கூட்டத்தைப் பார்த்து பயப்படக் கூடாது!

ஒரு அப்பாவும் மகளும் பூங்காவுக்குப் போனார்கள். ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் என்பதால் பூங்காவில் நிறைய கூட்டம். அங்கே சாய்வான சறுக்குப்பலகை, சுருளாக வளைந்த சறுக்கு, ஊஞ்சல், சீசா போன்றவற்றைப் பார்த்ததும் மகள் வழக்கம்போல உற்சாகம் அடைந்தாள். மகளின் மகிழ்ச்சியைப் பார்த்து அப்பாவுக்கும் உற்சாகம் கூடியது.

முதலில் ஓர் ஊஞ்சலை நோக்கி மகள் அவரை இழுத்துச் சென்றாள். ஊஞ்சலில் ஏற்கனவே ஒரு பையன் ஆடிக்கொண்டிருந்தான். அவனுடைய அப்பா ஊஞ்சலை அவ்வப்போது தள்ளி விட்டார். இன்னொரு பையன் வேறு காத்திருந்தான். இந்த அப்பாவும் மகளும் புதிதாகப் போய் நின்றார்கள். சில நிமிடங்கள் போயிருக்கும். ஏற்கனவே ஆடிக்கொண்டிருந்த பையன் ஊஞ்சலை விட்டு இறங்குவதாகத் தெரியவில்லை. அவனுடைய அப்பா ‘இறங்கிடுறியா…இறங்கிடுறியா?’ என்று வெகு நேரமாகக் கேட்டுக்கொண்டிருந்தாரே தவிர, மகனை இறக்கி விடவில்லை. ‘சீசா விளையாடப் போலாம்ப்பா’ என்றாள் மகள். அவளுக்கு ஓரளவுக்கு மேல் காத்திருக்கப் பிடிக்கவில்லை என்பது அப்பாவுக்குப் புரிந்தது. ஆனால் ஊஞ்சலோ, சீசாவோ எதற்குமே அன்று காத்திருந்துதான் விளையாட முடியும் என்பது அவருக்குத் தெரியும். மகளைச் சமாதானப்படுத்தி, தொடர்ந்து அங்கேயே நின்றார். எப்படியோ அந்தப் பையன் பெரிய மனசு பண்ணி இறங்கினான். ஊஞ்சலில் இரண்டாவதாக ஏறிய பையன் ரொம்ப நேரம் எடுத்துக்கொள்ளவில்லை. தங்களது முறை வந்ததும் அப்பா மகளை ஊஞ்சலில் ஏற்றி விட்டார். ஊஞ்சல் அதிக உயரத்துக்குச் செல்லும்படி ஆட்டிவிட்டார். மகள் முகத்தில் மகிழ்ச்சி.

அடுத்ததாக சுருளாக வளைந்த சறுக்கை நோக்கி மகள் நகர்ந்தாள். ஏற்கனவே ஐந்தாறு குழந்தைகள் வரிசையில் காத்திருந்தார்கள். அப்பா மகளின் செருப்புகளை வாங்கி வைத்துக்கொண்டார். மகள் வரிசையில் போய் நின்றாள். அங்கே நின்றாலும் அவள் சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டே இருந்தாள். நான்கு திசைகளிலும் விரிந்து கிடந்த பூங்கா அவளுக்கு ஆர்வம் ஊட்டிக்கொண்டே இருந்திருக்க வேண்டும். சில குழந்தைகள் வரிசையைக் கண்டுகொள்ளாமல் நேரடியாக சறுக்குக்கான படிக்கட்டுகளில் தொற்றி ஏறினார்கள். மகள் தனக்கு முன்னால் நிற்கும் குழந்தையோடு ஒட்டி நிற்காமல், சறுக்கின் உச்சியை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தாள். வரிசையை விட, அதுதானே அவளுக்கு முக்கியம். வரிசையில் விழுந்த இடைவெளியைப் புதிதாக வந்த குழந்தைகள் நிரப்பிக்கொண்டே இருந்தார்கள். மகளுக்குப் பிறகு வந்த பல குழந்தைகள் இப்படி அவளுக்கு முன்னதாக சறுக்கில் இடம் பிடித்தார்கள். வரிசையில் எப்போதும் கடைசி ஆளாகவே மகள் இருந்தாள். சிறிது நேரத்தில் சலித்துக்கொண்டே மகள் கேட்டாள், ‘கூட்டமா இருக்கு. மறுபடியும் ஊஞ்சல்ல விளையாடிட்டு வருவோம்’. அப்பா மறுபடியும் மகளைச் சமாதானப்படுத்தினார். மகள் வரிசையில் மெல்ல முன்னேறி, சறுக்கில் இடம் பிடித்தாள். உச்சிக்குப் போனவுடன் ‘டாடி, இங்கே பாருங்க’ என்றபடி, சறுக்கினாள்.

அடுத்ததாக சீசா பலகையில் விளையாடப் போனார்கள். அங்கேயும் கூட்டம்தான். மகள் கூட்டத்தைப் பார்த்து, ‘வேற இடத்துக்குப் போலாம்ப்பா’ என்பது போல பார்த்தாள். ‘சீசா விளையாடறதுக்குனுதானே வந்திருக்கே. அப்போ சீசா விளையாடிட்டுதான் போகணும்’ என்று அப்பா இந்த முறை கண்டிப்புடன் சொன்னார். கொஞ்சம் காத்திருந்துவிட்டு மகள் சீசாவில் இன்னொரு குழந்தையோடு மகிழ்ச்சியாக விளையாடினாள்.

பூங்கா அடைக்கப்படும் நேரம் வந்ததும் இருவரும் வீட்டுக்குக் கிளம்பினார்கள். மகள் ஆசை தீர விளையாடியதில் அப்பாவுக்குத் திருப்திதான். இருந்தாலும், கூட்டத்தைப் பார்த்து மகள் தயங்குவதும் கவனம் பிசகுவதும் அவருக்கு வருத்தமாக இருந்தது. ‘பார்க்ல எல்லாம் எப்பவும் கூட்டமாதான் இருக்கும். நாம வெயிட் பண்ணாத்தான் விளையாட முடியும். பாதிலயே போய்ட்டா, நாம வெயிட் பண்ணது வேஸ்ட் ஆகிடும்ல. கூட்டத்தைப் பார்த்து பயப்படவும் கூடாது. வேடிக்கை பார்த்து டைவர்ட் ஆகவும் கூடாது’ என்று மகளுக்குச் சொல்ல, மகள் தலையை ஆட்டினாள்.

மறுநாள் அப்பா அலுவலகத்துக்குக் கிளம்பினார். பைக்கில் பெட்ரோல் மிகவும் குறைவாக இருப்பது அவருக்கு ஞாபகம் இருந்தது. வழியில் இருந்த ஒரு பெட்ரோல் பங்கில் பைக்கை நிறுத்தினார். அங்கே வரிசையில் ஐந்து வண்டிகள் நின்றுகொண்டிருந்தன. அப்பா சிறிது நேரம் நின்று பார்த்துவிட்டு, பெட்ரோல் போடாமலேயே கிளம்பிவிட்டார்.

ஏதோ ஒரு நம்பிக்கை. சில முறை இப்படி குறைவான பெட்ரோலுடன் அவர் நினைத்த அளவு தூரம் போயிருக்கிறார். அடுத்த பெட்ரோல் பங்க்கில் போட்டுக்கொள்ளலாம் என்றும் நினைத்தார். ஆனால் அதுவரை போக முடியும் என்ற நம்பிக்கையும் முழுமையாக அவரிடம் இல்லை. அவர் எதிர்பார்த்தபடி ஒருசில நிமிடங்களிலேயே பைக் நின்றுவிட்டது. பைக் நின்ற இடம் அப்பாவை மலைக்க வைத்தது. ஏற்கனவே கடந்து வந்த பங்க்கும் இப்போது பக்கத்தில் இல்லை. இவர் அடுத்த இலக்காக நினைத்த பங்க்கும் பக்கத்தில் இல்லை. பெட்ரோலுக்காக ரொம்ப தூரம் போக வேண்டும்.

அப்பா பைக்கிலிருந்து இறங்கித் தள்ள ஆரம்பித்தார். ‘கூட்டத்தைப் பார்த்து பயப்படவும் கூடாது. வேடிக்கை பார்த்து டைவர்ட் ஆகவும் கூடாது’ என்று மகளுக்கு பூங்காவில் சொன்ன வார்த்தைகள் அவருக்கு ஞாபகம் வந்தது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: