நாய் என்றும் சொல்லலாம்

வழக்கமாக வாலைக் குழைத்து வரும் நாய்தான். இன்று என்னைக் கண்டுகொள்ளாமல் போகிறது. வெயில்!
……
செவளை நாய் குரைத்தே பிஸ்கெட் கேட்கும். புதியவர்களைப் பார்த்தால்கூட வாலை ஆட்டும் ஒரு நாய். ‘எனக்கு முந்தி மாதிரி எழுந்து நடக்க முடியாது. நீயா பிஸ்கெட் போட்டா சாப்பிட்டுப்பேன்’ என்று சுருண்டு படுத்திருக்கிறது இன்னொரு நாய். டீக்கடைகள் தெருநாய்களையும் சேர்த்து வாழ வைத்துக்கொண்டிருக்கின்றன.
.…..
கோடை முடிந்தாலும் வறட்சியும் புழுக்கமும் குறையாத ஒரு சமயத்தில் அந்த நாயைப் பார்த்தேன். தெருவுக்குப் புதிதாகத் தெரிந்தது. செவளையும் கறுப்பும் கலந்த நிறம். கழுத்தில் பட்டை அணிந்திருந்தது. மிகவும் பதற்றமாக இருந்தது. என்னைப் போன்றவர்களே இதிலிருந்து அந்த நாய் தெருவுக்குப் புதுசு என்பதை அறிந்துவிடுகிறபோது, மற்ற நாய்கள் சும்மா விடுமா? அதன் முகத்தருகே உறுமி துரத்திவிட்டன. எங்கேயாவது ஒளிந்துகொள்ள இடம் தேடுவதுபோலவே டீக்கடையில் ஒண்டியது. அது மிகவும் திமிராகவும் வன்முறையாகவும் கடைக்காரருக்குப் பட்டிருக்க வேண்டும். அவர், ‘ச்சீ போ’ என துரத்தினார். சில நாட்களுக்குப் பிறகு, யாரோ வேலிக்கருவையைத் தரையில் இழுத்து வருவதுபோல ஒரு சத்தம் கேட்டது. உடல் விரைத்துக் கிடந்த ஒரு நாயின் காலைப் பிடித்து ஒரு கூலித்தொழிலாளி இழுத்துப் போய்க்கொண்டிருந்தார். செவளையும் கறுப்பும் கலந்த நிறம். கழுத்தில் பட்டை. வெயிலோ பசியோ. ஒரு நாயின் கதை முடிவதை இவ்வளவு வேகமாகப் பார்த்து முடித்துவிட்டேன்.
……
வீட்டிலிருந்து ஓடி வரும் சிறுமி தெருமுனையில் நிற்கும் நாயைத் தயக்கத்துடன் கடக்கிறாள். நாய் லேசாகக் குரைத்து அவளைப் பயம் காட்டுகிறது. அதனிடம் ஏதோ விளையாட்டாகச் சொல்லிவிட்டு கடைக்கு வந்து நின்றாள். ’சரி போ போ’ என்பது போல நாய் வேறெங்கோ நகர்கிறது. அவள் சொன்னது எங்களுக்கும் கேட்டது. ஆனால் நம்ப முடியவில்லை. என்ன சொன்னாள்? என்னவோ சொன்னாளே? அதையா சொன்னாள்? எங்களுக்குள் ஒரு சின்ன ஆர்வம். ‘நாயைப் பார்த்து என்ன சொன்ன?’ என்று கேட்டோம். சட்டென திகைத்து, பின் சிரித்து சிறுமி சொன்னாள், ‘நாய் இன்றி அமையாது உலகு!’ ஒரு பத்து வயதுக் குழந்தை இப்படி யோசிக்கும் என்று யாராவது நினைத்துப் பார்க்க முடியுமா? பள்ளிக்கூடத்துக்கு அனுப்பினால் போதும். மற்றதைக் குழந்தைகள் பார்த்துக்கொள்வார்கள். மத்தியான வெயிலில் என்னைச் சிலிர்க்க வைத்த நாயே உனக்கு நன்றி!
…..
கிழக்குக் கடற்கரைச் சாலையோரம் ஒரு வீடு. அந்த வீட்டில் உள்ள சிறுமி நாய்கள் வளர்ப்பதில் நிபுணி. நாய்களுக்கு பிரசவம் கூட பார்ப்பாள். அவளைப் பேட்டி எடுக்கச் சென்றிருந்தோம். வீடு பூட்டப்பட்டிருந்தது. அவள் அம்மாவுடன் பள்ளியிலிருந்து திரும்பிக்கொண்டிருந்தாள். நானும் புகைப்படக் காரரும் வீட்டுக்கு வெளியே காத்திருந்தோம். ‘ஒரு நாயைக் கூட காணோம்’ என்று நக்கலாகச் சிரித்தார் புகைப்படக் காரர். ‘சும்மா பில்டப் பண்ணிட்டாங்களோ’ என்று எனக்கும் நம்பிக்கை கொஞ்சம் தளர்ந்தது. சிறிது நேரத்தில் அம்மாவும் பெண்ணும் ஸ்கூட்டியில் வந்திறங்கினார்கள். கேட்டைத் திறந்து எங்களை உள்ளே அழைத்துப் போனார்கள். வீட்டுக்கதவைத் திறந்ததும் உள்ளேயிருந்து வரிசை வரிசையாக பன்னிரெண்டு லாப்ரெடார் நாய்கள் வந்து எங்களை வரவேற்றன. சம்பிரதாயத்துக்குக் கூட ஒரு குரைப்பு இல்லை. சிறுமியைச் சுற்றி, ‘இப்பதான் ஸ்கூல் விட்டுச்சா?’ என்று விசாரிப்பதைப் போல வாலை ஆட்டின. அவற்றில் சில நாய்கள் நாங்கள் வருத்தப்பட்டுவிடக்கூடாது என்று நினைத்ததோ என்னவோ. லேசாக மோப்பம் பிடித்துவிட்டு மீண்டும் சிறுமியிடம் சினேகம் பேசின. அந்த அம்மா ‘ம்ம்..போங்க…போங்க’ என்றதும் அமைதியாக வீட்டுக்குள்ளும் தோட்டத்திலுமாகப் பிரிந்துசென்றன. இவ்வளவு டீசண்ட்டான நாய்களை நான் பார்த்ததே இல்லை. அதிலும் கூட்டமாக இருந்தும் அவை கடைப்பிடித்த ஒழுங்கு…அடேங்கப்பா. பேட்டியின்போது அம்மா சொன்னார், ‘நாய்களுக்கு எல்லாம் புரியும். சத்தம் போட்டு ஆர்டர் பண்ண வேண்டிய அவசியமே இல்ல. ஏதாச்சும் முரண்டு பிடிச்சா பேப்பரை எடுத்து அடிக்குற மாதிரி தூக்குனா போதும். அமைதி ஆகிடும்.’ எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நான் அவ்வப்போது என் மகளை முழங்காலில் செய்தித்தாளைச் சுருட்டி அடிப்பதை அத்தோடு நிறுத்திவிட்டேன். குழந்தைகளை எப்படி நடத்த வேண்டும் என்பதை நாய்களை நடத்துவதைப் பார்த்து தெரிந்துகொண்டவன் நானாகத்தான் இருப்பேன்.
…….
நாய்க்கு வளர்த்தவனைப் பிடிக்கும். பூனைக்கு வளர்ந்த வீட்டைப் பிடிக்கும். சில நாய்களும் பல பூனைகளும் வளர்த்த என் அரிய கண்டுபிடிப்பு இது.
…..
சில பிரபலங்களின் வீட்டுக்குப் போய் பேச நேரும்போது, அவர்கள் வளர்க்கும் நாயை நாய் என்று குறிப்பிடலாமா என்ற தயக்கத்தோடுதான் பேச வேண்டியிருக்கும்.
…..
அவரை நகைச்சுவை நடிகர் என்றும் சொல்லலாம். குணச்சித்திர நடிகர் என்றும் சொல்லலாம். (நல்லா குழம்புங்க…ஹா ஹா) அவரைப் பேட்டி எடுக்க அவரது வீட்டிற்குப் போயிருந்தேன். உர்ர்ரென்று உறுமியபடி இரு டாபர்மேன்கள் பாய்ந்து வந்தன. அவற்றை நடிகர் பிடித்து வைத்துக்கொள்ள, அந்த இடைவெளியில் வீட்டுக்குள் நுழைந்தேன். பேட்டியின்போது அந்த நாய்கள் அடிக்கடி என் ஞாபகத்துக்கு வந்துகொண்டே இருந்தன. அவரிடம் பேசி முடித்துவிட்டு கிளம்பத் தயார் ஆனேன். வாசலில் என் செருப்புகளைக் காணோம். நாய்கள் குறித்த எச்சரிக்கை உணர்வால் எங்கேயும் நகராதபடி பார்வையாலேயே துழாவினேன். நாய்களையும் காணவில்லை. அவை இருந்த இடத்தில் என் செருப்புகள் நான்கைந்து துண்டுகளாகக் கிழிக்கப்பட்டுக் கிடந்தன. அன்று நான் தெரிந்துகொண்ட முக்கியமான விஷயம், பணக்கார வீட்டு நாய்கள் டீத்தர் இல்லாமல் வாடுகின்றன.
…..
ஆக்ரோஷமாகப் பாய்ந்து வருகிற தனது நாயைப் பார்த்து, ’அதெல்லாம் கடிக்காது சார். பயப்படாம வாங்க’ என்று சொல்ல தனி மனநிலை வேண்டும்.
….
கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள ஒரு தொழிலகத்தின் நிர்வாகியைச் சந்திக்கப் போயிருந்தேன். ஏசி குளிரும் பிரிண்டரின் மெல்லிய ஓசையும் கலந்த கார்ப்பரேட் வாசனை தூக்கலாக இருக்கும் அவரது அறைக்கு உதவியாளர்கள் வழிநடத்தினார்கள். ஒரு நாற்காலியில் அவர் அமர்ந்திருந்தார். பக்கத்து இருக்கையில் ஒரு தெரு நாய் படுத்து உறங்கிக்கொண்டிருந்தது. எனக்குக் காட்டப்பட்ட இருக்கையின் அருகில் இருந்த இன்னொரு இருக்கையில் இன்னொரு நாய் உட்கார்ந்திருந்தது.

அவர் பிராணிகள்கள் நல வாரியத்தில் ஒரு முக்கிய உறுப்பினர் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?
….
தெற்றுப்பல் உள்ள ஒரு நாயைப் பார்த்தபோது, ’என்ன உலகம்டா இது?’ என்று எரிச்சல் வந்தது.
…..
அபார்ட்மெண்ட்டின் நாலாவது தளத்தின் பால்கனியில் கட்டிப்போடப்பட்ட நாய் தான். அதற்காக ரோட்டில் நடந்துபோகும் நாயைப் பார்த்து குரைக்காமல் இருக்க முடியுமா?
…….
ரோஸியின் வாழ்க்கை ஒரு மணி நேரத்தில் தலைகீழாக மாறும் என்று கனவிலும் நான் நினைக்கவில்லை. அலுவலகத்துக்கு எதிரே உள்ள டீக்கடையில் வளர்க்கப்படுகிற நாய் அது. கறுப்பு நிறத்தில் இருக்கும். ஆர்வமாக எதையாவது பார்த்துவிட்டு, அதன் பஜ்ஜிக்காதுகள் கூர்மை அடைவது அழகாக இருக்கும். கட்டி வைத்து வளர்க்கப்படுவதாலேயே எப்போதும் கொஞ்சம் கோபமாகவே இருக்கும். அடிக்கடி வந்து பிஸ்கெட்டோ, கறித்துண்டோ போடுபவர்களைப் பார்த்து செல்லமாக வாலை ஆட்டும். ஒருநாள் ரோஸியை ஏதோ மறதியில் ஜூலி என்று கூப்பிட்டு கடி வாங்கப் பார்த்தேன். இப்போது அது விஷயம் இல்லை. சில்வர் ஸ்பூனில் சாப்பிடாத குறையாக வளர்க்கப்பட்ட ரோஸியின் வாழ்க்கை அதலபாதாளத்துக்குப் போய் மீண்ட கதை.
டீக்கடைக்கு அந்தப் பக்கம் ஒரு காலி மனை. அதில் ஒரு தொழிலகம் இயங்கி வருகிறது. அங்கே தாயும் குட்டியுமாக இரு நாய்கள். அவை காலி மனையின் கேட் பக்கம் யாராவது எட்டிப் பார்த்தாலே குரைத்துத் தீர்த்துவிடும். ரோஸிக்கும் அந்த நாய்களுக்கும் எப்போதும் ஒருவித வாய்க்கா வரப்புச் சண்டை இருந்துகொண்டே இருக்கும். கட்டிப்போடப்பட்ட ரோஸி அந்த வழியாக இந்த நாய்கள் போனால் ‘ப்ளீஸ்…என் கட்டை அவுத்து விடுங்க…ஒரு கை பார்த்துடுறேன்’ என்பதுபோல கர்ஜிக்கும். அழும். எஜமானியம்மாவிடமோ, அவருடைய பிள்ளைகளிடமோ ஒரு அடி வாங்கிவிட்டு அமைதியாகும். ஆனால் ரோஸிக்கு அப்படி ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது. ஒருநாள் ரோஸி சங்கிலியிலிருந்து விடுபட்டிருந்த ஒரு தருணத்தில் அந்த நாய்களின் சத்தம் கேட்க, உணர்ச்சிவசப்பட்டு தொழிலகம் நோக்கிப் பாய்ந்தது. ரோஸிக்கும் அந்த நாய்களுக்கும் இடையே கடுமையான சண்டை. புழுதி கிளம்பியது. ரோஸி என்னதான் விட்டுக்கொடுக்காமல் சண்டை போட்டாலும், இரு நாய்களின் தாக்குதலை எதிர்கொள்ள முடியவில்லை. முதலில் டீக்கடைக்கார அண்ணன் தெனாவெட்டாக அதை வேடிக்கை பார்த்தார். நிலைமை கலவரமாவதைப் புரிந்துகொண்டு ரோஸியை நோக்கி ஓடினார். ‘ரோஸி ரோஸி…இந்தா….இங்க வா…இந்தா’ என்று கெஞ்சியும் மிரட்டியும் ரோஸியை மீட்டு வந்தார்.
’உனக்கு எதுக்கு இந்த வேலை? பெரிய இவ மாதிரி’ என்று தலையில் ஒரு அடி வைத்துவிட்டு ரோஸியைத் தடவிக்கொடுத்தவரின் கைகள் சட்டென்று நின்றன. ரோஸியின் கழுத்தோரம் கடி வாங்கியிருந்தது. ‘ஊசி போட்டிருக்கீங்கள்லே…ஒண்ணும் ஆகாது’ என்று ஆளுக்கு ஆள் சமாதானப்படுத்தினார்கள்.
பிற்பகலில் கடைக்குப் போனேன். டீக்கடை அண்ணனும் அக்காவும் பதற்றமாக இருந்தார்கள். ரோஸியைக் குளிப்பாட்டிவிட்ட அக்காவை அது கடித்துவிட்டதாம். கவலையும் கோபமுமாக அண்ணன் தெரிந்தார். ‘பேசாம இந்தச் சனியனை எங்காச்சும் கொண்டுபோய் விட்டிர வேண்டியதுதான்’ என்றார். ரோஸியைப் பார்த்தால், தன் தவறை உணர்ந்து தலை குனிந்த மாதிரியும் தெரிந்தது. உக்கிரம் தணியாத மாதிரியும் தெரிந்தது. தெருநாய்களால் கடிக்கப்பட்ட சிறிது நேரத்தில் ரோஸி அக்காவைக் கடித்தது அவர்களின் அச்சத்தை அதிகப்படுத்தியது. சிறிது நேரத்தில் அக்கா மருத்துவமனைக்குப் போய் ஊசி போட்டு வந்தார்.
ஒரு மணி நேரத்தில் எல்லாம் நடந்து முடிந்துவிட்டன.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை. டீக்கடையில் யாரும் இல்லை. ரோஸி மட்டும் இருந்தது. வழக்கமாக விடுமுறை தினங்களில் ரோஸியை வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிடுவார்கள். இப்போது முதன்முறையாக கூட யாருமே இல்லாத நிலையில் ரோஸியைப் பார்க்கிறேன். புறக்கணிப்புக்கும் ஆதரவுக்கும் நடுவே ரோஸி இருக்கிறது. இவ்வளவு பெரிய பிரச்னைக்கு இடையே தன் மேல் உட்கார்ந்த ஈயைக் கடிக்கும் பாவனையில் விரட்டிக்கொண்டிருந்தது. பார்க்கவே பாவமாக இருந்தது. ‘ரோஸி’ என்று கூப்பிட்டேன். ‘ம்ம்’ என்பதுபோல பார்க்க மட்டுமே செய்தது. வாலை ஆட்டவில்லை.
சில நாட்களுக்குப் பிறகு கடைக்குப் போனேன். ரோஸி அந்த வண்டிக்கடையின் கீழே வழக்கம்போல இடம் பிடித்திருந்தது. அக்கா அச்சத்திலிருந்து விடுபட்டுவிட்டார். காயமும் ஆறிக்கொண்டிருந்தது. ‘எங்கயாவது போய் விட்டுரலாம்னு எடுத்துட்டுப்போய் விட்டா கூடவே ஓடி வருது…என்ன பண்றது?’ என்றார் டீக்கடை அண்ணன். அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே கடைக்குப் பின்னாலிருக்கும் நாய் சாலையில் செல்ல, ரோஸி கடும் எதிர்ப்பை பதிவு செய்ய ஆரம்பித்தது.
……
இந்தப் பதிவை எழுதியவன் மூன்றாம் வகுப்பு படிக்குபோது, ஒரு நாயிடம் கடிவாங்கி, பயந்து, அழுது, தினமும் ஒன்று என மூன்று ஊசிகள் போட்டு, சாப்பாட்டில் கத்தரிக்காயும் நல்லெண்ணெயும் தவிர்த்து, மொத்தத்தில் இரண்டு வாரம் பள்ளிக்கே செல்லாமல் ஜாலியாக இருந்தவன்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: