நெடுஞ்சாலை இரவு

நெடுஞ்சாலைகள் வழியே பகல் நேரத்தில் பயணம் மேற்கொள்ளும்போது மனம் மிகவும் வெறுமையாகிவிடுகிறது. இடிக்கப்பட்ட வீடுகள், தலையில் வெயிலை வாங்கிக்கொண்டுதான் டீ குடிக்க முடியும் என்கிற மாதிரியான டீக்கடைகள், பிளாஸ்டிக் பாட்டில்களைத் தோரணமாகக் கட்டித் தொங்கவிட்ட காயலான் கடைகள், பஞ்சர் கடைகள், கும்பகோணம் டிகிரி காபி என ஒரே மாதிரியான அறிவுப்புப்பலகை வைத்து பொய் சொல்கிற கடைகள்….. எல்லா ஊர்களும் ஒரே மாதிரிதான் இருக்கின்றன. ஒருகாலத்தில் பேருந்துகளில் செல்லும்போது ஒவ்வொரு ஊருக்குள்ளும் புகுந்து,அதனதன் அத்தனை அடையாளங்களையும் பார்த்துவிட்டுத்தான் போக முடியும். சந்தைகள், தியேட்டர்கள், சின்னச் சின்ன கடைகள், உள்ளாட்சி அலுவலகங்கள், சினிமா போஸ்டர்கள், அழகழகான வீடுகள், திண்ணைகள், கோயில்கள், தெப்பக்குளங்கள் என ஜன்னலோரப்பயணம் நம்மை ஈர்த்துக்கொண்டே இருக்கும். பைபாஸ்களின் ஆக்கிரமிப்பு இல்லாத காலகட்டம் அது. இப்போது பேருந்துப் பயணம் ரயில் பயணம் போல் ஆகிவிட்டது. எதை எடுத்தாலும் பத்து ரூபாய் போல எந்த ஊரும் ஒரே தோற்றம் காட்டி பயணத்தின் சுவாரஸ்யத்தைப் பறித்துவிடுகின்றன. வழியில் ஓடுகிற ஆறுகளும் குளங்களும் மட்டும் வற்றிப்போனாலும் ஏதோ ஒரு வசீகரத்தோடு நம்மை ஆறுதல் படுத்துகின்றன. 

அலுவலக வேலையாக திருநெல்வேலி செல்லும்போது வழியில் உள்ள எனது ஊரான கயத்தாறுக்கு அண்மையில் சென்றேன்.ஏறக்குறைய மூன்று வருடங்களுக்குப் பிறகு செல்கிறேன். பைபாஸ் போட்டு முடித்த பிறகு என் ஊருக்கு, அதுவும் காரில் செல்வது இதுவே முதல் முறை. இரவு நேரம் என்பதால் சாலையில் ஆள்நடமாட்டமே இல்லை. வழியில் உள்ள பாலத்தின் மேல் ஏறிச் செல்ல வேண்டுமா, பாலத்துக்குக் கீழே செல்ல வேண்டுமா என்று தெரியாமல் குழம்பினேன். கூட இருந்த நண்பர்கள் வித்தியாசமாகப் பார்த்தார்கள். நான் படித்த, வளர்ந்த ஊருக்குச் செல்ல வழி தெரியவில்லை என்பது காமெடியாகவும் இருந்தது. சங்கடமாகவும் இருந்தது. ஒரு சுற்று சுற்றிவிட்டுத்தான் ஊருக்குள் நுழைந்தோம். தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் ஊர் என்பதாலேயே முன்பெல்லாம் இரவு பன்னிரெண்டு மணி வரைக்கும் கூட பஸ் ஸ்டாண்டு பகுதி உயிர்ப்போடு இயங்கிக்கொண்டிருக்கும். அது நாற்கரச் சாலை ஆகிவிட்ட பிறகு, லாரிகளும் பேருந்துகளும் கார்களும் அவ்வளவாக ஊருக்குள் வருவதில்லை. இந்த மாற்றம் எல்லா ஊர்களுக்கும் நடந்திருக்கும். நேர விரயம் தவிர்க்கப்பட்டிருக்கிறது. ஆனால் பயணத்தின் சுவாரஸ்யத்தை இழந்துவிட்டோம். ஒவ்வொரு ஊரின் ஓரத்தை மட்டும் தொட்டுச் செல்கிறோம்.

ஆனால் இதே நிபந்தனைகளோடு இதே நாற்கரச் சாலைகள் வழியே இரவில் செல்ல நேரும்போது கிடைக்குற அனுபவம் வேறாக இருக்கிறது. மொட்டை வெயிலில் கண்ணைக் கூச வைத்த இடங்கள் அடர்ந்த இருளிலும் அங்கங்கேயான விளக்கொளியிலும் புது வடிவம் எடுத்து நிற்கின்றன. அதுவும் மனிதர்கள் அடங்கிப்போகும் பத்து மணிக்கு மேல் சாலையோரங்களில் சோடியம் வேபர் விளக்கொளியில் தெரிகிற வெறுமை மனத்தை வருத்துவதாக இல்லை. குண்டு பல்பு எரிகிற ஒரு சிறிய வீட்டின் வாசல் ஒரு கதை சொல்கிறது. ட்யூப் லைட் வெளிச்சமே காவல் என அமைந்திருக்கும் சிறிய வணிக வளாகக் கட்டிடம் இன்னொரு கதை சொல்கிறது. விளக்குகள் ஒவ்வொரு வீட்டுக்கும் ஒவ்வொரு தோற்றத்தைக் கொடுத்துவிடுகிறது. லைட்டிங் ஒவ்வொரு வீட்டுக்கும் தெருவுக்கும் கோயிலுக்கும் நம் மனம் விரும்பும் கதையை எழுதிக்கொள்ள தூண்டுகிறது.

வாந்தி எடுத்துக் களைத்துப் போயிருந்த ஒரு இரவு நேரப் பயணத்தில் மெல்ல எழுந்து கார் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தேன். பெரு மரங்கள், குறுகிய சாலைகள், இவற்றை ஒட்டியே குடிசை வீடுகள். ஒரு வீட்டின் முன்னால் கிறிஸ்துமஸ் குடில் தெரிந்தது. அடங்கிய விளக்கொளியில் குழந்தை இயேசு காட்சியளித்தது. மறுநாள் கிறிஸ்துமஸ் பண்டிகை. மின்னல் வேகத்தில் கார் அந்த இடத்தைக் கடந்து வந்துவிட்டது. அந்தக் காட்சி மிகவும் களைத்திருந்த நான் ஆசுவாசம் கொள்ள ஒரு மடியை விரித்து வைத்தது போலிருந்தது. இரவின் மந்திர சக்தியை உணர்ந்த ஒரு தருணம்.

இருள் போர்த்திய இரவு எவ்வளவு ஆற்றல் படைத்ததாக இருக்கிறது. வெயில் மறைத்த அழகுகளை எல்லாம் இருள் வெளியே கொண்டு வந்து விடுகிறது.

மனிதர்களின் இருப்பை, அதன் வசீகரத்தை எந்த சாலையும் மறைத்துவிட முடியாது. இரவு என்பது இருக்கும் வரை.

Advertisements

Aside

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: