அண்ணாச்சி கடையில் ஒரு கண்ணாமூச்சி

ஞாபக மறதியின் பள்ளத்தை நோக்கி சரசரவென சறுக்கி, பெரிதாக சேதாரம் ஆவதற்குள் சட்டென்று ஏதேனும் ஒன்றைப் பற்றிக்கொண்டு தப்பித்திருக்கிறீர்களா? நான் தப்பித்திருக்கிறேன். அந்த அனுபவங்கள் கடைசிப் பேருந்தைத் துரத்திப் பிடிப்பதுபோல சுவாரஸ்யமானதாகவும் இருக்கும். மானங்கெட்ட பிழைப்பு என்றும் சொல்லலாம்.

அப்படி அண்மையில் எனக்குக் கிடைத்த ஓர் அனுபவம். காலையில் பால் பாக்கெட் வாங்க தெருமுனையில் உள்ள அண்ணாச்சி கடைக்குக் கிளம்பினேன். சட்டைப் பாக்கெட்டில் நூறு ரூபாய்த்தாளை வைத்தபோது, ’சாம்பார் வைக்க காய்கறி வாங்கிட்டு வாங்க’ என்றாள் என் மனைவி.

கடையில் எனக்கு முன்பே ஏழெட்டு பேர் நின்றுகொண்டிருந்தார்கள். பால் பாக்கெட்களும் காய்கறிகளும் கடைக்கு வெளியேதான் இருக்கும். வழக்கமாக ஆவின் பால் தான் வாங்குவோம். கோடையை ஒட்டி ஆவின் பால் பாக்கெட்கள் சீக்கிரம் காலியாகிவிடுகின்றன. அன்றைக்கும் ஆவின் பால் இல்லை.  ஹெரிடேஜ் பால் பாக்கெட்களில் இரண்டை எடுத்துக்கொண்டேன். கத்தரி, முருங்கை என சில காய்கறிகளைத் தட்டில் சேகரித்துக்கொண்டு, கொஞ்ச நேரம் காத்திருந்தேன். சிலருக்கு பொருட்களைக் கொடுத்து அனுப்பிவிட்டு அண்ணாச்சி என்னைப் பார்த்தார். காய்கறிகள் எடுத்துவைத்த தட்டை நீட்டினேன். விறுவிறுவென்று எடை போட்டார்.

அடுத்ததாக, துண்டுக் காகிதத்தில் அண்ணாச்சி கணக்கு போட,  ’ரெண்டு ஹெரிடேஜ் பால் பாக்கெட் அண்ணாச்சி’ என்று பட்டியலை ஆரம்பித்தேன். ‘ஹெரிட்டேஜ் 16 ரூபா பாக்கெட்டா, 18 ரூபா பாக்கெட்டா?’ என்று அவர் கேட்டதும்தான் அப்படி ஒரு பிரிவு ஹெரிடேஜ் பாலில் இருப்பது எனக்கு ஞாபகம் வந்தது. இரு ரகங்களுமே பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருக்கும். நான் எடுத்த பாக்கெட்டின் கீழே விலைக்குறிப்பைத் தேடிப்பிடித்துப் பார்த்தேன். அவை 18 ரூபாய் பாக்கெட்கள்தான். அவற்றுக்குப் பதிலாக, அவசர அவசரமாக 16 ரூபாய் பாக்கெட்களை எடுத்தேன். கடந்த சில நாட்களாக 18 ரூபாய் பாக்கெட்களாக வாங்கிச் சென்றிருந்திக்கிறேன்.

குழப்பம் இது அல்ல. இனிமேல்தான் ஆரம்பம். ’மொத்தம் 74 ரூபா சார்’ என்றார் அண்ணாச்சி. நான் என்  சட்டைப்பைக்குள் கையை விட்டேன். திக்கென்றிருந்தது. உள்ளே ஒன்றுமே இல்லை. 100 ரூபாயுடன் வீட்டிலிருந்து கிளம்பியது வேறு நன்றாக நினைவிருக்கிறது. என்ன நடந்தது என்று மீண்டு மீண்டும் மனதில் ஓட்டிப்பார்த்தேன். குழப்பம்தான் மிஞ்சியது. பணம் கொண்டு வந்தோமா, இல்லையா? வந்தோமா இல்லையா?

’எனக்கு அண்ணாச்சி…நான் அப்பருந்தே நிக்கிறேன்… பையன ஸ்கூலுக்குக் கிளப்பி விடணும்…எனக்குப் பின்னால வந்தவங்க எல்லாம் வாங்கிட்டுப் போய்ட்டாங்க’ இப்படி பக்கத்திலிருந்த பெண்கள் குரல் கொடுக்க ஆரம்பித்தார்கள். ‘என்னப்பாச்சு?’ என்பதுபோல அண்ணாச்சி என்னைப் பார்த்தார். எல்லோரும் என்னை வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டதுபோல தோன்றியது. ‘இல்ல…வீட்டுல முதல்ல பணத்தை எடுத்த…சட்டையப் போட்டுட்டு கிளம்புறப்போ அதைப எடுத்துக்க மறந்துட்டே’ என்று புத்தி பின்வாங்க ஆரம்பித்தது. ’ஒருவேளை நியூஸ்பேப்பர் எடுக்க குனியுறப்போ, கீழே விழுந்துருச்சோ?’ என்று இன்னொரு பந்தையும் எறிந்தது.

‘அண்ணாச்சி…பணம் எடுத்துட்டு வர மறந்துட்டேன்னு நினைக்குறேன்’ என்று அடிக்குரலில் சொன்னேன். என்னிடம் பணம் இல்லை என்பதை அப்போதுதான் அறிவிக்கிறேன். சில சமயங்களில் நான் அவருக்கும் அவர் எனக்கும் சில்லறை பாக்கி வைப்பது வழக்கம்தான். பணமே எடுத்துவராமல் கையை விரிப்பது அதுதான் முதல் முறை. அன்றைய நாளின் மொத்த வியாபாரத்தின் போக்கையே நிர்ணயிக்கும் ஒரு காலை நேரத்தில் இப்படி ஒரு வாடிக்கையாளர் காமெடி பண்ணுவதை எந்த கடைக்காரர் விரும்புவார்?  தயக்கத்தோடு சிரித்துக்கொண்டே அண்ணாச்சியின் முகத்தைப் பார்த்தேன்.

அவர் முகத்திலும் குழப்பம். அவர் கையில் 100 ரூபாய்த்தாள். அப்போதுதான் என் புத்தியில் உறைத்தது. காகிதத்தில் அவர் கூட்டல் கணக்கு போடத் தொடங்கும்போதே பணத்தைக் கொடுத்துவிட்டேன். பெரும்பாலும் கணக்கு போட்டு முடித்தவுடன் தான் பணத்தைக் கொடுப்பேன். அன்று வழக்கத்துக்கு மாறாக சீக்கிரமே பணத்தைக் கொடுத்ததோடு,  கொடுத்ததையும் மறந்துவிட்டேன். ஹெரிடேஜ் பால் பாக்கெட்டை மாற்றி எடுத்தபோது ஏற்பட்ட பதற்றம் நினைவுக்கு வந்தது. கடந்துபோன பத்து நிமிடக் காட்சிகள் வைப்பர் துடைத்த கார் கண்ணாடி போல இப்போது தெளிவாகத் தெரிந்தன.

‘அண்ணாச்சி, ஒருவேளை நீங்க வச்சிருக்குறது நான் கொடுத்த 100 ரூபாயா? நானே அதை மறந்துட்டேன் போல’ என்று சற்று தெம்பை வரவழைத்துக்கொண்டு சொன்னேன். அண்ணாச்சி என் தாமதமான எதிர்வினையை ஏமாற்றுவேலையாக எடுத்துக்கொள்ளவில்லை. ‘நீங்க யாராச்சும் கொடுத்தீங்களா?’ என்று அண்ணாச்சி எதிரே நின்ற பெண்களிடம் கேட்டார். ‘இல்லையே…நாங்க கொடுக்கலியே’ என்று ஏக மனதாக பதில் வந்தது.

100 ரூபாய்த்தாள் என்னுடையதுதான் என்பது சிக்கலே இல்லாமல் நிரூபணமானது. கூட சேர்ந்து கொஞ்சம் குழம்பினாலும், அந்த 100 ரூபாயைப் பொதுவில் வைக்க அண்ணாச்சி தயாராக இருந்தார். என் பின்வாங்கலும் சுதாரிப்பும் அவரையும் குழப்பிவிட்டன. எனினும் இறுதி முடிவைத் தான் எடுக்காமல் மற்ற வாடிக்கையாளர்களிடம் விட்டார். அண்ணாச்சிக்கு இருந்திருக்கக்கூடிய 20 வருடங்களுக்கு மேற்பட்ட கடை அனுபவம் இதில் உதவியிருக்க வேண்டும். அவர் ஏற்கனவே என் சின்னச் சின்ன ஜெர்க்குகளைப் பார்த்தவரும் கூட என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

என் நல்ல நேரம், சக வாடிக்கையாளர்கள் 100 ரூபாய்க்கு ஆசைப்படவும் இல்லை. போகிற போக்கில் எதையாவது சொல்லி ஆட்டத்தைக் குழப்பவும் முயலவில்லை.

நாம் கொஞ்சம் தடுமாறிவிட்டால் நமக்குச் சொந்தமான பணத்தின் மீது நாலு பேரிடம் கேட்டுவிட்டுத்தான் கை வைக்க முடியும். இப்படி அரிய உண்மைகளை எல்லாம் மனம் பாதாளக்கரண்டி போட்டு அள்ளி எடுக்க ஆரம்பித்தது.

என் ஞாபகக் குலைவு ஏற்படுத்தவிருந்த நஷ்டத்திலிருந்தும் அவமானத்திலிருந்தும் சுற்றியுள்ளவர்கள் காப்பாற்றியிருக்கிறார்கள். ஒரு 100 ரூபாய்த்தாளை வைத்துக்கொண்டு என் நினைவாற்றல் என்னோடு நடத்திய கண்ணாமூச்சியை நினைக்க நினைக்க ஆச்சர்யமாக இருந்தது.

’ஏன் இவ்வளவு லேட்?’ என்று கேட்டாள் மனைவி. ‘ஒரே கூட்டம்’ என்றேன். அடக்கம் அமரருள் உய்க்கும்!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: