மரிய இருதயத்தை உங்களுக்குத் தெரியுமா?

மரிய இருதயத்தை உங்களுக்குத் தெரியுமா? கேரம் விளையாட்டில் உலக அளவிலும் தேசிய அளவிலும் பல சாதனைகள் புரிந்த தமிழர். 1995ல் சர்வதேச கேரம் போட்டியில் வென்று உலக சாம்பியன் பட்டத்தை வென்றார். இரட்டையர் பிரிவுக்கான உலக சாம்பியன் பட்டத்தை இரு முறை பெற்றுள்ளார். தேசிய சாம்பியன் பட்டத்தை மட்டும் 9 முறை வென்றுள்ளார். 1996ல் மரிய இருதயத்துக்கு இந்திய் அரசு அர்ஜூனா விருது கொடுத்து கௌரவப்படுத்தியது. இவர் தற்போது சென்னை பெரியமேடு பகுதியில்தான் வசிக்கிறார். இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் துணை மேலாளராகப் பணியாற்றுகிறார். இவரது மனைவி பிலோமினா. மரிய இருதயம்-பிலோமினா தம்பதிக்கு விண்ணொளி, கிறிஸ்டி, லாசர், ஆஸ்டின் என 4 மகன்கள் இருக்கிறார்கள்.

Image

கேரம் விளையாட்டில் தமிழ்நாட்டையும் இந்தியாவையும் பல தருணங்களில் தலைநிமிரச் செய்த மரிய இருதயத்தைப் பற்றி எனக்குக் கடந்த வாரம்தான் தெரியும். நாளிதழில் தற்செயலாக வெளியான ஒரு செய்தியே எனக்கு அவரை அறிமுகம் செய்தது. துரதிர்ஷ்டவசமாக அது ஒரு விபத்துச் செய்தி. மரிய இருதயமும் அவருடைய மனைவி பிலோமினாவும் சென்றுகொண்டிருந்த இரு சக்கரவாகனம் மீது ஒரு குப்பை லாரி மோதிய சம்பவத்தை அந்த்ச் செய்தி பதிவு செய்திருந்தது. அந்த விபத்தில் லாரியின் சக்கரங்களுக்கிடையே கால் நசுங்கி பிலோமினா இறந்துவிட்டார். மரிய இருதயம் சற்று கடுமையான காயங்களோடு அதிசயமாக உயிர் பிழைத்திருக்கிறார். தனது கண் முன்னே மனைவி துடிதுடித்து இறந்ததைப் பார்த்து மரிய இருதயம் கதறி அழுதது சுற்றியுள்ளவர்களைக் கண்கலங்கச் செய்தது. தலைமறைவான லாரி டிரைவரை காவல் துறை தேடி வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சாலை விபத்துச் செய்திகளைப் படிக்கும்போதெல்லாம் உணர முடிகிற பதற்றத்தோடு, இந்தச் செய்தி கூடுதலாக ஒருவித குற்றவுணர்வையும் என்னுள் ஏற்படுத்தியது. ஒரு கோரமான விபத்து மூலமே எனக்கு மரிய இருதயம் பற்றி தெரிந்துகொள்ள முடிந்துள்ளது. மரிய இருதயத்துக்குப் பிந்தைய தலைமுறையினருக்கு மட்டுமல்ல, அவரது வயதை ஒத்தவர்களுக்குக் கூட அவர் ஒரு முக்கியமான விளையாட்டுச் சாதனையாளர் என்பது தெரிந்திருக்குமா என்பது சந்தேகமே. ஒரு முன்னாள் வீரர் ஒரு விபத்தில் தனது மனைவியைப் பறிகொடுப்பதன் மூலமே சக மனிதர்களுக்கு அறிமுகமாக முடிகிறது என்பது ஆரோக்கியமான சூழலா? ’ ஓ நீங்க ஸ்போர்ட்ஸ் பெர்சனா? நல்லா கேரம் விளையாடுவீங்களா?’ என்ற காலம் கடந்த வியப்பை இன்று காவல் நிலையத்திலும் பொது மருத்துவமனையிலும் துக்க வீட்டிலும் மரிய இருதயம் நிச்சயம் எதிர்கொண்டிருப்பார். மனைவியை இழந்த துயரத்துக்குச் சமமாக, நம்மவர்களின் அதீத ஆச்சர்யம் மரிய இருதயத்தைப் புண்படுத்தியிருக்கும் இல்லையா?

ஒருகாலத்தில் பல்வேறு விளையாட்டுக்களில் வியத்தகு சாதனைகள் படைத்துவிட்டு இன்று புகழ் வெளிச்சம் சிறிதும் இன்றி மௌனமாக நடமாடிக்கொண்டிருக்கும் விளையாட்டு வீரர்கள் மரிய இருதயத்தைப் போல இன்னும் எத்தனை பேரோ? இன்று இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்று, விளையாடிய பத்து மேட்ச்களில் ஏதேனும் ஒரே ஒரு மேட்ச்சில் அரை சதம் அடித்து, விஐபியாக கொண்டாடப்படுகிற வீரர்களுக்குக் கொடுக்கும் மரியாதையில் கால்வாசியாவது மரிய இருதயம் போன்றவர்களுக்கு நாம் அளித்திருக்கிறோமா? கேரம் போன்ற விளையாட்டுக்கள் கிரிக்கெட்டுக்குச் சமமான வணிக ரீதியாக லாபம் தரும் விளையாட்டு இல்லை என்பதால் ஊடகங்கள் இவர்களை சுலபமாக மறந்துவிடுகின்றன. அரசும் அதே தவறைச் செய்வதுதான் கொடுமை. மரிய இருதயம் போன்ற விளையாட்டுச் சாதனையாளர்கள் குறித்த தகவல்கள் மத்திய, மாநில அரசுகள் வெளியிடும் நம் பாடப்புத்தகங்களில் இடம் பெற்றிருக்க வேண்டாமா? இவர்களுக்கு அர்ஜூனா விருது வழங்குவதோடு, இவர்கள் குறித்து இளைய தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்துவதன் மூலமும்தானே இத்தகைய விளையாட்டுக்கள் நம்மூரில் வளர்ச்சி அடைய முடியும்?

மரிய இருதயம் நல்ல வேலையில் இருப்பது மட்டுமே இந்தச் சோக செய்தியில் சின்ன ஆறுதலான விஷயம்.

மரிய இருதயத்தின் மனைவியின் உயிரைப் பறித்த சாலை விபத்து புரசைவாக்கம் தானா தெருவில் நடந்திருக்கிறது. அதே சாலையில் நானும் என் குடும்பத்துடன் முன்னாலோ பின்னாலோ குப்பை லாரிகளோ தண்ணீர் லாரிகளோ செல்ல சென்றிருக்கிறேன். வாகனங்களின் கண்மூடித்தனமான பெருக்கம் நிறைந்த நம் நகரங்களில் வாகனம் ஓட்டுபவர்களின் வாழ்க்கையை யார் யாரோ தீர்மானிக்கிறார்கள். வெறும் அதிர்ஷ்டத்தால் மட்டுமே நாம் ஜீவித்துக்கொண்டிருக்கிறோம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: