பாட்டுப்பைத்தியம்

’நாதம் என் ஜீவனே…வா வா என் தேவனே’ என்று அவள் ஒருநாள் வேண்டுவாள். ‘மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக்கொண்டேன்’ என ஒருசமயம் வெட்கப்படுவாள். ’காற்றில் எந்தன் கீதம்…காணாத ஒன்றைத் தேடுதோ?’ என்று மழைநாளில் என்னை எதிர்நோக்கியிருப்பாள். ‘கலைந்திடும் கனவுகள், கண்ணீர் சிந்தும் நினைவுகள்’ என சன்னமாக அழுது முடித்துவிட்டு அடுத்த வேலையைப் பார்ப்பாள். அவளைப் போலவே எஸ்.ஜானகிக்குக் குரல் வாய்த்திருப்பதுதான் அதிசயம்.
……
இப்போதெல்லாம் முதலில் நான் பாடுவேன். எனக்குப் பின் எஸ்.பி.பியோ, ஜானகியோ, சித்ராவோ பாடுவார்கள். (எனக்குப் பக்கத்தில் இருப்பவர்கள் ’டரியல்’ ஆவார்கள்.)
……
‘கன்னி ராசி என் ராசி…ரிஷப காளை ராசி என் ராசி…’…நள்ளிரவில் ஒரு எஃப்.எம்மில் இந்தப் பாடலைக் கேட்டேன். சுசீலாவின் கம்பீரமான(வழக்கமாக கனிவாக இருக்கும். இந்தப் பாடலில் காதலனின் தவிப்பை வேடிக்கை பார்க்கிற காதலியின் குறும்பு அவரது குரலில் இருப்பதாக நினைக்கிறேன். அந்தக் குறும்பு ஒரு கம்பீரமாகவே மாறி அந்தப் பாடலில் ஓங்கி ஒலிக்கும்) குரலும் ஜேசுதாசின் இணக்கமான குரலும் சேர்ந்து வசீகரிக்கிற அந்தப் பாடல் என் விருப்பத்துக்குரிய பாடல்களில் ஒன்று. கமல் பெல்பாட்டம் அணிந்து, புரூஸ்லி போல முடி வளர்த்துக்கொண்டு நடித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் வந்த ஒரு படத்தில் அந்தப் பாடல் வரும். இதைக் கேட்கும்போது, ‘மாம்பூவே..சிறு மைனாவே…என் ராசாத்தி ரோஜாச்செடி’ பாடல் உடனடியாக நினைவுக்கு வந்தது. இதே ஜோடி இதே காலகட்டத்தில் பாடிய இன்னொரு பாடல். அதைக் கேட்கும்போதே ஓர் அமைதியான, பசுமையான கிராமம் மனதில் தோன்றும். கூடவே… ஆளற்ற ஆற்றங்கரை ஓரத்தில் காத்துக்கிடக்கிற காதலும். ’கன்னிராசி…ரிஷப ராசி’ முடிந்து, அந்த எஃப்.எம் ஸ்டேஷனுக்கான விளம்பரம் ஒலித்தது. அடுத்த பாடலாக, ‘மாம்பூவே…சிறு மைனாவே’. ஏதோ பரிசுச்சீட்டு எனக்கு விழுந்ததுபோலிருந்தது. எப்போதும் நம் மூளையில் ஓர் ஓரமாக மிகக் குறைவான வால்யூமில் ஒலித்துக்கொண்டிருக்கிற பால்ய காலத்தின் பாடல் ஒன்றைத் திடீரென நம் முன்னால் எடுத்துப்போடுவது வானொலிகள் மட்டுமே தர முடிகிற பேரனுபவம். நம் விருப்பமும் அதிர்ஷ்டமும் சேர்ந்து குழைந்து நிகழும் ஓர் அற்புதத்தை அப்போது உணர்ந்தேன். ஒரு எறும்பாக இருப்பதில் உள்ள முக்கியமான வசதி, வாழ்வைக் கொண்டாட ஒரு சர்க்கரைத் துகளே போதும். ஆனால் எறும்புகளுக்குக் கிடைப்பதெல்லாம் தேன் மிட்டாயாக இருக்கும்போல. நான் எறும்பாகவே இருக்க விரும்புகிறேன்.
….

நமக்குப் பக்கத்தில் இருப்பவர்களிடமிருந்து ஒரு பாடல் மெல்லிய முணுமுணுப்பாகக் கிளம்புகிறது. அந்த இடத்தில் நிலவும் சுதந்திரத்தையும் அதை அவர்கள் ஏற்றுக்கொள்வதையும் அந்தப் பாடல் சொல்லிவிட்டுச் செல்கிறது.
….
ஒருவர் முணுமுணுக்கும் பாடல் சில நிமிடங்களுக்குப் பிறகு அதே இடத்தில் உள்ள இன்னொருவரிடமிருந்து அதே முணுமுணுப்பாக வெளிப்படும் தருணங்கள் உணர்த்துகின்றன. பாடல்கள் காற்றில் பரவும் தொற்றும் கூட.
……
‘அடுத்து நீங்கள் ஆரம்பிக்க வேண்டிய பாடலுக்கான எழுத்து ஊ…?’- ‘பாட்டுக்குப் பாட்டு’ போட்டியில் வெற்றிகரமாக நான்கு பாடல்களைக் கடந்து நான்கு புள்ளிகள் பெற்ற என்னிடம் சங்கிலிப்பாண்டியன் அண்ணன் கேட்கிறார். அனா ஆவன்னா என எளிதான ஓரிரண்டு பாடல்களுக்கு வாய்ப்பு கொடுத்துவிட்டு, ‘ஐ’, ‘ஔ’,’டி’ போன்ற எழுத்துகளுக்கு பாடல் கேட்டு போட்டியாளர்களை வெளியேற்றுவதுதானே இந்தப் போட்டிகளின் சூட்சுமம். நான் கொஞ்சமும் தாமதிக்காமல் பாடுகிறேன். ‘ஊரோரமா ஆத்துப்பக்கம் தென்னந்தோப்பு…தோப்போரமா இந்தப் பக்கம் குருவிக்கூடு…ஆண் குருவிதான் இரையைத் தேடி போயிருந்தது…பெண் குருவி தான் கூட்டுக்குள்ளே காத்திருந்தது…’. அண்ணன் அசந்துவிட்டார். ‘கூட்டுக்குள்ளே குருவி ரெண்டுமே ஒண்ணா சேர்ந்தது. ஜும் ஜுமுக்கும் ஜும் ஜும் … ஜும் ஜுமுக்கும் ஜும் ஜும்’ என்று ‘ புரோபஷனல் டச்’சுடன் முறையாகப் பாடலை முடித்தேன். மேடைக்குக் கீழிருந்த கூட்டம் வியந்து கரகோஷங்களை எழுப்பியது. ‘தம்பி…உனக்கு இந்தப் பாட்டுக்கு அர்த்தம் தெரியுமா?’ என்று சங்கிலிப்பாண்டியன் அண்ணன் குறும்போடு கேட்டார். ‘ஹி ஹி தெரியாது’ என்று தலையாட்டிய எனக்கு அப்போது பன்னிரெண்டு வயதிருக்கும். ஜும் ஜுமுக்கும் ஜும் ஜும்!
…….
இடம் முகப்பேரில் உள்ள ஒரு ஹார்டுவேர் கடை. ’இதத்தான் சார் கண்ணதாசன் அன்னிக்கே சொன்னான்…மனிதன் மாறிவிட்டான் மரத்தில் ஏறிவிட்டான்ன்னு’ – ஒருவர். ‘மரம் இல்ல சார்…மதத்தில் ஏறிவிட்டான்’-இன்னொருவர். ‘அப்படியா…மரம் இல்லியா?’-முதலாமவர் கொஞ்சம் அதிர்ச்சியோடு பின்வாங்குகிறார். பல வருஷமா தப்பா மரத்துல ஏறிட்டு இருந்திருக்கோமா என்ற அதிர்ச்சி. இவர் என்ன மேடைலயா பாடிட்டாரு…அவர் இப்படி கறாரா திருத்துறதுக்கு? இந்த ஆளும் இவ்வளவு ஸ்ட்ராங்கா மேற்கோள் காட்டிருக்க வேணாம். செங்கல் வாங்கப்போனால் எனக்கு இப்படி ஓர் அனுபவம்.
……
’கருமாரி சமயபுரத்தாயே…உன் மகள் எனக்கு எல்லாமும் நீயே’ என்று காலையில் இழைகிறது ஒரு டீக்கடை. ‘தேவி கருமாரியம்மா…தேடி வந்தோம் உன்னை அம்மா’ என்று சரண் அடைகிறது எதிரில் உள்ள டீக்கடை. ஆடி மாதங்களில் எல்.ஆர்.ஈஸ்வரிக்குப் போட்டி எல்.ஆர்.ஈஸ்வரிதான்.
….
காலாவதியான என்ஜின் எழுப்பும் வினோதமான சத்தத்தோடு அந்த டவுன்பஸ் போய்க்கொண்டிருக்கிறது. எதையும் பொருட்படுத்தாமல் பேருந்துக்குள்ளே பாடல்கள் ஒலிக்கிறது. இற்றுப்போன ஒரு சவுண்டு சிஸ்டம் ஆனாலும் பாடல்களைக் கேட்டே ஆக வேண்டும் என்ற பிடிவாதம் ஓட்டுனரிடம் தெரிகிறது. ’என்ன பாடல் இது?’ என்று நான் குழம்பிக்கொண்டிருக்கிறபோது, பாடலின் ஏதோ ஒரு இடத்தில் இசை காட்டிக்கொடுத்து விடுகிறது. மீண்டும் பாடல் மறைந்துபோகிறது. பஸ்ஸின் வேகம் குறைந்து, என் ஜின் சத்தம் தாழும்போது மீண்டும் பாடல் வெளிப்படுகிறது. பாடலோடு நடக்கும் கண்ணாமூச்சியில் ஜெயிப்பதில் ஒரு ஆனந்தம்!
…..
இறுக்கமும் அமைதியும் வெக்கையும் ஆதிக்கம் செலுத்தும் ஒரு பேருந்துக்குள்ளே செல்போனில் பாடல்களை உரக்க ஒலிக்க விட்டுக் கேட்டுக்கொண்டிருக்கிறான் ஒருவன். ‘ஆயிரம் மலர்களே மலருங்கள்’, ‘பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா’, ‘விழியிலே மலர்ந்தது..’ இப்படி சில பாடல்களை ஒலிக்க விட்டு, சட்சட்டென அவற்றைக் கடந்து வேறு ஏதோ பாடலைத் தேடுகிறான். பெருங்கூட்டத்தில் யாரோ ஒருவன் இதற்காகப் பதறுவது அவனுக்குத் தெரியாது.
…..
தனியார் பள்ளிப்பேருந்தில் இருந்த ஓட்டை வழியாகச் சாலையில் விழுந்து இறந்துபோன சிறுமியின் வீட்டைத் தேடிக்கொண்டிருந்தேன். தாம்பரத்திலிருந்து முடிச்சூர் போகும் வழியில் உள்ள புதிய குடியிருப்புகள் ஒன்றில்தான் அவளது வீடு இருந்தது. அன்று மாலையில் அவளது உடல் அடக்கம் செய்யப்பட்டிருந்தது. நான் இரவில் அவளது பெற்றோரின் இதயங்களைப் பத்திரிகையாளன் என்ற பேரில் மீண்டும் ஒரு முறை கீறும் கேள்விகளோடு போய்க்கொண்டிருக்கிறேன். முகவரி கேட்க ஆட்கள் அற்ற சில இடங்களில், ரோஜாப்பூவை நினைவூட்டும் முகத்துடன் அவள் சிரிக்கிற அவளுக்கான அஞ்சலி பேனர்கள்தான் எனக்கு வழிகாட்டின. சம்பந்தமே இல்லாமல் ஏதோ ஒரு வீட்டிலிருந்து அந்தப் பாடல் ஒலித்தது,’வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்’. உறக்கமற்ற இரவுகளைக் காதலனுக்குக் கொடுத்துவிட்டுப்போன ஒரு காதலிக்குப் பதிலாக, ஒரு சிறுமி பாடல் வரிகளில் வந்து அமர்ந்துகொண்டதுபோல ஒரு திகைப்பு ஏற்பட்டது. தேனாகப் பேசியதும் சிரித்து விளையாடியதும் வீணாகப் போகும் என்று யாரேனும் நினைக்கவில்லை. அந்த இரவை, அந்தப் பாடலை, அந்த முகத்தை மறக்கவே முடியாது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: