நீங்கள்லாம் தெய்வம்ப்பா!

கடலூரில் உள்ள அந்தப் பள்ளிக்கூட வளாகத்தில் ஒரு மணி நேரம் இருந்திருப்பேன். போன காரியம் முடிந்துவிட்டால் சென்னைக்கு நிம்மதியாக வண்டியை விட வேண்டியதுதான் என்ற நினைப்புதான் மேலோங்கியிருந்தது. வெறும் உருவங்களாக அங்குமிங்கும் என் கண்களில் பதிவாகிக்கொண்டிருந்த நண்டுசிண்டுகள் என் மனதுக்குச் சரசரவென வெள்ளையடித்து அனுப்பிவிட்டார்கள்.

அது ஒரு பெரிய தனியார் மேல்நிலைப்பள்ளி. அலுவலக வேலை தொடர்பாக நானும் என் நண்பர் அன்பழகனும் சென்றிருந்தோம். ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை வெவ்வேறு பிரிவு மாணவர்களைப் பார்க்க முடிந்தது. பள்ளியின் முதன்மைக் கட்டிடத்துக்கு முன்னால் அகன்ற விளையாட்டுத்திடல் அமைந்திருக்கிறது. அதன் அருகில் கொஞ்ச நேரம் காத்திருந்தோம். திடலில் நாலைந்து இடங்களில் கிரிக்கெட் பந்துகள் உயரே போய் விழுந்து கொண்டிருந்தன. அங்கங்கே கால்பந்துகளின் ராஜ்ஜியம்.

திடலுக்கு வெளியேயும் விளையாட்டு பரவியிருந்தது. இந்த விளையாட்டுக்கு எந்த விதிமுறையும் இல்லை. கிரிக்கெட்டையும் கால்பந்தையும் விட இதுதான் என்னை ஈர்த்தது. அனைத்து வகுப்புகளும் முடிந்து, மணியடித்தால் வீட்டுக்குச் சிட்டாகப் பறந்துவிடலாம் என்று மாணவர்கள் காத்திருக்கிற மாலை நேரம். விளையாடுவதற்கென ஒதுக்கப்படுகிற நேரத்தை விட, பள்ளியிலிருந்து சிறிது நேரத்தில் சென்றுவிடலாம் என்கிற இந்த நேரம் எவ்வளவு கொண்டாட்டமானது என்பதைப் பல வருடங்களுக்குப் பிறகு அங்கேதான் நேரில் பார்த்தேன்.

முதலில் எங்கள் கவனத்தைக் கலைத்தது, இரு மாணவர்களுக்கிடையே நடந்த பஞ்சாயத்து. ஒருவன் தன் கையில் வைத்திருந்த குச்சியால் இன்னொருவனை அடித்துவிட்டான். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த இந்தக் கைகலப்புதான் அவர்களைக் கவனிக்க வைத்தது. அடிவாங்கியவன் அழ, அடித்தவனுக்கும் சற்று அதிர்ச்சிதான். ‘நீ மட்டும் அப்படி சொல்லலாமா என்னை? நீ சொன்னதுக்கு அடிக்கத்தான் செய்வேன்’ என்று அவன் குச்சியைத் தூக்கியதற்கான காரணத்தைச் சொல்லி அதிர்ச்சியைச் சமாளித்துக்கொண்டிருந்தான்.

அடிவாங்கியவனிடம் விவரம் கேட்க முடியவில்லை. அடித்த பையனிடம் கேட்டேன். ‘அவன் என்னை ’சி வார்த்தை’ போட்டு பேசுறாண்ணா’ என்றான். ‘நான் சொல்லவே இல்ல’ என்றான் அழுத பையன். ‘அப்போ சார்கிட்ட வா…அவர்ட்ட சொல்லு…வா’ என்று இந்தப் பிரச்னையை ஆசிரியர் வரைக்கும் கொண்டு போக முயன்றான் அடித்தவன். அழுகிறவனோ போகவில்லை. இருவரும் ஒரே வகுப்பில் படிப்பவர்கள்தான். ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார்கள். நண்பர்கள்தானாம். ஒருவரை ஒருவர் அடிப்பதும் அடிவாங்குவதும் அவர்களுக்கிடையேயான நட்பின் ஒரு அம்சம் போல.

எனக்கு ஒரு சின்ன குறுகுறுப்பு. ‘அதென்னடா ’சி வார்த்தை’?’ என்று குச்சிப்பையனிடம் கேட்டேன். ‘போங்கண்ணா’ என்பதுபோல அவனிடம் ஒரு சிரிப்பு. பய புள்ள ஓடிவிட்டான். (கடலூரைச் சார்ந்த நண்பர்கள் யாரேனும் இந்த கெட்ட வார்த்தைக்கு என்ன பொருள் என்பதை இன்பாக்ஸில் தெரிவிக்கலாம்)

நாங்கள் நின்ற இடத்துக்கு அருகில் இருந்த ஒரு சிறு மரத்தின் கிளையை வெட்டிக்கொண்டிருந்தார்கள். மரத்தில் ஏறி உட்கார்ந்திருப்பவர் கிளையை வெட்ட வெட்ட, கீழே நின்று வேடிக்கை பார்த்த ஒரு பையன் ஒவ்வொரு வெட்டுக்கும் ’லெப்ஃப்ட்…ரைட்…லெஃப்ட்…ரைட்’ என்று நக்கல் கமெண்ட் கொடுத்துக் கொண்டிருந்தான். யாரும் எதிர்பாராத ஒரு நொடியில் கிளை முறிந்தது. விழும் வேகத்தில் கிளையின் ஒரு குச்சி பையனின் கண்ணருகே கீய்ச்சிக்கொண்டு விழுந்தது. சிறிது நேரம் அவன் தன் கண்ணைப் பொத்துவதும் கசக்குவதுகுமாக இருந்தான். நான் பதற்றத்தோடு அவனைப் பார்த்துக்கொண்டிருந்தபோதே, வலியிலிருந்து விடுபட்டவனாக இன்னொரு கூட்டத்தில் போய்ச் சேர்ந்துகொண்டான்.

திடலில் விளையாடி முடித்துவிட்டு ஒரு கூட்டம் கரையேறிக்கொண்டிருந்தது. அவர்களில் ஒருவன் பக்கத்தில் இருந்த ஒருவனை நோக்கி ‘டேய் என் பேக் கிழிஞ்சிருக்குடா…தைச்சுக்கொடு’ என்றான். ‘போடா’ என்று பதில் வரவே, ‘அப்போ நீ என்ன லீடரு?’ என்றான் இவன். என்னா வில்லத்தனம்?

கொஞ்சம் தள்ளி இன்னொரு தள்ளுமுள்ளு. ஒருவன் இன்னொருவனின் பையைத் தூக்கி எறிய, பதிலுக்கு அவனது பையும் பிடுங்கி எறியப்பட்டது. இது ஒரு சண்டையாக அடுத்த கட்டத்துக்குப் போகுமோ என்று நினைத்தேன். இருவருமே அவரவர் பைகளை எடுத்துக் கொண்டு சிரித்தபடி வெவ்வேறு திசைகளில் நடக்க ஆரம்பித்தார்கள். தினமும் இவர்கள் விடைபெறும் முறை இதுதான் போல.

இன்னொரு இடத்தில் ஒரு பொடிசு இன்னொருவனின் மணிக்கட்டில் வேப்ப முத்தை வைத்துக் கையால் உடைத்துக்கொண்டிருந்தது. மணிக்கட்டில் தோல் லேசாக உரியும்படி அடிவாங்கியவன் அவனை விட உயரமான பையனாக இருந்தான். இதற்காகவே பள்ளிக்கூடத்துக்கு வந்ததுபோல மிகவும் பொறுப்பாகக் கையை நீட்டிக்கொண்டிருந்தான். இருவரும் அண்ணன் தம்பியாம். தம்பிக்காக அண்ணன் அடியை வாங்கிக்கொள்கிறான்.

இதுமாதிரி குறும்பும் கொஞ்சம் வன்முறையும் கலந்த விளையாட்டுகள்தான் இன்னும் பல்வேறு இடங்களில் நடந்துகொண்டிருந்தன. மாணவர்கள் உற்சாகத்தின் உச்சிக்கொம்பில் நின்று ஆடினார்கள். பள்ளிக்கூடத்துக்கு மறுநாள் வரத்தான் வேண்டும். ஆனால் இன்றைக்கு பள்ளியிலிருந்து திரும்புகிறார்கள். தற்காலிகமானதானாலும், அந்த விடுதலை உணர்வு தருகிற பரவச உணர்வு மகத்தானதுதானே. அன்பழகனுக்கும் இதே அனுபவம்தான் கிடைத்திருக்கும் என நினைக்கிறேன். அவர் என்னை விட குழந்தைகளுக்குச் சட்டென்று நெருக்கமாகிவிடுவார். ஒரு சிறு கூட்டத்தில் அவர் தன்னை மறந்து சிரித்துக்கொண்டிருந்ததைப் பார்த்தேன்.

வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும்போதே ஒரு பாட்டி எங்கள் அருகில் வந்தார். ‘பசங்க இங்கேருந்து கல் வீசுறாங்க. எங்க வீட்டுக்கு வந்து விழுது’ என்று மதில் சுவர் இருக்குமிடத்தை நோக்கிக் கைகாட்டினார். பாட்டி எங்களை ஆசிரியர்கள் என்று நினைத்துவிட்டார். மதிலை ஒட்டி அவரது வீடு இருக்கிறது போல. நாங்கள் என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்துக்கொண்டிருக்கும்போதே, அவர் எங்களைத் தாண்டி, அலுவலகம் நோக்கி நடக்கத் தொடங்கிவிட்டார்.

என் பள்ளிப்பருவத்தில் இத்தகைய முறைசாரா(?) விளையாட்டுகளில்தான் என்னை ஈடுபத்திக்கொள்ள முடிந்தது. இந்த விடுதலை உணர்வு தருகிற போதை இன்னும் என் நினைவில் இருக்கிறது. கடலூர் பள்ளி மாணவர்களின் வழியாக மீண்டும் அந்த நாட்களுக்குப் போய் வந்தேன். சென்னை போன்ற ஒரு நகரத்தின் எல்லைக்குள் இருக்கும் தனியார் பள்ளிக்கூடங்களில் இதுபோன்ற சுதந்திரத்தை மாணவர்களிடையே பார்க்க முடியுமா என்பது சந்தேகம்தான். கிராமப்புறங்களில் இருக்கும் பள்ளிக்கூடத்தில்தான் இப்படி குட்டி க்ளாடியேட்டர்கள் அளவுக்கு மாணவர்கள் ரகளை செய்ய முடியும் என நினைக்கிறேன். நானும் கிராமப்புற மாணவனாக இருந்ததால்தான் அவற்றை அனுபவிக்க முடிந்தது. வகுப்பறைக் கல்விக்குச் சமமாக இத்தகைய விளையாட்டுகள்தான் ஒரு மாணவனின் ஆளுமையை வடிவமைக்கின்றன.

இப்போது நான் ஒரு தகப்பனும் கூட. இந்த வாண்டுகள் பண்ணும் கலாட்டாக்கள் எனக்குக் கொஞ்சம் கலவரத்தையும் ஏற்படுத்தின. என் மகளும் இதே போல ஒரு பள்ளிக்கூடத்தில் குறும்புகளை அவள் அளவுக்குச் செய்துகொண்டிருப்பாள். அல்லது அத்தகைய குறும்புகளை எதிர்கொள்ளும் நிலையில் இருக்க வேண்டும். மாணவிகளின் குறும்புகள் வன்முறையைத் தொட்டுவிட்டு வருமளவு இருக்குமா என்ற கேள்வியும் எழுந்தது. மாணவிகளின் குறும்புகள் உடலைத் தாண்டி, வார்த்தைகளையும் உணர்வுகளையும்தான் மையமாகக் கொண்டிருக்குமோ?

ஆசிரியர் பணி குறித்து ஒரு பொறாமை உணர்வு எனக்கு எப்போதுமே உண்டு. கற்பித்தலில் ஓர் ஆசிரியர் எந்தளவுக்குத் தன் பொறுமையை வேள்விக்கான நெய்யாக வார்க்க வேண்டும் என்பதை உணர்ந்திருக்கிறேன். அதை மீறி அந்தப் பணி ஏற்படுத்தியிருக்கும் அமைதியான இமேஜ் எனக்குள் ஆழமாக வேரூன்றி இருக்கிறது. கடலூர் பள்ளி மாணவர்கள் அந்த ஆசையில் பெரிய ஓட்டையைப் போட்டு விட்டார்கள். கற்றுக்கொடுப்பதோடு ஆசிரியர்களின் வேலை முடிந்துவிடுவதில்லை. வகுப்பறைக்கு வெளியேயும் இவர்களைக் கட்டி மேய்க்க வேண்டும். மாணவப்பருவத்தை மதிக்கும் ஓர் ஆசிரியர் இந்த விளையாட்டுகளுக்குத் தடை போட்டுவிட முடியாது. அவற்றைக் கூட இருந்தே கண்காணிக்க வேண்டியவர் ஆகிறார். கொஞ்சம் அசந்தாலும் ஒரு குறும்பு பெரிய ஆபத்தில் முடிந்துவிடும். காற்றில் தீயாக பரவி விடாமல் ஒரு சின்ன சுடராய் மட்டுமே எரிய விட்டுக்கொண்டிருக்க வேண்டும். அம்மாடி…எவ்வளவு பெரிய பொறுப்பு?

ஆசிரியர் பணியில் இருக்கும் என் நண்பர்களே, நீங்கள்லாம் தெய்வம்ப்பா!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: