காட்சிப்பிழைதானோ?

எஸ்பிஓஏ பள்ளிச் சாலையின் முடிவில் ஒரு சின்ன பிள்ளையார் கோயில் இருக்கிறது. கோயிலுக்கு அவுட் லைனாக சீரியல் பல்புகளைச் சரமாய் தொங்க விட்டிருப்பார்கள். இன்று இரவு நான் வீடு திரும்பும்போது, கோயிலுக்கு நேரெதிரில் ஒரு ஐஸ் க்ரீம் வண்டி நிறுத்தப்பட்டிருந்தது. தூரத்திலிருந்து பார்த்தால் ஐஸ் க்ரீமுக்குக் கோயில் வைத்தது மாதிரி தோன்றியது.
…..
ஃபாதர் ஜெரார்டின் ஒற்றை அறை அலுவலகம். நாற்காலியில் அமர்ந்திருந்தபடி ஃபாதர் எங்களிடம் பேசுகிறார். கேமரா ஓடிக்கொண்டிருக்கிறது. பாதருக்கு பின்னால் மியாவ் சத்தம். சன்னல் வழியாக ஒரு செவளை நிறப் பூனை நுழைந்து அவரெதிரில் உள்ள மேஜையில் அமர்கிறது. எத்தனை முறை கீழே இறக்கிவிட்டாலும், மீண்டும் அவரிடமே தாவுகிறது. ஃபாதர் தனக்குப் பக்கவாட்டில் உள்ள கதவைத் திறந்து அந்தப் பூனையை எங்கோ கொண்டுபோய் விட்டுவிட்டு அமர்கிறார். அடுத்த நொடியே எங்களுக்குப் பின்னால் மியாவ் சத்தம். இன்னொரு வாசல் வழியாக செவளை நிறப் பூனை வந்து நிற்கிறது. ‘என்ன ஒரு பிடிவாதம்’ என்று நாங்கள் எங்களுக்கிடையே பார்த்துப் புன்னகைத்துக்கொள்கிறோம். ’இப்போதானே கொண்டுபோய் விட்டீங்க…அதுக்குள்ள இந்த வழியா வந்துடுச்சே’ என்று ஃபாதரிடம் கேட்டுக்கொண்டிருக்கும்போதே பக்கவாட்டு அறை வழியாக இன்னொரு செவளை நிறப் பூனை நுழைகிறது. உண்மையில் இதுதான் முதலில் வந்த பூனை. ஃபாதரைப் பார்க்க வருகிறவர்களை ஜாலியாகக் குழப்புவதற்கென்றே இயேசு கிறிஸ்து அந்த ட்வின்ஸ் பூனைகளைப் படைத்திருப்பார் போல. ஆமென்.
…….
வடபழனி சிக்னலில் காலை பத்து மணி வெயிலில் வாகனங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. என் மோட்டார் சைக்கிளுக்கு முன்னால் ஒரு குட்டி யானை வண்டி நிற்கிறது. ’சிக்னல் இப்போ விழுந்துரும்’ என்ற நம்பிக்கையில் அந்த வண்டியின் இன்ஜின் தடதடவென துடித்துக்கொண்டிருந்தது. வண்டியை விட, வண்டியின் பின்கதவில் தொங்கிய பூட்டு அதிகம் துடித்தது. ஒரு பூட்டின் நடனம். பூட்டப்பட்ட நிலையில் அதற்கு மேல் ஒரு பூட்டால் ஆட முடியாது.
….
முக நூலில் சில புகைப்படங்களைப் பார்க்கிறேன். ’நல்லாருக்கே. இந்தா ஒரு லைக்’ என்று மெளசை இழுக்கப் போனால், ஏற்கனவே போடப்பட்ட எனது Like சிரிக்கிறது. எப்போ பார்த்தேன்? எப்போ லைக் போட்டேன்? சரி.. ஏன் சிரிக்குறீங்க?
….
எனக்கு முன்னால் போகிற பைக்கின் பின்னிருக்கையில் ஒரு பெண் அமர்ந்திருக்கிறாள். பைக்கை ஓட்டும் தன் கணவனிடம் ஆர்வமாக ஏதோ பேசிக்கொண்டிருக்கிறாள். அவளது சுடிதார் நுனி பைக்கின் லைட்டுக்குத் திரைபோடுகிறது. வழக்கமாக அலுப்பூட்டும் ஒரு சிவப்பு நிற ஒளி இப்போது விசேஷமாகத் தெரிகிறது. சாத்தானிடமிருந்து ஒன்று, தேவனிடமிருந்து ஒன்றுமாகப் பெறப்பட்ட என் கண்கள் லைட்டை வெறிக்கின்றன.
….
குழந்தை பலூனை ஊதுகிறது. ஊதுகிறது.இன்னும் ஊதுகிறது. பலூன் வெடிக்க, அதிர்ச்சியும் ’அப்பாம்மா திட்டுவாங்களோ?’ என்ற பதற்றமும் சேர்ந்து முழிக்கிறது. அவர்கள் சிரிக்க, அதுவும் சேர்ந்து சிரிக்கிறது.
…..

நீளமான இரு காதுகளும், தலை முடியும் காற்றில் பறக்க, எதிர்காற்றுக்கு முகத்தைக் கொடுத்துக்கொண்டு ஒரு நாய் சாலையோரம் அமர்ந்திருக்கின்றது. ஊழியையே எதிர்நோக்குவது போல அப்படி ஒரு தோரணை. நாய்களைக் கட்டி அணைத்துக்கொள்ளத் தோன்றுகிற ஒரு தருணம் இது என்பதை நாய் வளர்ப்பவர்கள் அறிவார்கள்.
….
டீக்கடை வாசலில் கையேந்தி நின்ற மூதாட்டிக்குக் காசு கொடுத்துவிட்டு உள்ளே போனேன். டீ குடித்துவிட்டு நான் வெளியே வரும்போது மீண்டும் அழைத்து கையேந்தினாள். சில நொடிகளிலேயே சுதாரித்துக்கொண்டு அவளுடைய கைகள் கீழே இறங்கி பலவீனமான ஆசீர்வாதம் ஆகிறது.
…..
வழக்கமாக நான் அவசரமாகச் சென்று வந்துவிடும் கோயில் கருவறைதான். அன்று நின்று நிதானமாகக் கவனித்தேன். கற்சிலையில் மனித முகம் கனிந்துகொண்டிருந்தது.

Advertisements

உலகம் விரும்பும் உன்னத பேனா

அலுவலகத்தில் X பக்கத்து இருக்கை நண்பனான Y எழுதுவதையே குறுகுறுவென பார்த்துக்கொண்டிருக்கிறான். Yஇன் கையில் இருப்பது X இன் பேனா தான். X தயக்கம் நீங்கி கேட்கிறான், ‘தலைவா…இது என் பேனா தானே?’ Y ஒன்றும் சொல்லவில்லை. அவனுக்கு எதிரே உள்ள கம்யூட்டர் கீ போர்டின் நடுவிலிருக்கும் பாக்ஸைத் திறக்கிறான். உள்ளே வெள்ளை நிற பால் பாயிண்ட் பேனா ஒன்று உறங்கிக்கொண்டிருந்தது. அதை X இடம் கொடுக்கிறான். X எதிர்பார்க்கவே இல்லை. கம்பி மத்தாப்பூவை முதல் முறையாகக் கையில் வாங்கிய குழந்தைபோல அவன் முகத்தில் மகிழ்ச்சி. அதுவும் அவன் பேனா தான். சில நொடிகளுக்குப் பிறகு ’இதெல்லாம் ஒரு பொழப்பு?’ என்று வினவிய Xஇன் பார்வையைத் தவிர்த்துவிட்டு Y எழுதுவதைத் தொடர்கிறான். Y தெளிவாக இருக்கிறான். பேனாக்களைக் கவர்வது வேறு, நிர்வகிப்பது வேறு. மேலும், இது Yக்கு X செய்யாத ஒன்றும் அல்ல.
……
சிரித்த முகத்துடன் கறாராக வாழ முடியும் என்பதற்கு என்னோடு பணிபுரியும் ரத்னா ஓர் உதாரணம். ஒருநாள் காலையில் ஏதோ குறிப்பெடுக்க ரத்னாவிடம் பேனா வாங்கினேன். மதியம் மகாராஜன் அதை என்னிடமிருந்து வாங்கினார். அவர் எழுதிவிட்டுக் கொடுத்தபோது, ‘இது என் பேனா மாதிரியே இருக்கு’ என்றார். ‘ஆசை தோசை அப்பளம் வடை’ என்றேன். லேசாகச் சிரித்துக்கொண்டே போய்விட்டார். இந்த விஷயத்தை ரத்னாவிடம் சொன்னால், ’என்ன நடக்குது எங்கே? இது என்ன மாதிரியான உலகம்?’ என்ற தொனியில் ஆங்கிலத்தில் எரிச்சல்படுவார் என்பது எனக்குத் தெரியும். இருந்தும் அவரிடம் பேனாவைத் திருப்பிக்கொடுக்கும்போது ஒரு தகவலுக்காகச் சொன்னேன், ‘மகாராஜன் இது அவரோட பேனான்னு சொல்றாரு!’ அவரது பதிலை எதிர்பாராமல் கிளம்பிய என்னிடம் ரத்னா தோளை உயர்த்திக்கொண்டு சொன்னார், ‘ஓகே! கொடுத்திருங்க’. ’அட கிறுக்குப்பய புள்ள’ என்ற என் அதிர்ச்சியை அவர் பொருட்படுத்தவில்லை. இந்த முறை மகாராஜன் அதிகமாகவே சிரித்தார். ரத்னா பேனாவை மகாராஜனிடம் வாங்கவும் இல்லை. அவரிடம் பேனா இருப்பது மகாராஜனுக்கும் தெரியாது. எப்படியோ தொலைந்த பேனா எப்படியோ திரும்பி வந்திருக்கிறது. இந்தக் கண்ணாமூச்சியில் நடுவே என்னைப் போல யாரேனும் குழம்பி நிற்பதும் நேர்கிறது.
…….
நான் பிரசாத்திடம் வாங்கிய பேனாவை சுபாஷ் கேட்டபோது என் பேனாவைப் போலவே கொடுத்தேன். முதல் பார்வையிலேயே அது தந்த ’விசேஷமானது’ என்ற உணர்வை நான் எளிதாகக் கடந்துவிட்டேன். பேனாவை வாங்கியதை சுபாஷும் மறந்துவிட்டான், கொடுத்ததை நானும் மறந்துவிட்டேன். இரு நாட்களுக்குப் பிறகு என்னை லிப்ட்டில் சந்தித்த பிரசாத் பேனாவைத் திரும்பக் கேட்டான். அந்த சம்பவத்தையே மறந்துபோனதை மறைத்துக்கொண்டு, சிரித்துச் சமாளித்தேன். நான் சுபாஷிடம் போய்க் கேட்டபோது நெற்றியைச் சுருக்கினான். ‘நேத்து சந்திரன் வாங்கிட்டுப் போனான்…’ என்று அனுமானமாகப் பதில் வந்தது. பேனா தன் கைகளிலிருந்து வேகமாக நழுவிக்கொண்டிருப்பதை உணர்ந்து பிரசாத் மறுபடியும் நினைவுப்படுத்தினான். ‘அது ஊர்ல இருக்குற என் தம்பி கிஃப்ட்டா கொடுத்தது சார்….’ சொல்லும்போதே அவன் கண்கள் கலங்கின. ‘அடடா..’ என்ற என் மறதி ‘ஐய்யோடா’ என்றானது. கொஞ்சம் பதற்றத்துடன் தேடலை விரைவுப்படுத்தினேன். சுபாஷ் சந்திரனைத் தொடர்பு கொண்டான். சந்திரன் சுரேஷை அலுத்துக்கொண்டான். அலுவலகத்தின் ஒரு தளம் முழுக்க சுற்றிக்கொண்டிருந்த பேனா ஒரு வாரத்திற்குப் பிறகு கைக்கு வந்தது. ஒரு நீண்ட பிரிவுக்குப் பிறகு அண்ணனும் தம்பியும் கசிந்த கண்களோடு ஒன்றுசேர்ந்தார்கள். இரவல் பேனாக்களில் சில செண்ட்டிமெண்ட்டை மூடியாகக் கொண்டவை. உரியவர்களிடம் கட்டாயம் திருப்பிக்கொடுத்தேயாக வேண்டும்.
…….
காலத்தால் பின்தங்கிய ஒரு ஷாப்பிங் மால். அங்குள்ள ஒரு திறந்தவெளி ரெஸ்டாரெண்ட்டில் நாங்கள் அரட்டையடித்துக்கொண்டிருந்தோம். ’ஒரு நிமிஷம் பேனா கொடுங்க’, அருகே வந்து கேட்டார் ஒரு நடுத்தர வயதுக்காரர். அவர் அங்குள்ள ஒரு கடையில் வேலைபார்ப்பவர் என்பது புரிந்தது. பேனாவைக் கொடுத்துவிட்டு பேச்சைத் தொடர்ந்தோம். சில நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் வந்தவர், எங்களது மேஜை மீது பேனாவைத் தூக்கிப்போட்டுவிட்டு நடையைக் கட்டினார். பேனாவைக் கொடுத்த நண்பன் கடுப்பாகிவிட்டான். ‘நான் உங்களுக்கு எப்படி கொடுத்தேன். அதே மாதிரி நீங்களும் கொடுக்கணும்ல? பேனாவை அப்படியே எறிஞ்சுட்டு போறீங்க?’ என்று தாடையை இறுக்கிக்கொண்டு கேட்டான். பேனா வாங்கியவர் எங்களைத் திட்டமிட்டு அவமதிக்கவில்லை. வருடக்கணக்காக அவர் வளர்த்துவந்த ஒருவித அலட்சியம் எங்கள் மீதும் பாய்ந்திருக்கிறது. அவர் ஓரிரண்டு வார்த்தைகளில் வருத்தம் தெரிவித்து பிரச்னையை ஒரே நொடியில் முடித்திருக்கலாம். அதற்கு மாறாக மிரட்டலும் அறிவுரையும் கலந்து நிறைய பேசினார். வாக்குவாதம் பத்து நிமிடங்கள் தொடர்ந்திருக்கும். வழுக்குமரத்தில் ஏறிச் சறுக்கிய அனுபவம்தான் எங்களுக்குக் கிடைத்தது. பாத்திரமறிந்து பிச்சையிடலாம். பேனா கொடுக்க முடியுமா?
…..

மாணவர்கள் ‘பாய்ஸ்’ என்றும் மாணவிகள் ‘கேர்ள்ஸ்’ என்றும் அழைக்கப்பட்ட ஒரு பள்ளிக்கூடம் அது. தாங்கள் மட்டுமே மாணவ, மாணவிகளைப் பெயர் சொல்லி அழைக்க முடிகிற சூழல் ஆசிரியர்களுக்கு உறுத்தவே இல்லை. அனைத்திலும் மாணவிகளோடு போட்டி போட வேண்டும் என்ற மனநிலையில் நாங்கள் இருந்தோம். படிப்பு மட்டும் விதிவிலக்கு. வெளியூரிலிருந்து வந்த கோமதி ஏழாம் வகுப்பில் எங்களோடு சேர்ந்துகொண்டாள். அம்மன் படங்களில் வருகிற கதாநாயகச் சிறுமிகளின் முதிர்ச்சியோடும் கம்பீரத்தோடும் அவள் பள்ளி வளாகத்தை வலம் வருவாள். பாய்ஸ் –கேர்ள்ஸ் கூத்து அவளுக்குப் புரியவில்லை. அசோக்கை அசோக் என்றும் ஆவுடையப்பனை ஆவுடையப்பன் என்றுமே அவளால் சொல்ல முடிந்தது. வியப்புக்குரிய அவள் அதனாலேயே எங்கள் எதிரி ஆனாள். ஒருமுறை வாகை மரத்தடியில் நாங்கள் படித்துக்கொண்டிருந்தபோது, என் பெயர் சொல்லி அழைத்தபடி கோமதி அருகே வந்தாள். ’பேனா கொடுக்குறியா? எழுதிட்டு தர்றேன்’ என்று கேட்ட அவளை என்னால் ஏறெடுத்துக்கூட பார்க்க முடியவில்லை. அருகே உட்கார்ந்திருந்த குருசாமி என்னை எகத்தாளமாகப் பார்த்தான். நான் பாக்ஸிலிருந்து தயக்கத்துடன் பேனாவை எடுத்துக்கொடுத்தேன். எழுதிமுடித்துவிட்டு, ‘தேங்க்ஸ்’ என்று புன்னகைத்துக்கொண்டே பேனாவைக் கொடுத்துவிட்டு போனாள். ’கேர்ள்ஸ் வாங்குன பேனா நமக்கு எதுக்கு? அதை உடைச்சிருல’ என்று மரண தண்டனைத் தீர்ப்பு எழுதிய நீதிபதி போல சொன்னான் குருசாமி. நானோ ஒரே நிமிடத்தில் வில்லன் கேரக்டரிலிருந்து குணச்சித்திரத்துக்கு மாறியிருந்தேன். ‘எங்கம்மா ஏசுவாங்கடா’ என்றபடி பேனாவை பாக்ஸில் வைத்தேன். முக்கியமாக கோமதியை அவமதிக்க நான் தயாராக இல்லை. பல்வேறு இடங்களில் ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையே எழும்பி நிற்கிற அபத்த சுவர்களை இன்றுவரை பார்த்துக்கொண்டே இருக்கிறேன். கோமதி கேட்டு வாங்கிய பேனா என் சுவரில் முதல் கீறல் போட்டது.

குதிரையுடைமை

ஒரு பிற்பகலில் போக்குவரத்து சற்று நெகிழ்ந்துள்ள

மேம்பாலத்தை அவன் குதிரை மூலமாகக் கடக்கிறான்.

வீட்டை நெருங்கும் கால்களுக்கு வசப்படும் நிதானத்தில்

அவனும் குதிரையும் பிணைக்கப்பட்டிருந்தார்கள்.

வாகனங்கள் பெருக்கும் ஓசைகளால்

குளம்பொலியின் லயத்தைத் தீண்ட இயலவில்லை.

அவன் சேணமாக்கி அமர்வதற்கு

பழைய வெள்ளை நிறத் துணி. ஒன்று போதுமானதாக இருக்கிறது.

ஒரு மாதத் தாடியோடு உள்ள அவனுடைய

முகம் சற்று கலங்கியுள்ளது.

மாலைக்கான தேநீரை அவன் பருகியிருப்பானா?

தேநீரோடு புகையும் அவனுக்குத் தேவைப்படுமா?

குடிப்பழக்கம் கொண்டவனா?

அன்றாடச் செலவுக்குத் தேவைப்படும் பணம் அவனிடம் இருக்குமா?

அவன் திருமணம் ஆனவனா?

குதிரைக்கு அவன் வைத்த பெயர் என்னவாக இருக்கும்?

அவனது குதிரை முன்னெடுத்துச் செல்ல ஊர்வலங்கள் அடிக்கடி வாய்க்குமா?

பரபரப்பும் செல்வச் செழிப்புமாக ஓடிக்கொண்டேயிருக்கும்

பந்தயக்குதிரைகளில் ஒன்றாக அது ஏன் இல்லை?

இம்மாநகரத்தில் குதிரையோடு வசிக்க

அவன் பின்பற்ற வேண்டிய சட்டம் என்ன சொல்கிறது?

பெரும் கனைப்புடன் நடுமுதுகு மண்ணில் பட

குதிரைகள் குப்புற விழும்

திரைப்படக் காட்சிகளின்போது அவன் என்ன நினைப்பான்?

குதிரை ஒன்றின் காலொடித்து

செயற்கைக்கால் பொருத்த வைத்த

அரசியல் பெருந்தகைகளைப் பற்றி முதன்முதலாகப் படித்தபோது,

இவனிடமிருந்து வெளிப்பட்ட சொல் என்னவாக இருக்கும்?

காமத்துக்கும் விடுதலைக்கும் அடையாளமாக வலம்வரும்

ஓர் உயிருடன் நித்தமும் தான் உறவாடுவதை அவன் உணர்ந்திருப்பானா?

இப்படி சில கேள்விகளும் கணிப்புகளும்

அவனைப் பார்த்த மாத்திரத்தில் எழுந்து பின்தொடர முயல்கின்றன.

அத்தனையும் தொடக்கத்திலேயே நொண்டியடித்து நின்றுவிடுவதைப்

பொருட்படுத்தாமல் அவனது பயணம் தொடர்கிறது.

அவன் குதிரை மீது அமர்ந்திருக்கிறான்.

காய்ச்சல் காலம்

பேசிக்கொண்டேயிருக்கும் மகளை
ஏதேனும் ஒரு காய்ச்சல் காலம் வந்து
ஓரிரு நாட்களுக்கு அமைதியில் ஆழ்த்துகிறது.
நள்ளிரவில் வாந்தியெடுப்பதுடன் அவளது
வாதை தொடங்கும்.
முடியாமையிலும் அவள் காட்டும் பிடிவாதத்தை
எப்படி எதிர்கொள்வது?
உறக்கத்தினிடையே அடிக்கடி முணுமுணுக்கிறாள்.
தலை வலிப்பதாகச் சொல்லும் அவளது நெற்றியைத்
தடவிக்கொடுக்கிறோம்.
காய்ச்சலுக்கான சலுகையாக
அவள் எடுத்துக்கொள்ளும் கூடுதல் உரிமைகள்
சில நேரங்களில் எரிச்சல் கொள்ளச் செய்யும்.
நெடுநேர ஓய்வை அலுத்துக்கொண்டு
தொலைக்காட்சி முன் வந்தமர்கிறாள்.
சீக்கிரமே உடலின் அசதியிடம் தோற்றவளாகப்
படுக்கைக்குத் திரும்புகிறாள்.
அரிசிக்கஞ்சி மீது அவள் காட்டும் திடீர் விருப்பத்தைக்
கண்டுகொள்ளாததுபோலவே அவளுடைய
தாய் ஊட்டுகிறாள்.
நீண்ட மழைக்குப் பின் தலைகாட்டும் கதிரவனை ஒத்தது
மகளிடம் திரும்பும் பொலிவு.
பேரன்பின் வெளிப்பாடாக
வறட்டு அறிவுரை, வசை, அடி என
இதுவரை அவள் என்னிடம் பெற்றிருக்கும்
வதைகளையும் கூடவே
நினைவூட்டிச் செல்கிறது,
மிகக் குறுகிய காலமெனினும் இந்தக் காய்ச்சல் காலம்.

 

‘போரைத் தவிர்க்கவே இந்த விளையாட்டு!’-வாழ்வியல் பேசும் மரபுப்பள்ளி

அண்மைக்காலமாகத் திரைப்படம், மரபு மருத்துவம், நலக்கூடல் நிகழ்வுகள், ஊர்சந்தை என செந்தமிழன் மேற்கொள்ளும் பணிகளின்போது, உடன் பயணிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. அவை இன்றைய தமிழ்ச்சமூகத்திற்கு இன்றியமையாத பணிகள் என்பது ஒரு பக்கம். அடிப்படையில் அவருடைய நட்பு எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அவரது சமூகப் பார்வை மற்றவர்களிடமிருந்து வேறுபட்டதாக இருக்கும் என்பதைக் காட்டிலும், மனதுக்கு நெருக்கமானதாக, துணிச்சலானதாக, தொன்மையான தமிழ் மரபிலிருந்து வழுவாததாக இருக்கும். பூக்களையும் காய்கனிகளையும் பார்த்துக் குளிரும் மனங்கள் மண்ணுக்கு அடியில் உள்ள வேரையும் கவனிக்கும் விதத்தில் பல செய்திகளைத் துளியும் ஆர்ப்பாட்டமின்றி முன்வைப்பது அவரது இயல்பு. செம்மை மரபுப்பள்ளியும் அத்தகைய நோக்கம் கொண்ட ஒரு சீரிய முயற்சியே. வாழ்வைச் செம்மைப்படுத்திக்கொள்ளும்வகையில் அங்கும் எனக்குப் பல செய்திகள் கிடைத்து வருகின்றன.
எனக்குச் சிலப்பதிகாரத்தை அறிமுகம் செய்தவர் நான்காம் வகுப்பில் தமிழ்ப்பாடம் நடத்திய காலஞ்சென்ற திரு. பெதலீஸ்(கயத்தாறு) அவர்கள். ஒருமுறை கண்ணகி-கோவலன் கதையை ஒரு விறுவிறுப்பான நாடகம்போல விவரித்தார். அப்போது சிலப்பதிகாரம் எங்களுக்கான பாடத்திட்டத்தில் இல்லையெனினும், அவர் ஓர் ஆர்வத்தில் அதைப் பற்றிக் கூறியிருக்க வேண்டும். பாண்டிய மன்னனின் தவறான முடிவால் கொல்லப்பட்ட கோவலனுக்காகக் கண்ணகி நீதி கேட்கிறாள். ‘அரசியின் சிலம்பு மாணிக்கப்பரல்களைக் கொண்டது. உன் கணவனிடமிருந்து கைப்பற்றப்பட்ட சிலம்பு அரசியினுடையதுதான்’ என்று அரசன் சொல்ல, அவையில் கண்ணகி கொந்தளிக்கிறாள். ‘இதோ, என்னிடமுள்ள மற்றொரு சிலம்பு. இதில் என்ன இருக்கிறது என்று பார்’ என்றபடி அவள் ஒற்றைச்சிலம்பை எடுத்து வீசுகிறாள். தரையில் விழுந்த சிலம்பிலிருந்து முத்துகள் தெறித்து ஓடுகின்றன. அதில் ஒரு முத்து அரசனின் முகத்தை உரசிக்கொண்டு செல்கிறது. எங்களுக்குப் பின்னால் பெரும் ஓசை கேட்கிறது. பெதலீஸ் வீசிய பேப்பர் வெயிட் எங்களைத் தாண்டி விழுந்து, சிமெண்ட் தரையில் உருண்டோடுகிறது. நாங்கள் திடுக்கிட்டுப்போய் கதையிலிருந்து வெளியே வருகிறோம்.
அநீதியின் விளைவையும் கண்ணகியின் சீற்றத்தையும் அந்த வயதுக்கேற்றபடி ஒருவாறு புரிந்துகொண்டோம். சொற்களைத் தாண்டி ஒரு பெருங்கோபத்தை உணர்த்திய மகிழ்ச்சியில் பெதலீஸ் ஒரு குழந்தைபோல சிரிக்கிறார். வகுப்பே அந்தச் சிரிப்பில் இணைந்துகொள்கிறது. அவருடைய வகுப்புகள் பெரும்பாலும் இப்படித்தான் உயிர்ப்போடு இருக்கும். நம் அனைவருக்குமே  படிப்பின் ஏதேனும் ஒரு கட்டத்தில் பெதலீஸ் போல சில  ஆசிரியர்கள் அமைந்திருப்பார்கள். மிகச் சிறுபான்மையினராக இருந்தாலும், இத்தகைய ஆசிரியர்களே மாணவர்களை ஏதேனும் துறையில் ஆர்வம் கொள்ளச் செய்து, நம் கல்வியமைப்பை உயிரோடு வைத்திருக்கிறார்கள். மதிப்பெண் என்ற இலக்கை நோக்கி ஓட வைப்பதில் இவர்களில் பாதி பேருக்கு உடன்பாடு இருக்காது. தமிழோ, அறிவியலோ, கணிதமோ, வரலாறோ அந்தத் துறைக்கும் நடைமுறை வாழ்க்கைக்கும் இடையேயான பிணைப்பை மாணவர்களுக்கு அழகாகப் புரிய வைத்துவிடுவார்கள்.
மொத்தப் படிப்பும் கைவிட்டுவிட்டாலும், அவர்கள் நடத்திய பாடங்கள் மட்டுமே மாணவர்களுக்குக் காலம் முழுதும் கூட வரும். பொருளாதார ரீதியாகக் கைகொடுக்கும். உறுதியாக நெருக்கடிகளின்போது மனதுக்கு நல்ல இளைப்பாறலை வழங்கும். படைப்பாற்றலும் வாழ்க்கைக்கான தேடலும் இரண்டறக் கலந்த அத்தகைய வகுப்புகளே செம்மை மரபுப்பள்ளியில் சுற்றும்போது எனக்கு நினைவுக்கு வரும்.

மழைப்பாட்டு கற்றுத்தரும் செந்தமிழன்
கடந்தாண்டு செந்தமிழன் நடத்திய வரலாறு வகுப்பைப் பற்றிச் சொல்ல வேண்டும். ஒரு விளையாட்டு வடிவத்தில் தான் அந்த வகுப்பு நடத்தப்பட்டது. மாணவர்கள் இரு நாடுகளாகப் பிரிக்கப்பட்டார்கள். இரண்டும் ஒன்றுக்கொன்று பகை நாடுகள். ஒவ்வொரு நாட்டிலும் அரசன், அமைச்சர்கள், வீரர்கள், தூதுவன் ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டார்கள். ஒரு நாட்டின் அரசன் அமைச்சரிடம் ஒரு செய்தியைச் சொல்ல, அந்தச் செய்தி அவரையடுத்து பல அமைச்சர்கள், வீரர்கள் ஆகியோரிடையே பயணித்து, தூதுவனைச் சென்றடையும். அவன் அடுத்த நாட்டுக்கு இதே வரிசையில் செய்தியைக் கொண்டுசெல்ல வேண்டும். இந்தச் செய்திப் பரிமாற்றம் முழுக்க முழுக்க காதோடு காதாகச் சொல்லப்படுவதாகவே இருக்கும்.
‘வாளை எடுத்து ஓரத்தில் வைத்துவிட்டேன்’ என்பதுதான் அந்தச் செய்தி என வைத்துக்கொள்வோம். அடுத்த நாட்டின் தூதுவன், வீரர்கள், அமைச்சர்கள் என கடந்து, இறுதியில் அந்த அரசனை அடையும்போது இது பொருள் மாறாமல் அப்படியே சென்று சேர்கிறதா என்பதுதான் இதில் கவனிக்கப்பட வேண்டியது. ‘ஒவ்வொருவரும் கவனமா செய்தியைக் கேளுங்க. பக்கத்துல இருக்குறவங்களுக்கு அதே கவனத்தோட செய்தியைச் சொல்லுங்க. செய்தி பரிமாற்றத்துல ஏதாவது குழப்பம் நடந்தா போர் ஏற்பட வாய்ப்பு இருக்கு. போரைத் தவிர்க்கத்தான் இந்தச் செய்தியை அந்த அரசன் சொல்லி அனுப்புறாரு…இதை மறந்துடாதீங்க’ என்று அவர்களிடம் அறிவுறுத்தினார். ஆரவாரங்களுக்குப் பிறகு மாணவர்கள் ஒரு நாடாக உருமாறி, அமைச்சராகவும் வீரராகவும் பிரிந்து, செய்திப் பரிமாற்றம் தொடங்கியது. மாணவர்கள் ஆர்வத்தோடும் அவர்களுக்கே உரிய குறும்புகளோடும் செய்தியை உள்வாங்கி, கமுக்கமாகப் பகிர்ந்தார்கள். இறுதியில் எதிரிநாட்டு அரசனிடம் செய்தி சென்றுசேர, விளையாட்டு முடிவுக்கு வந்தது. ‘என்ன செய்தி உனக்கு வந்துச்சு?’ என்று செந்தமிழன் ஆவலுடன் கேட்டார். அரசன் சிரித்துக்கொண்டே ‘வாளெடுத்து வந்துட்டு இருக்கேன்னு அருண் சொன்னான்’ என்றான். நல்ல வேளை, இருவருமே போலி அரசர்கள் என்பதால் போர் வெடிக்காமல் நாடுகள் தப்பின. செய்திப்பரிமாற்றத்தில் நடந்த தவறு சுட்டிக்காட்டப்பட்டதும், மாணவர்களிடையே சிரிப்போசை எழுந்தது.
இருபது பேருக்கு மேற்பட்டவர்கள் பங்கேற்ற செய்திப்பரிமாற்றத்தில் செய்தியை முதலில் மாற்றிச் சொன்னவர் யார் என்ற விசாரணையும் நடத்தப்பட்டது. ’இவன் தான்..அவன் தான்’ என்று மாணவர்களும் முழு ஈடுபாட்டுடன் களத்தில் இறங்கினார்கள். அசட்டுச்சிரிப்போடு ஓர் அமைச்சர் சிக்கினார். ‘நீ ஒரு மாதிரி முழிச்சுட்டு சொன்னப்பவே நான் டவுட் ஆனேன்’ என்று பக்கத்து அமைச்சர் பழியிலிருந்து ஒதுங்க முயன்றார். மாணவர்களோடு, அதுவரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பெற்றோரும் சேர்ந்து சிரித்தார்கள். மாணவர்கள் கொஞ்சமும் கவனச்சிதறல் இன்றி வகுப்பில் இருந்ததைக் கவனிக்க முடிந்தது. இங்கு கற்றுத்தரப்பட்டது வரலாறா, வாழ்வியலா? இந்த விளையாட்டு மூலம் இருபது பேரில் ஐந்து குழந்தைகளாவது சொற்களின் மதிப்பை உணர்ந்திருக்க மாட்டார்களா?
தமிழ், இயற்கையியல் உள்ளிட்ட அனைத்து வகுப்புகளுமே இப்படி சுவாரஸ்யமான விளையாட்டு வடிவத்தில்தான் செம்மை மரபுப்பள்ளியில் கற்றுத்தரப்படுகின்றன. வெறும் தகவல்களின் திரட்டாக அல்லாமல், வாழ்வைப் புரிந்துகொள்ளத் தேவையான செய்தியைப் பாடங்களின் வழியே கொண்டுசேர்ப்பதுதான் மரபுப்பள்ளி வகுப்புகளின் நோக்கமாக இருக்கிறது. அதுவே மரபுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இனிய சவாலாகவும் உள்ளது.
பெருமழையில் தக்கர் பாபா வித்யாலயா வளாகம் பாதிப்புக்குள்ளானதால், மரபுப் பள்ளிக்கு இரு மாதங்கள் விடுமுறை விடப்பட்டது. பள்ளிக்கும் பெற்றோருக்குமிடையே ஓர் இடைவெளி விழுந்தது. கடந்த ஓர் ஆண்டு அனுபவத்தில் மரபுப்பள்ளி குறித்து அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று பெற்றோரின் கருத்துகளை அண்மையில் கேட்டறிந்தோம். அவர்களிடமிருந்து நிறையாகப் பல கருத்துகள் வந்தாலும், சிற்சில குறைகளும் கூறப்பட்டன. எல்லாவற்றையும் கடந்து, மரபுப்பள்ளி மீது அவர்களுக்கிருக்கும் மரியாதையை நன்கு உணர முடிந்தது. ஒவ்வொரு ஊர்ச்சந்தையிலும், ‘மரபுப்பள்ளியை மறுபடி எப்போ தொடங்கப்போறீங்க?’ என்று புதியவர்கள் பலர் ஆவலுடன் கேட்கிறார்கள். வெல்வதை விட வாழ்வதில் அதிக விருப்பம் உள்ள, எந்த நெருக்கடி வந்தாலும் தற்சார்பு வாழ்க்கை மூலம் மீண்டு எழ விரும்புகிற மக்கள் எண்ணிக்கையில் அதிகமாகிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மரபுப்பள்ளி மூலமாக ஒரு புதிய வாழ்வியலுக்குள் நுழைகிறார்கள். அல்லது ஒரு கனவுபோல தொலைந்துபோன வாழ்க்கை முறையை மீட்டெடுக்க முயல்கிறார்கள். இதற்கு ஒரு கருவியாகச் செந்தமிழன் தலைமையிலான மரபுப்பள்ளி குழுவினர் இயங்குகிறோம். அதற்கான விருப்பத்தையும் ஆற்றலையும் இறை எங்களுக்குத் தொடர்ந்து அளிக்க வேண்டுகிறேன்.
புகைப்படம்: பால் கிரிகோரி

 

 

பூரான்களின் வருகை

 

தொடர்மழை அனுப்பிய விருந்தாளிகளாக
வீட்டுக்குள் அடிக்கடி பூரான்கள் தட்டுப்படுகின்றன.
குட்டிக் குட்டியாய் வந்து
எளிதில் சிக்கிக்கொள்ளும் அவற்றை
அவசரத்துக்கு அப்பளம் சுடும் இடுக்கியால்
அப்புறப்படுத்த முயல்கிறேன்.
நகரத்துத் தெருவின் வரம்பைத் தாமதமாக உணர்ந்து,
இடுக்கிமுனையில் துடிக்கும் பூரான் குட்டிகளை
அதே கருணையுடன் செருப்பணிந்த கால்களால்
தரையில் தேய்த்துக் கொல்கிறேன்.
என்னுடலின் ரோமங்கள் சிலிர்த்து அடங்க
நினைவில் ஒரு கணம் ஊர்ந்து மறைகிறது,
எங்கேயோ பார்த்த
அல்லது நான் ஒருபோதும் பார்த்திராத
ஒரு கொழுத்த பூரான்.

இருமுகம்

வெறும் ‘பொற’ தான்.
இரவு முழுதும் காய்ந்த வயிறுடன்
சாலையைக் காவல் காத்த
நாய்களுக்கு அது அன்றைய நாளின் முதல் உணவு.
அவன் போடும் ‘பொற’யை
நாய்கள் கூரான பற்களால்
தூளாக்கி விழுங்குகின்றன.
நேற்றைய இரவின் இருளில்
அவனது இரு சக்கர வாகனத்தைத்தான்
வெறியோடு விரட்டினோம் என்பதை
அவை அறிந்திருக்கவில்லை.
இரவில் அந்நியமும் பகலில் சினேகமுமாய்
இருமுகம் காட்டும் ஒரு வழித்தடத்தின் தேநீர்க்கடையில்
அவனும் அந்த நாய்களும் நிற்கிறார்கள்.

Previous Older Entries