மானசரோவர் மக்களின் கனவா?

 

”தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது சீன நாட்டில் உள்ள மானசரோவருக்கும் நேபாளத்தில் உள்ள முக்திநாத்துக்கும் புனிதப்பயணம் செல்ல வேண்டும் என்பது பல இந்துக்களின் விருப்பமாக இருந்துவருகிறது’’ என்று சமீபத்தில் சட்ட மன்றத்தில் கூறியுள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. ஒவ்வொரு வருடமும் 250 பேர் மானசரோவர் செல்லவும் 250 பேர் முக்திநாத் செல்லவும் ஆகும் செலவில் ஒரு பகுதியை மானியமாகக் கொடுத்து தமிழக அரசு உதவும் என்றும் அவர் அறிவித்திருக்கிறார்.

இந்தச் செய்தியைக் காலையில் படித்ததிலிருந்தே, மானசரோவருக்கும் முக்திநாத்துக்கும் செல்வதை வாழ்நாள் லட்சியமாக வைத்திருக்கும் இந்துக்கள் யாராவது இருப்பார்களா, அப்படி யாராவது இருந்தால் எத்தனை பேர் இருப்பார்கள் என்று யோசித்துப்பார்க்கிறேன். அறுபது வயதைக் கடக்கும்போது நம்மவர்கள் பலருக்கு காசிக்குப் போக வேண்டும் என்ற உந்துதல் எழும். ஒருமுறையாவது திருப்பதிக்குப் போக வேண்டும் என்ற விருப்பம் இளைய தலைமுறையினர் சிலருக்கே இருப்பதைக் கேட்டிருக்கிறேன்.

நவதிருப்பதி என்றழைக்கப்படுகிற நத்தம், புளியங்குடி, பெருங்குளம், இரட்டை திருப்பதி, தென்திருபேரை, திருக்கோளூர், ஆழ்வார்திருநகரி ஆகிய ஊர்களும் நவக்கிரகத்தலங்கள் என்றழைக்கப்படும் வைத்தீஸ்வரன் கோயில், கஞ்சனூர், திங்களூர், ஆலங்குடி, திருநாகேஸ்வரன், திருநள்ளாறு, மேலப்பெரும்பள்ளம், திருவெண்காடு ஆகிய ஊர்களும் தமிழ்நாட்டிலேயேதான் இருக்கின்றன. ஆரோக்கியம், செல்வம், தொழில், வேலை, திருமணம், ஆயுள் உள்ளிட்ட வாழ்க்கையின் அடிப்படை அம்சங்களோடு இந்துக்கள் ஏதோ ஒரு வகையில் இணைத்துப்பார்க்கிற ஆன்மீகத்தலங்கள் இவை. இங்கெல்லாம் சென்று தரிசிக்க வேண்டும் என்ற ஆசையே பலருக்கு நிறைவேறாத கனவாகவே நீடித்துக்கொண்டிருக்கிறது. அறுபடை வீடுகள் அத்தனைக்கும் சென்று தரிசித்தவர்களைக் கூட விரல் விட்டு எண்ணிவிடலாம். உண்மை நிலைமை இப்படி இருக்கும்போது, எங்கேயோ இருக்கும் மானசரோவருக்கும் முக்திநாத்துக்கும் செல்வதை நம்மூர் இந்துக்கள் ஆன்மீக விருப்பமாக வைத்திருப்பார்களா?

இந்து மதத்தைப் பொறுத்தவரை, வட இந்தியர்களின் கலாச்சாரக்கூறுகள் தமிழர்களும் பின்பற்ற வேண்டியதாக மாற்றப்படுவது புதிதல்ல. மானசரோவர், முக்திநாத் புனிதப்பயணங்களும் அப்படி தமிழர்களின் மனதில் செருகப்பட்ட மத நிகழ்வுகள்தான்.

முஸ்லீம்களுக்கு மெக்கா செல்வது என்பது இஸ்லாமிய மதம் வகுத்த வாழ்க்கை நெறிமுறைகளில் ஒன்று. ஒரு முஸ்லீம் ஹஜ் யாத்திரை மேற்கொள்வதையும் ஓர் இந்து மானசரோவருக்குச் செல்வதையும் ஒன்றாகக் கருத முடியாது. நம்மூர் கிறிஸ்தவர்களுக்குக் கூட ஜெருசலம் செல்வது தணியாத ஆன்மீகத் தாகமாக இருக்குமா என்பது உறுதியாகத் தெரியவில்லை.

தமிழகத்தில் மெத்தப் படித்த, இந்து சமயத்தின் அனைத்து சம்பிரதாயங்களையும் நிறைவேற்றிக்கொள்ளும் அளவுக்கு வசதி படைத்த தரப்பினருக்கு இந்தப் புனிதப்பயணங்கள் ஒரு கனவாக இருக்கலாம். ஆனால் பெரும்பான்மையினரான ஏழை,நடுத்தரக்குடும்பங்களுக்கு மானசரோவரும் முக்திநாத்தும் ஆன்மீகச் செய்திகளுக்கான இடங்கள் மட்டுமே.

இந்நிலையில் மொத்த தமிழக இந்துக்களும் கோரிக்கை மேல் கோரிக்கை அனுப்பியது போல, முதல்வர் ஜெயலலிதா இந்தப் புனிதப்பயணங்களுக்கு மானியம் ஒதுக்கியிருப்பது தேவையில்லாத சாதனையாகப் படுகிறது. அரசின் நிதிநெருக்கடியைத் தன்பங்குக்குக் கொஞ்சம் அதிகரிக்கச் செய்யும் ஒரு வேலைதான்.

பக்தர்கள் அல்லல் படுமளவுக்கு இங்குள்ள கோயில்கள் பலவற்றில் எத்தனையோ குறைகள் இருக்கின்றன. அடிப்படை பூசைகளுக்குக் கூட வசதியற்ற, நலிவுற்ற கோயில்கள் பல உண்டு. இதைச் சரிசெய்யும் நடவடிக்கைகளில் தமிழக அரசு இறங்கியிருந்தால் மக்கள் இன்னும் சந்தோஷப்பட்டிருப்பார்கள். முந்தைய ஆட்சிக்காலத்தில் ஜெயலலிதா தொடங்கிவைத்த அன்னதானத் திட்டம் அப்படிப்பட்ட ஒரு நல்ல நடவடிக்கையே. இந்தத் திட்டத்தால் கோயில்களுக்குப் பக்கத்தில் உள்ள கடைக்காரர்களும் கோயில்களை அண்டிப்பிழைக்கும் நித்திய சோம்பேறிகளுமே பயன்பெறுகிறார்கள் என்று ஆரம்பத்தில் குறைகூறப்பட்டிருக்கலாம். ஆனால் வயிற்றுக்குச் சோறிட வேண்டும் என்று பசியை ஆற்றுவதையே இறைவனை அணுகும் ஒரு செயல்பாடாகக் கருதிய வள்ளலாரின் கோட்பாட்டுக்குப் பக்கத்தில் வருகிற ஒரு திட்டம்தான் அது. நூற்றுக்கு ஐம்பது அறுபது வறியவர்களாவது அன்னதானத்திட்டத்தின் கீழ் பசி ஆற மாட்டார்களா?

இந்த அறிவிப்பால் ஒரே ஒரு நன்மை நடக்கும் என்று நம்புகிறேன். முஸ்லீம்களுக்கு ஹஜ் யாத்திரை செல்ல அரசு தரும் நிதியுதவியை இந்துக்களைப் புறக்கணிக்கும் ஓர வஞ்சனை செயல்பாடாக உள்ளூர் பா.ஜ.க கூட்டங்களில் பேசப்படுவதை முன்பு கேட்டிருக்கிறேன். இனி இந்துக்களுக்கும் இந்தச் சலுகைகள் வழங்கப்படும் என்பதால் மதவாதக் கட்சிகளின் உசுப்பிவிடும் வேலைகளுக்கு வழி இருக்காது!Image

Advertisements

2 Comments (+add yours?)

  1. Raghu
    May 18, 2012 @ 06:11:31

    வாழ்வின் இயல்பான நிகழ்வுகளை அதே இயல்போடு உணர்வுபூர்வமாக பகிர்ந்து கொள்ளும் உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை. சில விஷயங்கள்.. அதை உங்கள் பார்வையில் பார்க்கும் (படிக்கும்) போது நல்ல அனுபவமாக இருக்கிறது.

    Reply

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: