பாட்டுப்பைத்தியம்-2

இந்தப் பதிவை எழுதியவன் விக்கிரமன் படங்களில் வருகிற பாடல்களை நண்பர்களிடையே நக்கலடித்துவிட்டு, வாய்ப்பு கிடைக்கிறபோது அவற்றைத் தனிமையில் கேட்டு மகிழ்பவன். அதிலும் ‘செவ்வந்தி பூ எடுத்தேன்..அதில் உன் முகம் பார்த்திருந்தேன்’ போன்ற பாடல்களுக்குக் காதுகளைக் கழற்றிக்கொடுக்க தயாராக இருப்பவன். எனவே ஒருமுறை யோசித்துவிட்டு மேற்கொண்டு வாசிக்கவும்.

……

ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு காலம் இருக்கிறது. அதுதான் நம்மை வாட்டி எடுக்கிறது.

……

‘அஜல குஜல மசாலா கம்பெனி…புல்புல்லா ரஸ்குல்லா பிஸ்கொத்தே கம்பெனி…என் ஸ்டோரிமா!’- டீக்கடையை மிக நிதானமாகக் கடந்து சென்ற ஓர் ஆட்டோவிலிருந்து இந்தப் பாட்டு ஒலித்தது.  ஆட்டோ போய்விட்டது. பாடல் தூரத்தில் தொடர்ந்தது. கடை அருகே நின்ற சிலரின் முகங்களில் லேசாக மலர்ச்சி. ‘நல்லா பாட்டு எழுதியிருக்கான்யா…ஹ ஹ’ என்று குழந்தையின் குறும்புகளை ரசிப்பதுபோல ஒருவர் சிரித்தார். பிற்பகலின் வெறுமையையும் வெயிலின் உக்கிரத்தையும் ஒரு பாடல் சட்டென கலைத்துப்போட்டதை அன்று நேரில் பார்த்தேன்.

……..

‘நீ சொல்லாததால் மொழி இல்லை/ நீ செல்லாததால் வழி இல்லை/ நீ பாராததால் ஒளி இல்லை/ நீ தாராததால் நிழல் இல்லை’ (இரும்புக்குதிரை படத்தில் வருகிற ’பெண்ணே பெண்ணே’ பாடல்) – தமிழ் சினிமாவில் லட்சம் முறைகள் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள்தான். அவற்றை வைத்துக்கொண்டு இன்றுதான் தொடுத்த பூச்சரம் போல ஒன்றை எப்படி இந்தப் பாடலாசிரியர்களால் உருவாக்கிவிட முடிகிறது?

……..

‘ஞாயிறு ஒளிமழையில் திங்கள் குளிக்க வந்தான்/ நான் அவள் பூவுடலில் புது அழகினைப் படைக்க வந்தேன்’ – 1970களில் பிறந்த என்னைப் போன்றவர்கள் இந்தப் பாடலையும் கேட்டுத்தான் விடலைப்பருவத்தைக் கடந்து வந்திருப்பார்கள். மனதில் நின்ற பெண்ணைத் தன்னால் இயன்றளவு கொண்டாடித் தீர்க்க முயல்பவனின் ஏக்கம்தான் ஒவ்வொரு வரியிலும். கண்ணதாசன் எழுதிக் குவித்த அழகுகளில் ஒன்று என்றுதான் வெகு காலமாக நினைத்து வந்தேன். இதை எழுதியவர் நேதாஜியாம். மூன்று வருடங்களுக்கு முன்னால் நேதாஜி இறந்தபோது எனக்கு இந்தத் தகவல் தெரிய வந்தது.

………

‘நாதம் என் ஜீவனே/ வா வா என் தேவனே’ பாடலில் ஜானகி பல்லவியைப் பாடிவிட்டு சரணத்துக்கு வழிவிட, Interlude ஆக ஒரு புல்லாங்குழலின் தலைமையில் பெருக்கெடுக்கும் நாத வெள்ளத்தின் இனிமையை ஒரு இசை ஆசிரியன் போல எனக்கு உணர்த்தியவன் என் மூத்த அண்ணன்.

ஆசிரியரே ஒரு அண்ணன் போலச் சில பாடல்களை என்னோடு பகிர்ந்துகொண்டதும் உண்டு. ‘உப்பைக் கலந்தா கஞ்சி இனிக்கும்/ உன்னைக் கலந்தா நெஞ்சு இனிக்கும்…இப்படி வரி சிம்பிளா இருக்கணும்டா’ என்று ’அடடட…மாமரக் குயிலே உன்னை இன்னும் நான் மறக்கலியே’ பாடலின் அழகைப் போகிற போக்கில் எனக்குச் சுட்டிக்காட்டினார் ஒரு பேராசிரியர். சில பாடல்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கதவுகள். யாராவது ஒவ்வொரு கதவாக நமக்குத் திறந்துவைக்க வேண்டியிருக்கிறது.

…….

பிரபல சினிமா பாடல்களில் தகுந்த இடங்களில் தகுந்த  ‘கெட்ட வார்த்தை’களை போட்டுப் பாடத் தெரிந்த சில அரிய கவிஞர்கள் பள்ளி நாட்களில் எமது அவையில் இருந்தார்கள்.

…….

தாத்தாக்களோ அப்பாக்களோ கேட்டு, நமக்கு இன்னும் வந்து சேராத சில பாடல்களின் அழகைச் சில இயக்குனர்கள் பயன்படுத்திக்கொள்கிற விதம் ரசிக்கத்தக்கது. ‘தக தக தகவென ஆட வா…சிவ சக்தி சக்தியோடு ஆட வா’, ‘மாதா உன் கோயிலில் மணி தீபம் ஏற்றினேன்’, ‘பொம்ம பொம்ம தா…தைய தைய’ என தன் வயதை ஒத்தவர்களுடைய பால்ய காலங்களின் பாடல்களுக்கு வரிசையாக இயக்குனர் பாலா உயிரூட்டிக்கொண்டிருக்கிறார். கே.பி.எஸ்ஸோ, பெங்களூரு ரமணி அம்மாளோ அவர்களின் குரலும் இசையும் பாலா அமைத்த சிச்சுவேஷன்களில் கொஞ்சம் நிறம் மாறியிருக்கலாம். தீவிரமான சோகத்திலோ பக்தியிலோ நகைச்சுவை கலந்திருக்கலாம். ஆனால் இந்த நினைவூட்டல் அவசியம் என்றுதான் தோன்றுகிறது.

’சிறுபொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்’ என இளையராஜாவின் மென்மையை இசைப்புயலின் காலத்தில் நமக்கு நினைவூட்டிய சசிகுமாரும் அந்த வகையில் நன்றிக்குரியவர்தான்.

…….

காதலால் கைவிடப்பட்டவன் பெரும்பாலும் அம்மா செண்டிமெண்ட் பாடல்களில் அடைக்கலம் தேடுவான். மண்ணில் என்ன தோன்றக்கூடும் மழை இல்லாதபோது?…. மனிதனோ மிருகமோ தாயில்லாமல் ஏது?

……

‘சினேகிதனே ரகசிய சினேகிதனே’ பாடலை முதன்முதலாக கயத்தாறு கதிரேசன் சுடலைமாடல் கோயில் கொடையில் கேட்டேன். ’தனியே தன்னந்தனியே’ பாடலை ‘Who Am I?’ பார்க்கப்போன நாகர்கோவில் சக்ரவர்த்தி தியேட்டரில் இடைவேளை நேரத்தில் முதன்முதலாகக் கேட்டேன். ‘முன்பனியா முதல் மழையா?’ பாடலை ஊரில் ஆளற்ற பால்பண்ணையில் நண்பனோடு பேசிக்கொண்டிருந்த ஓர் இரவில் கேட்டேன். வாழ்நாள் முழுதும் நம்மோடு கூட வருகிற ஒரு பாடல் நம்மை வந்தடையும் தருணம் மறக்க இயலாததாகவே இருக்கிறது.

…….

’சுட்டும் விழிச்சுடரே பாட்டு நல்லாருக்குடா’ – நான். ‘எல்லாரும் அப்படித்தான் சொல்றாங்க. ஆனா உண்மைல ‘ஒரு மாலை இளம் வெயில் நேரம்’…இதுதாண்ணே கஜினில சூப்பர்’ என்றான் நண்பன். நல்ல பாடல் என்பதற்கு எந்த வரையறையும் இல்லை போல. அவரவருக்குப் பிடித்த பாடல் நல்ல பாடல்!

…..

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: