பதைக் கேட்டிருக்கிறேன்.
நவதிருப்பதி என்றழைக்கப்படுகிற நத்தம், புளியங்குடி, பெருங்குளம், இரட்டை திருப்பதி, தென்திருபேரை, திருக்கோளூர், ஆழ்வார்திருநகரி ஆகிய ஊர்களும் நவக்கிரகத்தலங்கள் என்றழைக்கப்படும் வைத்தீஸ்வரன் கோயில், கஞ்சனூர், திங்களூர், ஆலங்குடி, திருநாகேஸ்வரன், திருநள்ளாறு, மேலப்பெரும்பள்ளம், திருவெண்காடு ஆகிய ஊர்களும் தமிழ்நாட்டிலேயேதான் இருக்கின்றன. ஆரோக்கியம், செல்வம், தொழில், வேலை, திருமணம், ஆயுள் உள்ளிட்ட வாழ்க்கையின் அடிப்படை அம்சங்களோடு இந்துக்கள் ஏதோ ஒரு வகையில் இணைத்துப்பார்க்கிற ஆன்மீகத்தலங்கள் இவை. இங்கெல்லாம் சென்று தரிசிக்க வேண்டும் என்ற ஆசையே பலருக்கு நிறைவேறாத கனவாகவே நீடித்துக்கொண்டிருக்கிறது. அறுபடை வீடுகள் அத்தனைக்கும் சென்று தரிசித்தவர்களைக் கூட விரல் விட்டு எண்ணிவிடலாம். உண்மை நிலைமை இப்படி இருக்கும்போது, எங்கேயோ இருக்கும் மானசரோவருக்கும் முக்திநாத்துக்கும் செல்வதை நம்மூர் இந்துக்கள் ஆன்மீக விருப்பமாக வைத்திருப்பார்களா?
இந்து மதத்தைப் பொறுத்தவரை, வட இந்தியர்களின் கலாச்சாரக்கூறுகள் தமிழர்களும் பின்பற்ற வேண்டியதாக மாற்றப்படுவது புதிதல்ல. மானசரோவர், முக்திநாத் புனிதப்பயணங்களும் அப்படி தமிழர்களின் மனதில் செருகப்பட்ட மத நிகழ்வுகள்தான்.
முஸ்லீம்களுக்கு மெக்கா செல்வது என்பது இஸ்லாமிய மதம் வகுத்த வாழ்க்கை நெறிமுறைகளில் ஒன்று. ஒரு முஸ்லீம் ஹஜ் யாத்திரை மேற்கொள்வதையும் ஓர் இந்து மானசரோவருக்குச் செல்வதையும் ஒன்றாகக் கருத முடியாது. நம்மூர் கிறிஸ்தவர்களுக்குக் கூட ஜெருசலம் செல்வது தணியாத ஆன்மீகத் தாகமாக இருக்குமா என்பது உறுதியாகத் தெரியவில்லை.
தமிழகத்தில் மெத்தப் படித்த, இந்து சமயத்தின் அனைத்து சம்பிரதாயங்களையும் நிறைவேற்றிக்கொள்ளும் அளவுக்கு வசதி படைத்த தரப்பினருக்கு இந்தப் புனிதப்பயணங்கள் ஒரு கனவாக இருக்கலாம். ஆனால் பெரும்பான்மையினரான ஏழை,நடுத்தரக்குடும்பங்களுக்கு மானசரோவரும் முக்திநாத்தும் ஆன்மீகச் செய்திகளுக்கான இடங்கள் மட்டுமே.
இந்நிலையில் மொத்த தமிழக இந்துக்களும் கோரிக்கை மேல் கோரிக்கை அனுப்பியது போல, முதல்வர் ஜெயலலிதா இந்தப் புனிதப்பயணங்களுக்கு மானியம் ஒதுக்கியிருப்பது தேவையில்லாத சாதனையாகப் படுகிறது. அரசின் நிதிநெருக்கடியைத் தன்பங்குக்குக் கொஞ்சம் அதிகரிக்கச் செய்யும் ஒரு வேலைதான்.
பக்தர்கள் அல்லல் படுமளவுக்கு இங்குள்ள கோயில்கள் பலவற்றில் எத்தனையோ குறைகள் இருக்கின்றன. அடிப்படை பூசைகளுக்குக் கூட வசதியற்ற, நலிவுற்ற கோயில்கள் பல உண்டு. இதைச் சரிசெய்யும் நடவடிக்கைகளில் தமிழக அரசு இறங்கியிருந்தால் மக்கள் இன்னும் சந்தோஷப்பட்டிருப்பார்கள். முந்தைய ஆட்சிக்காலத்தில் ஜெயலலிதா தொடங்கிவைத்த அன்னதானத் திட்டம் அப்படிப்பட்ட ஒரு நல்ல நடவடிக்கையே. இந்தத் திட்டத்தால் கோயில்களுக்குப் பக்கத்தில் உள்ள கடைக்காரர்களும் கோயில்களை அண்டிப்பிழைக்கும் நித்திய சோம்பேறிகளுமே பயன்பெறுகிறார்கள் என்று ஆரம்பத்தில் குறைகூறப்பட்டிருக்கலாம். ஆனால் வயிற்றுக்குச் சோறிட வேண்டும் என்று பசியை ஆற்றுவதையே இறைவனை அணுகும் ஒரு செயல்பாடாகக் கருதிய வள்ளலாரின் கோட்பாட்டுக்குப் பக்கத்தில் வருகிற ஒரு திட்டம்தான் அது. நூற்றுக்கு ஐம்பது அறுபது வறியவர்களாவது அன்னதானத்திட்டத்தின் கீழ் பசி ஆற மாட்டார்களா?
இந்த அறிவிப்பால் ஒரே ஒரு நன்மை நடக்கும் என்று நம்புகிறேன். முஸ்லீம்களுக்கு ஹஜ் யாத்திரை செல்ல அரசு தரும் நிதியுதவியை இந்துக்களைப் புறக்கணிக்கும் ஓர வஞ்சனை செயல்பாடாக உள்ளூர் பா.ஜ.க கூட்டங்களில் பேசப்படுவதை முன்பு கேட்டிருக்கிறேன். இனி இந்துக்களுக்கும் இந்தச் சலுகைகள் வழங்கப்படும் என்பதால் மதவாதக் கட்சிகளின் உசுப்பிவிடும் வேலைகளுக்கு வழி இருக்காது!
அடடே ஆச்சர்யக்குறி-2
11 May 2012 Leave a Comment
*********
*நாட்டுமருந்துக்கடை என்றால் இளக்காரமாகப் பார்க்கிறோம். நட்ஸ் அண்ட் ஸ்பைஸ் என்று பேர் வைத்தால் வாயைப் பிளக்கிறோம்.
*படம் எப்படி இருக்கு என்பதை விட, படம் ஓடுமா என்பதில் நம்மவர்கள் ஆர்வம் காட்டுவதற்கு உளவியல் காரணம் என்னவாக இருக்கும்?
*டைட்டிலை விட, ஹீரோக்களின் நளினமான நடன அசைவுகளே தெலுங்குப்பட போஸ்டர்களை அடையாளம் காண வைக்கிறது.
*சமீபத்தில் ராயப்பேட்டையில் நடுரோட்டில் சிலரால் விட்டுச்செல்லப்பட்ட ஒரு பூனைக்குட்டியைப் பார்த்தேன். பிறந்து சில நாட்களே ஆன குட்டி. நான் உட்பட ஆறேழு பேர் அதற்காகப் பரிதாபப்பட்டாலும் உடனே செயலில் இறங்கவில்லை. மின்னல் வேகத்தில் ஒரு கார் அதைத் தாண்டிச் சென்றதில், டயரின் ஓரத்தில் பூனையின் கால் பட்டு அடிபட்டுவிட்டது. எங்கள் பக்கம் நின்று வேடிக்கை பார்த்த ஒருவர் சட்டென்று அதை எடுத்து ரோட்டின் ஓரத்தில் பாதுகாப்பாக வைத்தார். அவர் அருகில் உள்ள கம்பெனி ஒன்றில் பணிபுரிபவராகத் தோற்றமளித்தார். அப்புறம் அவரைக் காணவில்லை. நான் புளூ கிராஸ் அமைப்பில் பேசினேன். ’ராயப்பேட்டைதானே? இப்போதான் ஒருத்தர் போன் பண்ணாரு. அவரே எடுத்துட்டு வந்துடுறதா சொல்லிட்டாரு’ என்று புளூ கிராஸில் பேசியவர் சொன்னார். எனக்கு சந்தோஷமாகவும் இருந்தது. சில நொடிகளிலேயே சந்தேகமாகவும் இருந்தது. உண்மையைச் சொல்றாரா? நம்மள சமாதானப்படுத்துறதுக்குப் பொய் சொல்றாரா?
பூனைக்குட்டி இடைவிடாத மியாவ்களால் நியாயம் கேட்டுக்கொண்டிருந்தது. ப்ளூ கிராஸ் வேளச்சேரி செக்போஸ்ட் அருகில் இருக்கிறது. இரவு ஏழரை மணிக்கு ஒரு பூனைக்குட்டியை எடுத்துக்கொண்டு வேளச்சேரி செல்லும் மனநிலை எனக்கு இல்லை. மறுபடியும் புளு கிராஸ் நிர்வாகியிடம் பேசினேன். ‘சாயங்காலம் ஆறு மணிக்கு மேல் நாங்க வர மாட்டோம் சார். ஸ்டாஃப் கிளம்பிட்டாங்க. நாளைக்குக் காலையில்தான் வர முடியும்’ என்று அவர் சொல்ல, ‘ராத்திரி அடிபடுற நாய், பூனைகள் கதி அவ்வளவுதானா?’ என்று அவரிடம் அங்கலாய்க்கத்தான் என்னால் முடிந்தது. ’வேணும்னா, சைதாப்பேட்டையில் உள்ள ஹோமுக்கு எடுத்துட்டுப்போகலாம். அங்கேயும் அவங்க வர மாட்டாங்க’ என்று அவர் சொல்ல, சைதாப்பேட்டை செல்ல மனதளவில் நான் தயாரானேன். அப்போது சில நிமிடங்களுக்கு முன்னால் பூனைக்குட்டியை எடுத்து ரோட்டோரம் வைத்த நபர் மறுபடியும் தென்பட்டார். அவர் கையில் ஒரு பெட்டி. பூனைக்குட்டி அருகில் சென்று அதைப் பெட்டியில் பத்திரப்படுத்த ஆயத்தமானார். அவரது அலுவலக நண்பர்கள் அவருக்கு உதவினார்கள். அவரிடம் கேட்டேன், ‘நீங்கதான் புளு கிராஸ்ல பேசினீங்களா?’ அவர் புன்னகைத்துக்கொண்டே,’ஆமாம். என் வீட்டுக்கு போற வழிதான். அதான் எடுத்துட்டுப் போய் விட்டுறலாம்னு தோணுச்சு’ என்றார். பூனை பயத்தில் பெட்டியை மீறிக்கொண்டு வர, அவரது குழுவினர் செல்லக்கோபத்துடன் பெட்டி மீது செல்லோடேப் ஒட்டினார்கள். பார்ப்பதற்கு சந்தோஷமாக இருந்தது. எனக்கு ஏற்பட்ட குற்றவுணர்ச்சி மெல்ல விலகியது.
வாழ்க்கை மீது அவநம்பிக்கை கொள்ள வழியே இல்லை. வள்ளுவர் எழுதிவைத்தபடி, மழை பெய்து உலகம் உய்வதற்குக் காரணமான நல்லவர்கள் எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறார்கள். அவர்கள் ஃபேஸ்புக்கோ, ப்ளாக்கோ எழுதாமல் இருக்கலாம். நற்செயல்களால் வாழ்க்கையை வாழ்கிறார்கள்.
***********
அடடே ஆச்சர்யக்குறி-1
07 May 2012 Leave a Comment
.வலைப்பூ எழுதும் ஆசையில் ஒரு வருடத்துக்கு முன்பு நண்பன் சந்தோஷ் உதவியுடன் இந்த வலைப்பூவை ஆரம்பித்தேன். உற்சாகமாக தொடங்கிவிட்டாலும், சின்னச் சின்ன கவிதைகளைத் தாண்டி எதுவும் எழுதவில்லை. நண்பர் செல்வேந்திரனின் பாணியில் எனது அனுபவப் பகிர்தல்களைச் சின்னச் சின்ன பதிவுகளாகப் போடலாம் என்று சமீபத்தில் தோன்றியது. அத்தகைய பதிவுகளை ’அடடே ஆச்சர்யக்குறி’ என்ற தலைப்பில் இனி இந்த வலைப்பூவில் நீங்கள் பார்க்கலாம்.
* சிவப்பு சிக்னல் போட்ட பிறகும், வழிவிடாமல் தொடர்ந்து பறக்கும் வண்டிகளை ஊடறுத்து தங்களுக்கான க்ரீன் சிக்னல் உரிமையை நிலைநிறுத்துவது சென்னையின் குடிமகன்களுக்கு அடிக்கடி வாய்க்கும் ஹீரோயிசம்.
* இரண்டு பெரிய கேட்கள், ஒரு கேட்டுக்கு இருவராய் நான்கு செக்யூரிட்டிகள், உள்ளே வர ஆக்ஸஸ் கார்டு கேட்கும் மெஷின் இத்தனையையும் நம்பாமல் அடுத்தவனைப் பற்றி கவலையும் படாமல் பைக்கிற்கு ஃப்ரண்ட் லாக் போட்டுவிட்டு, அதை இரண்டு முறை ஆட்டியும் பார்த்துவிட்டு அலுவலகத்துக்குள் நுழைபவர்களை என்ன செய்யலாம்?
* மடியில் தூக்கி வைத்துக் கொஞ்சும் உரிமையாளர், உச்சா, கக்கா கடமைகளை நிறைவேற்ற வெளியே அழைத்துச் செல்லும் வேலைக்காரர்…பணக்கார வீட்டு நாய்களுக்கு யார் எஜமானர்?
* ’ரெண்டு ரூபாய் சில்லறை இருக்கா பாருங்க’ என்று கேட்கிற பஸ் கண்டக்டர்கள், ‘இல்லை’ என்ற உண்மையான பதிலைச் சொன்னால் முறைக்கிறார்கள். சும்மாவேனும் சட்டை பாக்கெட்டைத் தொட்டுத் துழாவிவிட்டு அதே பதிலைச் சொன்னால் அமைதியாக நகர்கிறார்கள். அப்பப்போ ஆக்டிங் கொடுங்க சார். வாழ்க்கை நல்லாருக்கும்.
* மெரீனா கடற்கரை. வேர்க்கடலை, சுண்டல், பாப்கார்ன், பஞ்சு மிட்டாய், இஞ்சி டீ என வரிசையாக வந்து கொண்டேயிருந்தார்கள். நான் மறுத்துக்கொண்டே இருந்தேன். முறுக்கு டின்னுடன் ஒரு நடுத்தர வயதுக்காரர் வந்து நின்றார். மறுக்கப்போன என்னை முந்திக்கொண்டு சொன்னார், ‘இன்னிக்கு வியாபாரமே இல்லை. ஒரு பாக்கெட் பத்து ரூபாதான். வாங்கிக்கோய்யா.’ சற்று பழசாக இருந்தாலும், அந்த டீலிங் எனக்குப் பிடித்திருந்தது. முறுக்கு சாப்பிட்டுவிட்டு கடற்கரையிலிருந்து கிளம்பினேன்.
அப்பா
11 Feb 2011 1 Comment
செல்போனில் அழைக்கவும்
அழைப்புகளை ஏற்கவும் மட்டுமே
தெரிந்த அப்பாவிடமிருந்து
மூன்றாவது ப்ளாங் மெஸேஜ்.
என் நான்கு வயது மகளை
அப்பாவிடம் உணரும் நேரம்.
ஆனந்த் செல்லையா கவிதைகள்
05 Feb 2011 1 Comment
நிறைய பேசியாகிவிட்டது
வாழ்க்கையைப் பற்றி
வாழ்வது மட்டும்தான் பாக்கி.
அழுதாலும் சிரிப்பது
போன்ற முகவெட்டு
பொமரேனியன் நாய்க்கு
ஆளற்றதெருவில்
யாரைத் தேடுகிறது
நடுநிசி மழை?



