விளையாட்டுப்பிள்ளைகள்

ஆதிராவும் காயுவும்(காயத்ரி) வழக்கம்போல விளையாட தொடங்குகிறார்கள். இருவரின் கைகளிலும் பொம்மைகள். ‘நான் தான் அம்மாவாம். சரியா?’ என்று ஆதிரா கேட்கிறாள். ’இதுக்காகவா எங்க வீட்டுலர்ந்து நான் பொம்மை எடுத்துட்டு வந்தேன்?’ என்பதுபோல காயு முகத்தில் ஏமாற்றம். இருந்தாலும் அவள் ஆதியை விட இரண்டு வயது சிறியவள். எனவே அவள் தான் எப்போதும் மகளாக இருக்க வேண்டியிருக்கிறது. அரை விருப்பத்துடன் சம்மதிக்கிறாள். காயுவும் இரு பொம்மைகளும் ஆதியின் பிள்ளைகள் ஆகிறார்கள். அம்மாவும் குழந்தைகளும் கடற்கரைக்குச் செல்கிறார்கள். கடைக்குச் செல்கிறார்கள். ‘ஐஸ் க்ரீம் வேணும் மம்மி’ என்று வழியில் காயு கேட்க, ‘உனக்கு ஜலதோஷம் காயு’ என்று ஆதி அதட்டி வைக்கிறாள். ‘அம்மா பாத்ரூம் போய்ட்டு வர்றேன். தம்பியை பார்த்துக்கோ’ என்கிறாள். ‘நீ சின்ன வயசா இருந்தப்போ இப்படித்தான் அடம் பிடிப்பே’ என்று சிரிப்புடன் நினைவுகூர்கிறாள். விளையாட்டு போய்க்கொண்டே இருக்கிறது. திடீரென அங்கே ஒரு குழப்பத்தைக் கவனித்தேன். ’இல்ல…காயு…நான் தான் இப்போ அம்மா’ என்று ஆதி சொல்ல, ‘இல்லல்ல…நான் தான்’ என்று காயு மறுக்கிறாள். விளையாட்டின் ஏதோ ஒரு தருணத்தில் காயுவும் அம்மா ஆகிவிட்டாள். ‘ஓகே’ என்று ஆதியும் ஏற்றுக்கொள்கிறாள். வேற வழி? விளையாட்டு சண்டையால் தடைப்படுவதை விட, தொடர விடுவதுதான் முக்கியம் என நினைத்திருப்பாள் போல. இரு அம்மாக்களும் தங்கள் குழந்தைகளை கொஞ்சுகிறார்கள். திட்டுகிறார்கள். பெண் குழந்தைகளுக்கு இதுபோன்ற விளையாட்டுகளில் அம்மா மீது ஏன் இத்தனை விருப்பம்? டீச்சர் ஆகவும் பல நேரங்களில் விரும்புவார்கள். அம்மா காட்டுகிற அன்பும் அதட்டலும் அவ்வளவு தூரம் அவர்களுக்குப் பிடித்திருக்கிறதா? அல்லது அம்மா, ஆசிரியர் ஆகியோர் தங்கள் மீது செலுத்தும் அதிகாரத்தை விளையாட்டு மூலம் அனுபவிக்க முயல்கிறார்களா? பையன்கள் ஏன் அப்பா – மகன் விளையாட்டு விளையாடுவதில்லை?
திருடன் – போலீஸ் விளையாடிய என் பால்ய காலம் ஞாபகம் இருக்கிறது. பெரும்பாலும் பையன்கள் திருடன் ரோலைத்தான் விரும்புவார்கள். திருடனாக இருப்பதில் உள்ள சுதந்திரம், பொறுப்பின்மை, சாகசம் அவர்களுக்குப் பிடித்திருக்கிறது போல. போலீஸ் ஆக இருந்தால் தேடிக்கொண்டே இருக்க வேண்டும். திருடனாக அகப்படும்போது, உண்மையிலேயே யாரிடமோ மாட்டிக்கொண்ட அதிர்ச்சியை உணர முடியும். அந்தளவுக்கு அந்த கேரக்டராகவே மாறிவிடுவோம். 
ஒருமுறை நான் திருடனாக இருந்தபோது(?), விதிமுறைகளை மீறி என் தாத்தாவின் வீட்டுக்குள்ளேயே ஒளிந்துகொண்டேன். எந்தத் தடையும் இன்றி தேடக் கூடிய பொது இடங்களில்தான் திருடன் ஒளிந்திருக்க வேண்டும். அதில் அவர்களின் திறமையைக் காட்ட வேண்டும். நான் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் தாத்தா வீட்டில் ஒளிந்துகொண்டு காத்திருந்தேன். ‘முறுக்கு வேணுமால?’ என்று கேட்ட ஆச்சியை அலட்சியப்படுத்தினேன். விதிமுறைகளை மீறினாலும் நான் இப்போது திருடன். பதுங்கியிருக்கும் நேரத்தில் முறுக்காவது, அதிரசமாவது? ஒரு அரை மணி நேரம் போயிருக்கும். வெளியே சத்தமே இல்லை. தயக்கத்தோடு எட்டிப்பார்த்தேன். பையன்கள் தெருமுனையில் நின்று இளைப்பாறிக்கொண்டிருந்தார்கள். ‘உன்னைக் கொஞ்ச நேரம் தேடுனோம். கண்டுபிடிக்க முடியல. அப்புறம் விளையாட்டை முடிச்சுக்கிட்டோம்’ என்றார்கள்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: