காட்சிப்பிழைதானோ?-2

உதயம் திரையரங்கின் பக்கவாட்டில் இரு சாலைகள் குழப்பமாகப் பின்னிக்கொள்ளும் ஒரு சந்திப்பு. மெட்ரோ ரயில் மேம்பாலத்தின் தூண் ஓரமாக உட்கார்ந்திருக்கிறார் கேமரா மேன். எதிரே வருகிற வாகனங்களின் சக்கரங்களை அவரது கேமரா பதிவு செய்துகொண்டிருக்கிறது. ஏறக்குறைய நடுரோட்டில் அவர் சம்மணம் போட்டு உட்கார்ந்திருப்பதை மிரட்சியான பார்வையோடு கவனித்துக்கொண்டு வாகன ஓட்டிகள் பறந்துகொண்டிருக்கிறார்கள். எங்களுக்குப் பின்னால் ஒரு அம்மா தன் பையனோடு சாலையைக் கடந்து செல்ல காத்திருந்தார். திடீரென்று எங்களை நோக்கி வேகமாக வந்தார். கேமராமேன் அருகில் வந்து, எட்டிப்பார்த்தார். அவர் மடியில் உள்ள கேமராவைக் கவனித்தவர், ‘சரி சரி’ என்று முணுமுணுத்துவிட்டு நகர்ந்தார். அவர் முகத்தில் கொஞ்சம் ஆசுவாசம், கொஞ்சம் சிரிப்பு. நான் வழக்கம்போல ‘டிவி நியூஸுக்காக ஷூட் பண்ணிட்டிருக்கோம்மா’ என்றேன். ‘ஏதோ குடிச்சிட்டு விழுந்து கிடக்குறான்னு நினைச்சிட்டேன்ப்பா’ என்றபடி பையனை இழுத்துக்கொண்டு சாலையைக் கடந்தார்.

………

மயிலாப்பூர் திருவள்ளுவர் சிலை பேருந்து நிறுத்தத்துக்குப் பின்னால் உள்ள குடிசைப்பகுதி. ஷூட்டுக்காக ஒரு பிற்பகலில் சுற்றிக்கொண்டிருந்தோம். சாலையை ஒட்டி ஒரு சின்ன பிள்ளையார் கோயில் தென்பட்டது. கிராமங்களில் உள்ள பம்பு செட் ரூம் அளவுக்குத்தான் இருந்தது. தூரத்திலிருந்தே என்னை அந்தக் கோயிலைக் கவனிக்க வைத்தவர் ஒரு தள்ளுவண்டிக்காரர். வண்டியிலிருந்து இறங்கி, கோயில் வாசலில் நின்றபடி உள்ளே பார்த்து பேசிக்கொண்டிருந்தார். ஒரு மதிய நேரத்தில் கோயிலைப் பார்த்து ஒருவர் பேசிக்கொண்டிருப்பது வித்தியாசமாகப் பட்டது. தள்ளுவண்டி சாலையை மறித்துகொண்டு நின்றது. அவர் லேசாக ஆடியதும் வாயை அவ்வளவாகத் திறக்காமலே பேசியதும் எனக்குள் அந்தக் கேள்வியைத் தூண்டின. ‘குடிச்சிருக்காரோ?’ அவரைக் கடந்துபோகும்போது கவனித்தேன். அந்தச் சின்ன கோயிலுக்குள் பிள்ளையாரோடு ஒரு பாட்டியும் உட்கார்ந்திருந்தாள். விறுவிறுவென பூ கட்டிக்கொண்டிருந்தாள். ’சரி நான் வரட்டுமா?’ என்று பாட்டியிடம் சொல்லிவிட்டு வண்டிக்காரர் நகர்ந்தார்.

……..

கேமராமேனைக் குடிகாரர் என்று நினைத்த அம்மா எவ்வளவோ மேல். அவர் குடிப்பழக்கத்தின் சீரழிவுகளைச் சாலைகளில் தினந்தோறும் பார்த்திருக்கிறார். நான் கூடுதலாக குடிப்பழக்கம் குறித்த கற்பிதங்களை வளர்த்து வந்திருக்கிறேன்.

………

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: