ஆஸ்திரேலியால இருக்கேன்டா!

மேற்கு அண்ணா நகரில் உள்ள ஒரு டீக்கடை. அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் முன்னால் அங்கே ஒரு பத்து நிமிஷம் நின்று ஒரு டீ குடித்துவிட்டுப் போனால்தான் எனக்கு நிம்மதி. மரங்கள் சிரிக்கும் சாலை, கடைக்கு வரும் அத்தனை பேருக்கும் தஞ்சம் தருகிற அழகான கூரை, கடையோடு ஒட்டிக்கொண்டு ஏறக்குறைய 100 பத்திரிகைகளின் பிரதிகளையாவது தொங்க விட்டிருக்கும் பெட்டிக்கடையோடு சேர்ந்தாற்போல இருப்பது என அந்த டீக்கடையின் அமைவிடமே வசீகரமானது.

ஒருநாள் அங்கே டீ குடிக்கும்போது, எனக்குப் பக்கத்தில் நின்று அரட்டையடித்துக்கொண்டிருந்த கல்லூரிப்பையன்களில் ஒருவனின் செல்போன் சத்தமிட்டது. போனை எடுத்தவன், ‘ஆஸ்திரேலியா. ஆஸ்திரேலியா. ஆஸ்திரேலியா மச்சான். அங்கேதான் இருக்கேன்’ என்று சத்தமாகச் சொன்னான். போனில் அழைத்த நண்பன் என்ன சொன்னானோ தெரியவில்லை. மறுபடியும் இவன் ‘ஆஸ்திரேலியால இருக்கேன் டா’ என்றான். பையன் ஆஸ்திரேலியாவுக்குப் பணிக்காகச் சென்றுவிட்டு விடுமுறையில் வந்திருக்கிறான் போல என நினைத்துக்கொண்டேன்.  ஆஸ்திரேலியா பையன் நண்பர்களுடன் தொடர்ந்து பேச்சில் ஈடுபட்டான்.

மறுபடியும் அவனது செல்போன் சத்தமிட்டது. முதலில் அழைத்த பையன் தான் இப்போதும் அழைக்கிறான் என்பது புரிந்தது. ‘சரி, நம்ம வேலையைப் பார்க்கலாம்’ என்று நினைத்தால், ஆஸ்திரேலியா இளைஞனின் ஹை வால்யூம்  பேச்சு என்னை விடுவதாக இல்லை.  இந்த முறையும் நம்மாள் ‘ஆஸ்திரேலியாலதான் மச்சி’ என்று ஆரம்பித்து மேலும் சில வார்த்தைகள் பேசிவிட்டு போனை பேண்ட் பாக்கெட்டுக்குள் போட்டுக்கொண்டான். வெளிநாட்டு வேலையை வைத்து ஒருவரை ஒருவர் கலாய்க்கிறார்களோ என்று இப்போது எனக்கு ஒரு சந்தேகம்.

சிறிது நேரத்தில் மறுபடியும் அதே நண்பனிடமிருந்து போன்.  நம்மாள் அதே சின்சியாரிட்டியுடன் பேசினான், ‘அண்ணா நகர் டிப்போ தாண்டி உள்ள வந்தா, கம்பர் குடியிருப்பை ஒட்டி ஆட்டோ ஸ்டாண்டு. அதுக்குப் பக்கத்துல ஒரு ஆர்ச்சு. அதுக்கு எதிரேதான் ஆஸ்திரேலியா இருக்கு. அங்கேதான் நிக்குறோம். சீக்கிரம் வா.’ நான் நின்றுகொண்டிருக்கும் அந்த டீக்கடையின் பெயர் ஆஸ்திரேலியா என்பது எனக்கு அப்போதுதான் தெரியும்.  இதுக்காடா இவ்வளவு அலப்பறை?

ஆஸ்திரேலியா சிட்டிசன் ரேஞ்சுக்கு உள்ளூர் டீக்கடைக்கு பில்டப் கொடுத்த அந்தப் பையனையும் ஆஸ்திரேலியாவுக்கு வழி தெரியாமல் தட்டுத்தடுமாறி வந்துகொண்டிருக்கும் பையனையும் தேவையே இல்லாமல் காதைக் கொடுத்து குழப்பத்துக்கு ஆளான என்னையும் நினைத்து  மனசுக்குள் சிரிப்பு சோப்புக்குழிழாகக் கிளம்பியது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: