கிறிஸ்துமஸ் தாத்தாவைத் தேடி

நேற்று நான் அலுவலகத்திலிருந்து வீட்டிற்குச் சென்றபோது இரவு 10 மணி இருக்கும். நான் எதிர்பார்த்தபடியே என் மகள் ஆதிரா தூங்கியிருக்கவில்லை. (நான் தான் என்னை மாதிரியே ஒரு ராக்கோழியா அவளயும் பழக்கி வச்சிருக்கேனே.) அரையாண்டுத்தேர்வு விடுமுறையில் ஒரு வாரம் வீட்டில் கும்மாளம் போட்டுவிட்டு அவள் நேற்று பள்ளிக்குப் போய் வந்திருந்தாள். நான் வந்தவுடனேயே சொல்லியாக வேண்டும் என்று காத்திருந்திருப்பாள் போல. நாற்காலியில் ஏறி என் கழுத்தைக் கட்டிக்கொண்டு காதோடு வந்து, ‘டாடி, உங்ககிட்ட ஒண்ணு கேட்கணும். மாட்டேனு சொல்லக்கூடாது’ என்றாள். நிச்சயம் உடனடியாக என்னால் நிறைவேற்ற முடியாத ஒன்றைக் கேட்பதுதான் அவளது வழக்கம். அல்லது நான் அவளது கோரிக்கைகளை அப்படி புரிந்துகொண்டிருக்கிறேனோ என்னவோ. என்னைப் பின்தொடர்ந்துகொண்டே வந்தவளிடம் ‘கொஞ்சம் இருடா’ என்றபடியே முகம் கழுவிவிட்டு, உடை மாற்றிக்கொண்டு நிதானமாக அவள் அருகே உட்கார்ந்தேன். இதற்கெல்லாம் சம்பந்தமே படாதவள் போல என் மனைவி ப்ரியா ஹாலில் ஏதோ வேலையாக இருந்தாள். முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு ஆதிரா கேட்டது இதுதான், ’டாடி, எனக்கு கிறிஸ்துமஸ் தாத்தாகிட்டருந்து கிப்ட் வேணும்!’

எனக்கு சிரிப்புதான் வந்தது. வீட்டில் கொண்டாடக்கூடிய பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைகளுக்குக் கூட அவள் எதுவும் கேட்டதில்லை. பனிக்காலமும் பல வண்ணங்களில் தொங்கும் நட்சத்திரங்களும் அங்கங்கே கடைகளில் முளைக்கும் கிறிஸ்துமஸ் மரங்களுமாய் எல்லோரையும் ஈர்க்கக்கூடிய இந்தக் கொண்டாட்டம் இவளையும் ஈர்த்திருக்கிறது. யாராவது இவள் முன்னால் அதுபற்றி பேசியிருக்கலாம்.

‘டேய், கிறிஸ்துமஸ் முடிஞ்சு எத்தனை நாளாச்சு. இப்ப போய் கிப்ட் கேட்குற?’ என்றேன். அவள் பிடிவாதம் தொடர்ந்தது. ‘க்ளாஸ்ல உன் ஃப்ரண்ட்ஸ் யாராவது கிறிஸ்துமஸ் தாத்தாகிட்ட கிப்ட் வாங்கிருக்காங்களா?’ என்று கேட்டேன். இல்லை என்பதுபோல ஆதிரா தலையை அசைத்தாள். ’யாருமே வாங்கலைல. நீ மட்டும் கிறிஸ்துமஸ் தாத்தாகிட்ட ஏன் கிப்ட் வாங்கணும்?’ என்று அபத்தமாக, அநியாயமாக ஒரு வாதத்தை வைத்தேன்.

பதிலுக்கு ஆதிரா ‘நான் வாங்குனா எல்லார்கிட்டயும் பெருமையா சொல்லலாம்ல’ என்றாள். ஏதோ எனக்குச் சம வயதினரிடம் ஜோக் அடிப்பதுபோல, ‘கிறிஸ்துமஸ் தாத்தால்லாம் போயாச்சு. இனி நான் தான் தாத்தா வேஷம் போட்டுக்கிட்டு உனக்குப் பரிசு கொடுக்கணும்’ என்றேன். அவளுக்கும் சிரிப்பு வந்திருக்க வேண்டும். கோபத்தில் இருப்பவர்கள் சிரிக்கக் கூடாது என்ற உலக நியதியின்படி சிரிப்பை அடக்கிக்கொண்டு முகத்தை உம்மென்றே வைத்துக்கொண்டாள் ஆதிரா. ப்ரியா இதில் பட்டுக்கொள்ளாமல் இருந்ததன் காரணம் எனக்கு அப்போதுதான் புரிந்தது. அவள் இந்த விஷயத்தில் ஆதிராவிடம் அயர்ச்சி அடைந்திருப்பாள்போல.

கிறிஸ்துமஸுக்குச் சில நாட்களுக்கு முன்னால் வில்லிவாக்கத்துக்குச் சென்றிருந்தபோது அங்கே ஒரு கிறிஸ்துமஸ் தாத்தா இவளுக்கு வாழ்த்து சொல்லி சாக்லெட் கொடுத்தது நினைவுக்கு வந்தது. ‘நீதான் ஏற்கனவே கிறிஸ்துமஸ் தாத்தா கையால சாக்லேட் வாங்கிட்டியே’ என்ற கணக்கில் அதை ஆதிராவுக்கு நினைவுப்படுத்தினேன். ‘போங்க டாடி, அவரு கிறிஸ்துமஸ் தாத்தாவே இல்ல’ என்றாள். அவர் வெள்ளைக் கையுறை அணியவில்லையாம். அதனால் அவர் கிறிஸ்துமஸ் தாத்தா இல்லை. அன்று கிறிஸ்துமஸ் தாத்தா வேஷம் போட்டிருந்த பையன் கையுறை அணியாமல் இருந்ததும், அதை எங்கள் முன்னாலேயே அவனது நண்பர்கள் கிண்டல் செய்ததும் ஞாபகம் வந்தது. இந்தக் குட்டி அதை மறக்காமல் நினைவில் வைத்திருக்கிறாள்.

அதுவரை சலிப்புடன் என் மகளைச் சமாளித்துக்கொண்டிருந்த எனக்கு இப்போதுதான் இந்த விஷயத்தில் ஆர்வம் பிறந்தது. ‘சில கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் க்ளவுஸ் போடுறதில்லடா’ என்றேன். ஆதிரா அதை நம்பவே இல்லை. இதைத் தொடர்ந்து பத்து நிமிடங்கள் எங்களுக்குள் நடந்த பேச்சுவார்த்தையில் ஆதிராவுக்கு கிறிஸ்துமஸ் தாத்தா பரிசு அளிக்க வேண்டியதில்லை, நானே கிறிஸ்துமஸ் கிப்ட் வாங்கிக்கொடுப்பது என்று முடிவானது. அந்தப் பரிசையும் இரண்டு நாட்களுக்குப் பிறகு எனக்கு வசதியான சமயத்தில்தான் வாங்கிக்கொடுப்பேன் என்ற என் நிபந்தனையையும் அவள் ஏற்றுக்கொண்டாள். என் நல்ல நேரம்!

சிறிது நேரம் ஆதிராவோடு உட்கார்ந்து யூ ட்யூபில் சில வீடியோக்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். கிறிஸ்துமஸ் தாத்தாக்களை ஆதிராவுக்குக் காட்ட வேண்டும் என்று தோன்றியது. இதைச் சொன்னவுடன், அவளே ‘christmas’ என்று கீ போர்டில் எழுத்துக்களைத் தேடிப்பிடித்து டைப் செய்தாள்.

முதலில் வந்த வீடியோவில் கேரளாவில் ஏதோ ஒரு காயலில் படகுப்பயணம் செய்யும் கிறிஸ்துமஸ் தாத்தா. இரவில் மெல்லியதாக ஒளி சிந்தும் விளக்கை ஒருவர் கையில் ஏந்திக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார். அவரோடு மூன்று பேர் ஆரவாரம் இல்லாமல் கிறிஸ்துமஸ் பாடல்கள் பாடிக்கொண்டிருக்கிறார்கள். கிறிஸ்துமஸ் தாத்தா மட்டும் படகை அதிர வைக்காமல் மென்மையாக ஆடுகிறார். இப்படி ஒரு சாண்டா க்ளாஸை நான் எதிர்பார்க்கவில்லை. அது ஒருவரின் தியானத்தைப் பார்ப்பது போலிருந்தது. ‘ஆமால்ல…இந்த கிறிஸ்துமஸ் தாத்தா க்ளவுஸ் போட்டிருக்கார்ல’ என்று நான் சுட்டிக்காட்டியதற்கு ஆதிரா தலையை மட்டும் ஆட்டி ஆமோதித்தாள். அவள் கவனமெல்லாம் வீடியோவில்தான் இருந்தது.

அடுத்த வீடியோவுக்குத் தாவினோம். சென்னையில் உள்ள ஏதோ ஒரு இடம். ஏறக்குறைய ஆறு கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் மேடையில் ஆடுகிறார்கள். உற்சாகம் கூடிய கிறிஸ்துமஸ் பாடலும் நம்மூர் சினிமா பாடல்களும் கலந்த இசை. ‘டாடி மம்மி…வீட்டில் இல்ல…தடை போட யாரும் இல்லை’ பாடலின் பின்னணி இசையும் இடையே ஒலித்தது. நம்மூர் சினிமாவின் அதிவேகமான பாடல்களுக்கு ஆடினாலும், கிறிஸ்துமஸ் தாத்தாக்களின் ஸ்டெப்கள் முகம் சுளிக்க வைக்கக்கூடியதாக இல்லை. கடைசியில் ஒரு தாத்தா தடுக்கி விழ, ‘இதுக்குத்தான் எதையுமே ப்ளான் பண்ணிப் பண்ணணும்’ என்ற வடிவேலுவின் வசனத்தோடு ஆட்டம் முடிந்தது. லேப் டாப் ஸ்க்ரீன் வெளிச்சத்தில் ஆதிரா முகத்தில் புன்னகையைப் பார்க்க முடிந்தது.

அடுத்து ஒரு கிறிஸ்துமஸ் தாத்தா சாலையோரம் நடந்துகொண்டே ஆடுகிறார். ஒரு பூங்காவின் ஊஞ்சலில் உட்கார்ந்து நமக்கு வேடிக்கை காட்டுகிறார். சொகுசாக அலங்கரிக்கப்பட்ட ஒரு படகின் முனையில் நின்று ஒரு மாலுமிக்கு இணையாக ஃபீல் பண்ணுகிறார். முகத்தில் அணிந்திருந்த தாத்தா முகமூடி அவருக்கு ஒருவித தைரியத்தைக் கொடுத்திருக்க வேண்டும். அவருடைய நடவடிக்கைகளில் ஒரு பவர் ஸ்டார் ஆர்வக்கோளாறு தெரிந்தது.

அடுத்த வீடியோ சாண்டா க்ளாஸ் ப்ரேக் டான்ஸ் என்றிந்தது. அதில் ஒரு கிறிஸ்துமஸ் தாத்தா டெட்ராய்ட் நகர வீதிகளில் பகலில் செமத்தியாக ஒரு ஆட்டம் போடுகிறார். கௌதம் மேனன் படங்களில் ஹீரோ – ஹீரோயினுக்குப் பின்னாலேயே வந்து வெறித்தனமாக ஆடி, கடைசியில் நடுச்சாலையில் தலைகீழாக நின்று சுழன்று முடிப்பார்களே அந்த வகை ஆட்டம்.  கிறிஸ்துமஸ் தாத்தாக்களுக்கே உரிய முதுமை கலந்த ஆடலின் இலக்கணத்தை உடைத்தெறிய வேண்டும் என்ற ஒரு வேகம் தாத்தாவிடம் பார்க்க முடிந்தது. அவ்வளவு வேகமாக ஆடினாலும் முகமூடியோ, பொய்த்தாடியோ செயற்கைத்தொப்பையோ கழன்று தரையில் விழாமல், இருந்தது ஆச்சர்யம்தான். ஆதிராவுக்கு இந்தத் தாத்தாவை ரொம்ப பிடித்திருந்தது.

மணி 12 ஆகிவிட்டது திடீரென என் மண்டையில் உறைத்தது. ’இன்னிக்குப் போதும் ஆதி.  தூங்கப்போவோம். இல்லைனா ஸ்கூலுக்கு நாளை லேட்டாகிரும்’ என்றேன். லேப் டாப்பிலிருந்து விடுபட்டாலும் நாங்கள் உறங்க அரை மணி நேரம் ஆனது.

பள்ளிக்கூடத்துக்கும் வீட்டுக்குமாக மட்டுமே பெரும்பாலும் பயணப்பட்டுக்கொண்டிருக்கும் ஆதிரா வெளியே ஓடி ஆடி விளையாடும் தருணங்களில் என் மனதில் ஒருவித நிறைவு கிடைக்கும். அதே போன்ற ஒரு நிறைவு எனக்கு கிறிஸ்துமஸ் தாத்தாக்களின் வீடியோ தேடல்களிலும் கிடைத்தது. அலுவலகத்திலிருந்து வரும்போது அன்று வீட்டில் உட்கார்ந்து இணைய தளத்தில் கிறிஸ்துமஸ் தாத்தாக்களைத் தேடுவேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

ஆதிராவின் நேரம்காலம் தெரியாத பிடிவாதம்தான் தொடக்கம். அது ஒரு சின்ன, அழகான அனுபவத்தை எனக்கும் சேர்த்து கொடுத்திருக்கிறது. அன்றாட வாழ்க்கையில் திடீர் திடீரென வளைவுகளில் திரும்பி, சுவாரஸ்யமான பாதைகளில் செல்ல குழந்தைகள் நம் கைகளைப் பிடித்து இழுத்துக்கொண்டே இருக்கிறார்கள். நாம்தான் அதை ஒத்திவைத்துக்கொண்டே இருக்கிறோமோ?

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: