விளம்பர வாசகம்

’உணவைச் சமைத்து அன்பைப் பரிமாறு.’ வடபழனி நூறு அடி சாலை வழியே பத்து மணி வெயிலில் வந்துகொண்டிருந்தபோது, இப்படி ஒரு விளம்பர வாசகத்துடன் பாரத் பெட்ரோலியம் லாரி ஒன்று கடந்துபோனது. லாரி நிறைய எரிவாயு சிலிண்டர்கள். வெயிலின் உக்கிரம், சாலை நெருக்கடி தந்த எரிச்சல் இதை மீறி மனம் ’ஹைய்யா’ என்றது. உணவைச் சமைத்து அன்பைப் பரிமாறுவது என்பது ஒரு ஜென் தத்துவமாகவே எனக்குத் தோன்றியது. உணவு இல்லை என்று எத்தனையோ பேருக்குப் பிரச்னை. உணவில் அன்பு இல்லை என்பதும் ஒரு பிரச்னையாகத்தானே இருக்கிறது. உணவு கொடுப்பதிலும் பெறுவதிலும் அன்பு என்ற  விஷயம் தவற விடப்படுவது  இன்றைய நெருக்கடிகள் மிகுந்த காலகட்டத்தில் நிகழும் ஒரு அவலம்தானே?

இந்த விளம்பர வாசகத்தை எழுதியவர் இப்படியெல்லாம் யோசித்திருப்பாரா என்று தெரியவில்லை. பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களில் எத்தனை பேர் இதை ஒத்துக்கொள்வார்கள் என்பதும் சந்தேகமே. எதையாவது கவித்துவமாகச் சொல்வோம் என்ற முயற்சியின் விளைவாகவே இது இருக்கக் கூடும். எனினும் அழகியல் உணர்ச்சியுடனும் மனித மனங்களின் உணர்வுகளைத் தொடும் விருப்பத்துடனும் இந்த வாசகம் முடிவில் வெளிவந்திருக்கிறது. உணவைச் சமைக்கவும் பரிமாறவும் வேண்டிய முறை எப்படி இருக்க வேண்டும் என்ற யாரோ ஒருவரின் உள்மனம் வாசகத்தில் பிரதிபலித்துள்ளது.

இதையொட்டி வேறு சில விளம்பர வாசகங்களும் நினைவுக்கு வருகின்றன. அண்மைக்காலமாக ஒரு செருப்பு விளம்பரத்தில், ‘என் காலடி என் பெருமை’ என்ற வாசகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வெறும் செருப்புக்கான விளம்பரம் என்பதைத் தாண்டி, வாழ்வில் நாம் தேர்வு செய்யும் பாதையையே ஒரு கணம் முன்னிறுத்த முயல்வதாக எனக்குப் படுகிறது. ஒரு ஊதுவத்தி விளம்பரத்தில், ‘பிரார்த்தனை செய்ய எல்லோருக்கும் காரணம் உண்டு’ என்ற வாசகமும் அப்படித்தான். இதற்கான தொலைக்காட்சி விளம்பரமும் சுவாரஸ்யமாக இருக்கும். ஒரு வீட்டில் பாட்டி முதல் பேரன் வரைக்கும் வெவ்வேறு காரணங்களுக்காகப் பூஜையறையில் கடவுளிடம் கோரிக்கை வைப்பார்கள். சில கோரிக்கைகள் ஒன்றுக்கொன்று எதிரானதாகவும் இருக்கும். கடவுளை நாடும் சராசரி மனிதர்களின் தேடலை இதை விட எப்படி சொல்ல முடியும்? 

பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்னால் ஒரு ஜுவல்லரி விளம்பரத்தில் ‘காதலைச் சொல்லும் வழி தங்கம்’ என்ற வாசகத்தைப் பார்த்திருப்போம். இது வணிக ரீதியாக வெற்றி பெற்ற விளம்பரம்தான். படிக்க அழகாக இருந்தாலும், ’தங்கம் வாங்க வழி இல்லாதவர்கள் காதலைச் சொல்ல முடியாதா?’ என்ற கேள்வியும் பலருக்குத் தோன்றியிருக்கும். தங்கம் விற்கும் நோக்கத்தில் அழகியலைப் பயன்படுத்திய விளம்பர எழுத்தாளர் எல்லோருக்கும் பொதுவான நியாயத்தை மறந்துவிட்டார் போல. 

அடிப்படையில் இத்தகைய விளம்பர வாசகங்கள் அந்த வழியாகக் கடந்து செல்லும் ஒருவரைச் சில நொடிகள் அவகாசத்தில் கவர வேண்டும். மனித உணர்வுகளைத் தொட்டால் மட்டுமே அது நிறைவேறும். அதை மிகவும் ஆக்கபூர்வமாகவும் நேர்மறையாகவும் செய்பவர்கள் தினசரி வாழ்க்கையில் போகிற போக்கில் நமக்கு ஒரு நல்ல அனுபவத்தைத் தருகிறார்கள் இல்லையா?

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: