உயிரோடு விளையாடும் ரயில்வே!

விருதுநகர் சாலைப்பட்டியைச் சேர்ந்த பள்ளி மாணவனான மணிகண்டன் சென்னையிலிருந்து விருதுநகருக்கு பொதிகை எக்ஸ்பிரஸில் சென்றுகொண்டிருக்கும்போது படிக்கட்டிலிருந்து தவறி விழுந்து இறந்துவிட்டான். கடந்த வாரம் சில நாளிதழ்களில் வெளியான இந்தச் செய்தியைப் பலர் வழக்கமான ஒரு விபத்துச் செய்தியாகவே கடந்துசென்றிருக்கக் கூடும். செய்தியை முழுவதுமாகப் படித்தவர்கள் இது வெறும் விபத்து மட்டுமல்ல என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

மணிகண்டன் பத்தாம் வகுப்பு விடுமுறையில் இருந்த ஒரு மாணவன். கோடை விடுமுறைக்காக மணிகண்டன், அவனுடைய தாய், தம்பி ஆகியோர் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருக்கிறார்கள். ஊருக்குத் திரும்பும்போது பொதிகை எக்ஸ்பிரஸில் அன்ரிசர்வ்ட் வகுப்பில் அவர்கள் பயணம் செய்தார்கள். கூட்டம் நிரம்பி வழிந்த பொது வகுப்பில் மணிகண்டனின் தாயும் தம்பியும் கம்பார்ட்மெண்டுக்கு உள்ளே இருந்தார்கள். மணிகண்டன் படிக்கட்டில் தொங்கிக்கொண்டிருந்திருக்கிறான். அதிகாலை நேரத்தில் ரயில் சோழவந்தானை நெருங்கியபோது, அந்த விபரீதம் நிகழ்ந்தது. அசதியில் கொஞ்சம் கண்ணசந்துவிட்ட மணிகண்டன் படிக்கட்டிலிருந்து தவறிக் கீழே விழுந்துவிட்டான். அருகில் இருந்தவர்கள் அபாயச்சங்கிலியை இழுத்து, ரயிலை நிறுத்தினார்கள். எந்த பலனும் இல்லை. இருட்டு காரணமாக ரயில்வே போலீசால் மணிகண்டனின் உடலைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அடுத்த நாள் மணிகண்டனின் உடல் கண்டறியப்பட்டது.

பேருந்துகளிலும் மின்சார ரயில்களிலும் நிகழும் படிக்கட்டு மரணங்கள் புதிதல்ல. கவனக்குறைவாகத் தண்டவாளத்தைக் கடக்க முற்பட்டு, விபத்துக்குள்ளாகி உயிரிழப்பவர்களை மாதத்துக்கு ஒரு முறையாவது செய்திகளில் பார்க்கிறோம். இத்தகைய விபத்துக்களில் ஒன்றாக மணிகண்டனின் அகால மரணமும் பட்டியலில் சேர்க்கப்பட்டுவிட்டது. அது சரிதானா? மணிகண்டன் இறந்ததற்கு அவனது கவனக்குறைவு மட்டும்தான் காரணமா?

கோடை விடுமுறைகளிலும் பண்டிகை நாட்களிலும் நம்மூர் ரயில்களில் இடம் கிடைப்பது அதிர்ஷ்டம், காலம், நேரம் எல்லாம் கூடி வந்தால் மட்டுமே நடக்கக் கூடிய விஷயமாகிவிட்டது. குறைந்தபட்சம் இரு மாதங்களுக்கு முன்பு பதிவு செய்தால்தான் ரயிலில் இடம் கிடைக்கும். தனியார் பேருந்துகளில் வசூலிக்கப்படும் கட்டணம் மிரளச் செய்யும். வசதிக்குறைபாடுகளைச் சகித்துக்கொண்டு அரசுப்பேருந்துகளில் போகலாம்தான். ஆனால் சீசன் நாட்களில் அவற்றிலும் தள்ளுமுள்ளுதான். பலர் அரசுப்பேருந்து மீது ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக அதை ஒரு சாய்ஸாகக் கூட எடுத்துக்கொள்வதில்லை. இந்நிலையில் மணிகண்டன் குடும்பம் போன்ற பல குடும்பங்களுக்கு எக்ஸ்பிரஸ் ரயில்களின் பொது வகுப்புப் பெட்டிகள்தான் ஒரே நம்பிக்கை.

பொது வகுப்பில் டிக்கெட் கட்டணம் மிகக் குறைவு. மாலையில் ஏறினால் காலையில் ஊர் போய்ச் சேர்ந்துவிடலாம். சிக்னலுக்காக எங்காவது சற்று அதிக நேரம் நிற்க நேரலாமே தவிர, தேவையில்லாமல் எங்கும் நிற்கப் போவதில்லை. ஒரே பிரச்னை, வாசலிலிருந்து கழிப்பறை வரை நிரம்பியிருக்கிற கூட்டம். அன்ரிசர்வ்ட் கம்பார்ட்மெண்ட்டில் உள்ளே பயணம் செய்வது பொறுமை மட்டுமே தேவைப்படுகிற வேலை. படிக்கட்டில் தொங்கியபடி வெளியே பயணம் செய்வதற்கு ஒரு தனி மனநிலை வேண்டும். துணிச்சல் வேண்டும். அபரிமிதமான தன்னம்பிக்கை வேண்டும். பொது வகுப்பில் நம் மக்கள் அடித்துப் பிடித்துக்கொண்டு பயணம் செய்வதைப் பார்த்தால், இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது, மக்கள் ரயில்களின் சகல பகுதிகளிலும் தொங்கிக்கொண்டு இடம் மாறியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்தான் நினைவுக்கு வரும். இந்த எரிச்சலும் விமர்சனங்களும் எல்லாம் சாதாரண மக்களிடம் கிடையாது. பத்து மணி நேரம் பல்லைக் கடித்துக்கொண்டு பொறுத்துக்கொண்டால் போதும். ஊருக்குப் போய்விடலாம். மற்ற பிரச்னைகளோடு ஒப்பிடும்போது இது பெரிய பிரச்னையாக நம்மவர்களுக்குத் தெரிவதில்லை.

Image

இன்று ரயிலிலிருந்து கீழே விழுந்து பலியாகியுள்ள மணிகண்டனும் அப்படித்தான் நினைத்திருப்பான். 18 வயதுக்கே உரிய நம்பிக்கையும் ஆர்வமும் சென்னையிலிருந்து விருதுநகருக்கு ரயில் படிக்கட்டில் நின்றுகொண்டே போய்விட முடியும் என்ற நம்பிக்கையை அவனுக்குத் தந்திருக்கலாம். பொதுவகுப்புப்பயணம் என்றால் படிக்கட்டில் முப்பது பேர் தன்னோடு தொங்குவார்கள் என்பது பல வருடமாக அவன் பார்த்த ரயில் நிலையக் காட்சியாக இருந்திருக்கக் கூடும். அதில் எப்போதும் ஒளிந்திருக்கும் ஆபத்து மணிகண்டனின் மரணம் மூலம் இப்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

மணிகண்டனின் மரணத்தை ஒரு சாதாரண விபத்தாக ஊடகங்கள் முன்னால் காட்டிக்கொண்டிருக்கும் இந்திய ரயில்வே துறையின் போக்கு அருவருப்பானது. அதிகரித்துக்கொண்டே போகும் பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்யுமளவுக்கு ரயில்கள் இயக்க முடியாமல் இருக்க ரயில்வே துறை வசம் நிர்வாகக் காரணங்கள் பல இருக்கலாம். இரண்டாம் வகுப்பிலும் முதல் வகுப்பிலும் சரியான எண்ணிக்கையில் ஆட்களை ஏற்றிவிட்டு, பொது வகுப்பில் கணக்கிலடங்காத அளவுக்கு பயணிகளை அனுமதிப்பதற்கு ரயில்வே துறை வசம் என்ன நியாயமான காரணம் இருக்குமோ? சென்னையிலிருந்து மற்ற ஊர்களுக்குச் செல்ல சென்னை ரயில் நிலையத்திலும் வழி நெடுக உள்ள ஊர்களைச் சேர்ந்த ரயில் நிலையங்களிலும் பயணிகள் கேட்கக் கேட்க வரைமுறையே இல்லாமல் ஏன் டிக்கெட் கொடுக்க வேண்டும்? பயணிகளிடம் தேவைப்படும்போது அபராதம் விதிக்க ஆயிரம் விதிமுறைகள் வைத்திருக்கும் ரயில்வே துறையிடம், பொது வகுப்பில் இத்தனை பேர்தான் இருக்க வேண்டும் என்ற விதிமுறை எதுவும் கிடையாதா? கணக்கு வழக்கு இன்றி பொது வகுப்பில் ஆட்களை அடைக்க அதற்கான பயணிகள் என்ன ஆடு மாடுகளா? பொது வகுப்பில் இத்தனை சிரமம் இருக்கும் என்று தெரிந்துதானே மக்கள் வருகிறார்கள் என்று ரயில்வே சொன்னால், அது என்ன தனியார் துறையா? தனியார் நிர்வாகங்கள் கூட இவ்வளவு வணிக நோக்கத்துடன் செயல்படாது.

இருநூறு பேருக்கு மட்டுமே இடம் இருக்கும் பொது வகுப்பில் எண்ணூறு பேருக்கு மேல் அனுமதிக்கும் காட்சிகளை வெளிநாட்டு சமூக ஆர்வலர்கள் யாரேனும் பார்க்க நேர்ந்தால், ‘உங்களுக்கு எல்லாம் வல்லரசு ஆகும் ஆசை ஒரு கேடா?’ என்று நம் மீது காறித் துப்பி விடுவார்கள். ரயில்வே நிர்வாகத்தின் உண்மையான கவலை வருமானம்தான், பயணிகளின் பாதுகாப்பல்ல என்பது சமீபத்தில் வெளியான இன்னொரு செய்தி மூலம் புலப்பட்டது. ரயிலிலிருந்து மணிகண்டன் கீழே விழுந்தது குறித்த செய்தி வெளியான அதே நாளிதழில் அடுத்த வாரம் இந்தச் செய்தி வந்திருந்தது. டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்யும் வட இந்தியக் கலாச்சாரம் தமிழகத்திற்கு வந்துவிட்டது என்றும் பலர் டிக்கெட் எடுக்காமல் மூன்றாம் வகுப்பில் பயணம் செய்கிறார்கள் என்றும் ரயில்வே நிர்வாகம் சார்பாக ஒரு அதிகாரி கவலைப்பட்டிருந்தார். பொதுவகுப்பில் விதிமுறைகளே இல்லாமல் பயணிகள் போய்வருவதால் அவர்களுக்கு ஏற்படும் அசௌகர்யங்கள் குறித்து அந்த அதிகாரியின் பேச்சில் சிறு விளக்கம் கூட இல்லை. பொதுவகுப்பின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் கொஞ்சம் குறைகிறது என்பதுதான் ரயில்வே துறையின் ஒரே கவலை.

வழிமுழுக்க ஏறிக்கொண்டே இருக்கும் பயணிகளைக் கண்காணிப்பது சாத்தியம் இல்லை என்று ரயில்வே நிர்வாகம் காரணங்கள் சொல்லலாம். பயணிகள் மீது உண்மையான அக்கறை இருந்தால், காரணங்கள் கண்ணுக்குப் புலப்படும். இத்தனை பேருக்கு மேல் பொது வகுப்பில் பயணம் செய்ய அனுமதிக்க மாட்டோம் என்று ரயில்வே துறை சட்டம் இயற்றினால் கூட தவறு அல்ல. அப்படி ஒரு சட்டம் இருந்தால், மணிகண்டன் சென்னையிலிருந்து ஊருக்குச் செல்ல சில நாட்கள் தாமதமாகியிருக்கும். ஆனால் அவன் உயிருடன் இருந்திருப்பான்.

பின்குறிப்பு:
சக பயணிகளுக்கும் சொல்வதற்கு ஒன்று இருக்கிறது. ரயிலில் பொது வகுப்பில் தங்கள் இடத்தை உறுதிப்படுத்திக்கொள்ள பயணிகளுக்கிடையே நடக்கும் சண்டைகள் சகஜம். அவற்றுக்கு மத்தியில், வெகு நேரம் கால் கடுக்க நின்றுகொண்டிருக்கும் முன்பின் அறியாத பயணிகள் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொள்ள தங்கள் இருக்கையை தற்காலிகமாக விட்டுக்கொடுக்கும் பயணிகளின் மனித நேயப் பண்பும் வெளிப்படும். சில ரயில் பயணங்களில் அதைப் பார்த்திருக்கிறேன். ஒரு சின்ன விட்டுக்கொடுத்தலாக எனக்குத் தெரிந்த அந்தப் பழக்கம் உண்மையில் எவ்வளவு பெரிய உதவி என்பதை மணிகண்டனின் மரணம் மூலம் தெரிந்துகொண்டேன்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: