டாபர்மேன் செல்லம்….பொமரேனியன் செல்லம்

பிளாட்பாரக் கடையில் ஒரு பெரிய பனிக்கட்டி கத்தியால் அறுக்கப்படுகிறது. சாலையோரத்தில் நிற்கும் ஒரு பெருமரம் முழுக்க ‘ஸ்டாப்பிள் பின்’ அடித்து வைத்திருக்கிறார்கள். தெருவின் குறுக்கே தண்ணீர் சுமந்து செல்லும் ரப்பர் குழாய் மீது என் பைக்கும் ஏறி இறங்குகிறது. விளையாட்டுச்சாமான்களுக்கு இடையே ஒரு பார்பி பொம்மையின் தலை தட்டுப்படுகிறது. நடுரோட்டில் சாம்பார் சாதம் கொட்டிக்கிடக்கிறது. மிக சாதாரணமாக நடந்து முடிந்த அனைத்திலும் அசாதாரணமாக ஏதோ ஒன்று எஞ்சி நிற்கிறது.
…….
அந்த மின்சார ரயிலின் பெட்டிக்குள் எல்லோருக்கும் இருக்கை இருந்தது. தண்டவாளங்களின் தடதட ஓசையைத் தாண்டி, பிற்பகலின் வெறுமையும் அமைதியும் அதில் நிரம்பி வழிந்தது. ஒரு இசை போல அந்தச் சூழலை அப்படியே தொடரச் செய்யும் முடிவோடு எல்லோரும் மெளனத்தில் ஆழ்ந்திருந்தார்கள். ஒரு நிறுத்தத்தில் ரயில் நிற்க, சிலர் இறங்கினார்கள். பெட்டிக்குள் புதிதாய் ஏறிய ஒரே ஒருத்தியாக அவள் இருந்தாள். தன் மகனின் கையைப் பிடித்துக்கொண்டு அவசரம் ஏதுமின்றி நுழைந்தாள். பையனுக்கு எட்டு வயது இருக்கலாம். ஒவ்வொரு இருக்கைக்கும் போய் கையேந்துவாளோ என்ற சந்தேகம் பயணிகள் முகத்தில் தெரிந்தது. அதைப் பொய்யாக்கிவிட்டு எங்கும் நகராமல் சட்டென நுழைவாயின் அருகே தரையில் உட்கார்ந்தாள். அதுதான் தனது இடம் என்பதுபோல.

அவளுடைய மகன் சும்மா இருக்கவில்லை. இருக்கைகளின் பின்னால் நின்றுகொண்டு லேசாகக் குதித்தான். காலியான இருக்கை ஒன்றில் நின்றுகொண்டு கூரையில் தொங்கும் கைப்பிடியைத் தொட முயன்றான். சிறிது நேரத்தில் கீழே இறங்கி அம்மாவிடம் ஓடினான். மீண்டும் வந்தான். உட்கார்ந்திருந்தவர்களுக்கு அது நிச்சயம் தொந்தரவாக வாய்ப்பே இல்லை. இருக்கையில் நின்றுகொண்டு பயணம் செய்யும் சிறுவர்களும் சிறுமிகளும் ரயில் பெட்டிக்குப் புதிதும் இல்லை. இத்தனைக்கும் அவன் மென்மையாகவே இதைச் செய்தான்.
அந்தப் பையனை முறைத்தார் ஒருவர். ’ப்ச்’ என்று அடக்கமாக அதட்டினார் இன்னொருவர். ‘டேய். இறங்குடா’ என்றார் வேறொருவர். ‘ஒழுங்கா உட்காருடா’ என்று யாரும் சொல்லவில்லை. அவர்களின் முகங்களில் முகத்தில் ஏதோ ஒருவித எரிச்சல். அவர்கள் அவனுக்கு ஏதோ சொல்ல முயன்றார்கள்.
பையனோ எதையும் கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து விளையாடினான். அம்மா பையனையும் பயணிகளையும் வெறுமனே பார்த்துக்கொண்டே இருந்தாள். அடுத்த நிலையத்தில் ரயில் நின்றது. அவள் அதே மெளனத்தோடு பையனை இழுத்துக்கொண்டு இறங்கிப்போய்விட்டாள். அம்மாவின் பிடிக்குள் இருந்தாலும் துள்ளிக்குதித்துக்கொண்டே பையன் போகிறான். அடங்க மறுத்தவனாக, உள்ளே நடந்த ஒரு போட்டியில் வென்றவனாக, அந்த வெற்றியை அறியாதவனாகப் போகிறான்.

ரயில் நகர்கிறது. பெட்டிக்குள் அதே அமைதி திரும்புகிறது. எரிச்சலானவர்கள் முகத்தில் மீண்டும் ஆசுவாசம். இன்று இல்லாவிடிலும் இன்னொரு நாள் வரும். ரயில் பெட்டி இன்று அவனுக்குச் சொல்ல முயன்றதை அன்று அவனுக்கு உணர்த்தியிருக்கும். அவன் மற்ற பையன்களைக் காட்டிலும் அமைதியாகப் பயணிக்க வேண்டும் என்றும் அவன் ஒரு பிச்சைக்காரியின் மகன் என்றும்.
…..
பேருந்துக்காகக் காத்திருந்த அனைவரையும் நோக்கி திடீரென்று அவன் பேசத் தொடங்கினான். கறுப்பாய், ஒடிசலாக இருந்தான். சட்டை பேண்ட் அணிந்திருந்தான். ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுவதுபோல உரக்கச் சொன்னான். ‘நீ டாபர்மேன் செல்லம்…நீ அல்சேசியன் செல்லம்…நீ பொமரேனியன் செல்லம்……….’ ஒவ்வொருவரும் அவனுக்கு நாய் செல்லம்தான். செல்லங்களின் பெயர்கள் முடிந்துவிட்டால் மீண்டும் தொடங்குவான். எல்லோரும் அவன் முன்னால் திடுக்கிட்டுப்போய் நின்றோம். என்னை என்ன செல்லமாக ஆக்கினான் என்று தெரியவில்லை. இந்த மூன்று செல்லங்களில் ஒன்று என்பது மட்டும் உறுதி. எங்களோடு நின்றிருந்த ஒருவர் எரிச்சல் அடைந்து விரட்டினார், ‘ச்சீ…போடா அந்தப் பக்கம். காலங்காத்தால வந்துகிட்டு டாபர்மேன் அல்சேஷியன்னுகிட்டு’. அவ்வளவுதான். செல்லத்துக்குக் கோபம் வந்துவிட்டது. ‘நீ நாய்டா….நீ நாய்’ என்று அவரைப் பார்த்துச் சொல்லிவிட்டு சோகமாக நடந்து மறைந்தான்.
….

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: