சித்தார் இரவு

நேற்றும் ஒரு தூக்கம் வராத ராத்திரி. மூக்கடைப்பு. இருமல்ன்னு சில காரணங்கள். செல்போனில் எஃப் எம் கேட்க ஆயத்தமானேன். சில சமயங்களில் ஜானி, நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, வறுமையின் நிறம் சிவப்பு என 1980களின் பாடல்கள் மடைவெள்ளம் மாதிரி வரும். அந்த எதிர்பார்ப்பில் ஒவ்வொரு எஃப் எம்மாக மாறிக்கொண்டே இருந்தேன். என்னைக் கொஞ்சம் மாற்றி, உருகுதே மருகுதே, காதல் பிசாசு பருவாயில்லை என நல்ல பாடல்கள்தான். ஆனால் மனம் எதிர்பார்த்த பாடல்கள் இல்லை. (சரி, ஒரு கேள்வி. நூத்துக்கு 30 பேர்தான் ராத்திரி பாட்டு கேட்க எஃப் எம்முக்கு வர்றாங்கன்னு நினைக்குறேன். அந்த 30 பேரும் நிம்மதியா தூங்கிட்டிருக்குற 70 பேரைத் தொந்தரவு பண்ணாம பாட்டு கேட்கணும்னுதான் நினைப்பாங்க. அந்த நேரத்துல எஃப் எம்களுக்கு ’கேளுங்க கேளுங்க’ன்னு ஹை பிட்ச்ல கூச்சல் போட்டு சுய விளம்பரம் அவசியம்தானா?  நடுராத்திரி ஒரு படையெடுப்பை எதிர்கொண்டது மாதிரி இருக்கு. எஃப் எம்கள் இந்த விளம்பரத்தைப் பகல்ல மட்டும் வச்சுக்க கூடாதா?)

யதேச்சையா ஒரு எஃப் எம்ல ‘ஒரு நாள் ஒரு கனவு’ படத்துல ‘காற்றில் வரும் கீதமே’ பாட்டுக்காக கம்போஸிங் சமயத்துல நடந்த  டிஸ்கஷனை ஒலிபரப்புனாங்க. பாட்டுக்கான சிச்சுவேஷனை இளையராஜா வாலிகிட்ட சொல்றாரு. ‘அண்ணே, ஹீரோ வீட்டுக்கு முதன்முதலா அவனோட காதலி வர்றா. உள்ள வந்தவுடனே ஹீரோவோட தங்கச்சி பாட்டு பாடுறா. அடுத்து இன்னொரு தங்கச்சி பாட்டு பாடுறா. அடுத்து ஹீரோ பாடுறாரு. ஹீரோவோட வீடு காதலிக்கு ரொம்ப பிடிச்சிருது’ என்று சொல்லிவிட்டு, ஹம்மிங்கை பாடுகிறார். அதுக்கு வாலி ‘ஆகா அற்புதம்யா’ என்றுவிட்டு, பெருமாள் பாசுரத்தை நினைவுப்படுத்தும் ஒரு வரியைச் சொல்கிறார். ‘பேசவான்னு வருதுண்ணே. பாட்டுல எப்படி பேச முடியும்? பாடவான்னு வச்சுக்கலாமா?’ என்று தயக்கத்துடன் ராஜா கேட்க, வாலி சிரித்துக்கொண்டே அடுத்து இன்னொரு வரி சொல்கிறார். மேலும் சில மாற்றங்களுக்குப் பிறகு, ‘காற்றில் வரும் கீதமே’ வரி பிறக்கிறது. இந்தப் பாட்டில் ஸ்ரீகாந்த் வீட்டில் உள்ள எல்லோருமே சோனியா அகர்வாலை அடுத்தடுத்து பாடி வரவேற்பதைப் பார்க்கும்போது சிரிப்பாகத்தான் இருக்கும். ஒரு அழகான கற்பனை சில சமயங்களில் விஷுவலாகப் பார்க்கும்போது மயிரிழையில் கேலியாகி விடுகிறது. இளையராஜாவுக்கும் வாலிக்குமான கம்போஸிங் நேர உரையாடலைப் பார்க்கும்போது அந்தப் பாட்டின் மேல் கொஞ்சம் மரியாதை கூடியது.
தொடர்ந்து எஃப் எம்மை மாற்றிக்கொண்டே இருந்தேன். எந்த பாடலிலும் மனசு ஒட்டலை. ஆஃப் பண்ணிட்டு தூங்கவும் முடியல. ஒரு எஃப் எம்ல நீரோடை ஓடுறது மாதிரி சித்தாரும் தபேலாவும் இணைந்த இசை. தூர்தர்ஷன் மாநில மொழித் திரைப்படங்கள் காலகட்டத்துல ஒரு வட இந்திய கிராமத்தையோ, காலைப்பொழுதையோ காட்டுறப்போ, ஒரு இசையை எடுத்து விடுவாங்களே அதே இசை. இந்த மாதிரியான தூய அல்லது க்ளாஸிக்கலான இசையை எல்லாம் தேடித் தேடிக் கேட்கணும்ங்கிறது என்னோட விருப்பம். ஆனா மனம் இன்னும் தயாராகல. இன்னும். ஏதோ கொஞ்சம் நேரம் கேட்பேன். அதுலருக்குற நுட்பங்கள் எல்லாம் புரியாது. ‘இவளின் தனிமை இந்த இரவு தாங்குமோ’ன்னு ஜானகி வாய்ஸ்ல இருக்குற கிசுகிசுப்பும் ’பாடங்கள் பாதைகள் ஆகா’ன்னு மலேசியா வாசுதேவன் காட்டுற ஏக்கமும் ‘அடி ஆத்தி இது எதுக்கு நான் யோசனை பண்ணி பாத்தனேம்மா’ன்னு எஸ்.பி.சைலஜா வெளிப்படுத்துற அறியாமையும்தான் நம்ம மனசுக்கு நெருக்கம்.
நேற்று வேற வழி இல்லாததாலோ, வெறுமையான மன நிலையோ அந்த இரவை சித்தாருக்கு அர்ப்பணிச்சிட்டேன். ஏறக்குறைய ஒரு  மணி நேரத்துக்கு மேல சித்தாரும் தபேலாவும் உற்சாகமா ஒண்ணா பயணிக்குற ஒரு இசை அனுபவம். லேசான கொசுக்கடி,  இடையே சுக்குக்காப்பியும் மிளகுத்தண்ணியும் குடிச்சிருந்ததால கொஞ்சம் திறந்திருந்த நாசி, வெளியே தீவிர அமைதி. இதோட இந்த இசையும் ஓடிட்டே இருந்தது.  என்னை நானே வேடிக்கை பார்க்குற உணர்வு சித்தார் இசையால் இன்னும் தூக்கலாச்சு.
சினிமா பாடல் போட்டாதான் எஃப் எம் கள்ல போணியாகும்ங்கிற நிலைமைல, அந்த எஃப் எம்ல என்ன கணக்குல சித்தார் இசை போடுறாங்கன்னு தெரியல. நடுராத்திரில எத்தனை பேரு சித்தார் இசை கேட்பாங்க? என்னை மாதிரி வேற போக்கிடமும் இல்லாம அந்தப் பக்கம் ஒதுங்குனவங்களை வரவுல வைக்கவே முடியாது. நல்ல தரமான சாப்பாடு எங்காவது குறைவான விலைக்குக் கிடைக்குறப்போ, சந்தோஷத்தோட, அந்த ஹோட்டலைப் பார்த்து ஒரு சின்ன பரிதாப உணர்வும் வருமே. அப்படி ஒரு உணர்வுதான் அந்த எஃப் எம் ஸ்டேஷன் மேலயும் தோணுச்சு.
Advertisements

Aside

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: