அடடே ஆச்சர்யக்குறி-2

*********

*நாட்டுமருந்துக்கடை என்றால் இளக்காரமாகப் பார்க்கிறோம். நட்ஸ் அண்ட் ஸ்பைஸ் என்று பேர் வைத்தால் வாயைப் பிளக்கிறோம்.

*படம் எப்படி இருக்கு என்பதை விட, படம் ஓடுமா என்பதில் நம்மவர்கள் ஆர்வம் காட்டுவதற்கு உளவியல் காரணம் என்னவாக இருக்கும்?

*டைட்டிலை விட, ஹீரோக்களின் நளினமான நடன அசைவுகளே தெலுங்குப்பட போஸ்டர்களை அடையாளம் காண வைக்கிறது.

*சமீபத்தில் ராயப்பேட்டையில் நடுரோட்டில் சிலரால் விட்டுச்செல்லப்பட்ட ஒரு பூனைக்குட்டியைப் பார்த்தேன். பிறந்து சில நாட்களே ஆன குட்டி. நான் உட்பட ஆறேழு பேர் அதற்காகப் பரிதாபப்பட்டாலும் உடனே செயலில் இறங்கவில்லை. மின்னல் வேகத்தில் ஒரு கார் அதைத் தாண்டிச் சென்றதில், டயரின் ஓரத்தில் பூனையின் கால் பட்டு அடிபட்டுவிட்டது. எங்கள் பக்கம் நின்று வேடிக்கை பார்த்த ஒருவர் சட்டென்று அதை எடுத்து ரோட்டின் ஓரத்தில் பாதுகாப்பாக வைத்தார். அவர் அருகில் உள்ள கம்பெனி ஒன்றில் பணிபுரிபவராகத் தோற்றமளித்தார். அப்புறம் அவரைக் காணவில்லை. நான் புளூ கிராஸ் அமைப்பில் பேசினேன். ’ராயப்பேட்டைதானே? இப்போதான் ஒருத்தர் போன் பண்ணாரு. அவரே எடுத்துட்டு வந்துடுறதா சொல்லிட்டாரு’ என்று புளூ கிராஸில் பேசியவர் சொன்னார். எனக்கு சந்தோஷமாகவும் இருந்தது. சில நொடிகளிலேயே சந்தேகமாகவும் இருந்தது. உண்மையைச் சொல்றாரா? நம்மள சமாதானப்படுத்துறதுக்குப் பொய் சொல்றாரா?

பூனைக்குட்டி இடைவிடாத மியாவ்களால் நியாயம் கேட்டுக்கொண்டிருந்தது. ப்ளூ கிராஸ் வேளச்சேரி செக்போஸ்ட் அருகில் இருக்கிறது. இரவு ஏழரை மணிக்கு ஒரு பூனைக்குட்டியை எடுத்துக்கொண்டு வேளச்சேரி செல்லும் மனநிலை எனக்கு இல்லை. மறுபடியும் புளு கிராஸ் நிர்வாகியிடம் பேசினேன். ‘சாயங்காலம் ஆறு மணிக்கு மேல் நாங்க வர மாட்டோம் சார். ஸ்டாஃப் கிளம்பிட்டாங்க. நாளைக்குக் காலையில்தான் வர முடியும்’ என்று அவர் சொல்ல, ‘ராத்திரி அடிபடுற நாய், பூனைகள் கதி அவ்வளவுதானா?’ என்று அவரிடம் அங்கலாய்க்கத்தான் என்னால் முடிந்தது. ’வேணும்னா, சைதாப்பேட்டையில் உள்ள ஹோமுக்கு எடுத்துட்டுப்போகலாம். அங்கேயும் அவங்க வர மாட்டாங்க’ என்று அவர் சொல்ல, சைதாப்பேட்டை செல்ல மனதளவில் நான் தயாரானேன். அப்போது சில நிமிடங்களுக்கு முன்னால் பூனைக்குட்டியை எடுத்து ரோட்டோரம் வைத்த நபர் மறுபடியும் தென்பட்டார். அவர் கையில் ஒரு பெட்டி. பூனைக்குட்டி அருகில் சென்று அதைப் பெட்டியில் பத்திரப்படுத்த ஆயத்தமானார். அவரது அலுவலக நண்பர்கள் அவருக்கு உதவினார்கள். அவரிடம் கேட்டேன், ‘நீங்கதான் புளு கிராஸ்ல பேசினீங்களா?’ அவர் புன்னகைத்துக்கொண்டே,’ஆமாம். என் வீட்டுக்கு போற வழிதான். அதான் எடுத்துட்டுப் போய் விட்டுறலாம்னு தோணுச்சு’ என்றார். பூனை பயத்தில் பெட்டியை மீறிக்கொண்டு வர, அவரது குழுவினர் செல்லக்கோபத்துடன் பெட்டி மீது செல்லோடேப் ஒட்டினார்கள். பார்ப்பதற்கு சந்தோஷமாக இருந்தது. எனக்கு ஏற்பட்ட குற்றவுணர்ச்சி மெல்ல விலகியது.

வாழ்க்கை மீது அவநம்பிக்கை கொள்ள வழியே இல்லை. வள்ளுவர் எழுதிவைத்தபடி, மழை பெய்து உலகம் உய்வதற்குக் காரணமான நல்லவர்கள் எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறார்கள். அவர்கள் ஃபேஸ்புக்கோ, ப்ளாக்கோ எழுதாமல் இருக்கலாம். நற்செயல்களால் வாழ்க்கையை வாழ்கிறார்கள்.

***********

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: