காட்சிப்பிழைதானோ-3

இரவில் வட பழனி நூறடி சாலையில் ஒரு குட்டி யானை வண்டி சென்றுகொண்டிருக்கிறது. நிறைய மூட்டைகளுடன் ஆண்களும் பெண்களுமாய் நெருக்கியடித்து உட்கார்ந்திருக்கிறார்கள். வெளியூரிலிருந்து வரும் அவர்களுக்குக் கோயம்பேடு சந்தையில் ஏதேனும் வேலை காத்திருக்கலாம். மொத்தம் ஆறு பேர். அந்த இளைஞனின் நெஞ்சில் வெறித்துக்கொண்டிருக்கிற சே குவேராவையும் சேர்த்துக்கொண்டால் ஏழு பேர்.

…..

பாம்பை ஒரு நொடி நினைவுப்படுத்திவிட்டு கற்களுக்கிடையே மறைகிறது பாம்புராணி.

……

கண்ணாடிப்பெட்டிக்குள் குண்டு குண்டாக அடுக்கப்பட்டிருந்த கேக் என் கைக்கு வந்து சேரும்போது ஒரு சுற்று இளைத்திருந்தது.

……

சிலம்புகளை வைத்துக் குழம்ப வைத்த காட்சிப்பிழை ஒரு வணிகனைக் கொன்று, ஒரு மன்னனைக் கொன்று, இறுதியில் ஓர் ஊரையே எரித்தது.

……

அந்தச் சிறிய பல் மருத்துவமனையின் வரவேற்பறையில் யாரும் இல்லை. ஒரு மூலையில் இருந்த கண்ணாடித்தொட்டிக்குள் வாயைத் திறந்தபடி நாலைந்து மீன்கள் அலைந்துகொண்டிருந்தன. சந்தேகத்துடன் உள்ளே நுழைகிற ஒருவனிடம் ஒரு மீன் விவரம் கேட்கத் தொடங்கியது.

…….

காக்கையின் முட்டைகளில் ஒன்றை உடைத்துக்கொண்டு ஒரு குயில் பிறக்கிறது. காட்சிப்பிழைக்கு நன்றி சொல்லி தனது முதல் பாடலைப் பாடுகிறது.

…..

செகண்ட் ஷோ பார்த்துவிட்டு வந்த அண்ணனுக்கு அம்மா உறக்கம் கலையாத கண்களுடன் கதவைத் திறந்தாள். என்றைக்கும் இல்லாத வழக்கமாக , ‘வாங்க’ என்று தன்னை அம்மா அழைத்ததை அந்த நேரத்தில் அண்ணன் ஆராயவில்லை. மறுநாள் நாளிதழ் படித்துக்கொண்டே அண்ணனிடம் கேட்டாள், ‘நேத்து உங்கூட வந்த மாரிமுத்து அப்படியே போய்ட்டானா?’. அண்ணனின் நண்பர் மாரிமுத்துவுக்குப் பக்கத்து ஊர். சில சமயங்களில் எங்கள் ஊர் திரையரங்கில் செகண்ட் ஷோ பார்க்க நேர்ந்தால், எங்கள் வீட்டில் தங்கிவிட்டு மறுநாள் காலை ஊர் திரும்புவார். அண்ணன் கவனமே இன்றி, ‘நான் மட்டும் தானம்மா வந்தேன்.’ என்றான். நாளிதழின் பக்கத்திலிருந்து அம்மா விடுபட்டாள்.  ‘இல்லையே…உனக்குப் பின்னால வெள்ளை வேட்டி சட்டை உடுத்திக்கிட்டு உசரமா ஒருத்தர் வந்தாரே…அது காளிமுத்துதானே?’ என்ற அம்மாவை அண்ணன் மெல்லிய கேலியுடன் பார்த்தான். ‘டேய்…உங்கூட ஒருத்தர் வந்தாருடா’ என்றாள் அம்மா உறுதியாக. அண்ணன் மௌனமானான். அம்மா முகத்தில் அச்சம் மெல்லிசாக ஓடியது. நீண்டதொரு மூச்சை விட்டபடி, ‘அந்த சுடலமாடன் சாமிதான் உன் துணைக்கு வந்திருப்பாரு’ என்று சொல்லி முடித்தாள்.

……..

அது அவன் நான்காம் வகுப்பு படித்த காலகட்டம். மதிய உணவு இடைவேளையில் வயிறு நிறைய சாப்பிட்டு முடித்துவிட்டு அவனும் அவனுடைய நண்பனும் சண்டை போட்டு விளையாடிக்கொண்டிருந்தார்கள். ப்ஸ்க்கா ப்ஸ்க்கா டிஷ்யூம் டிஷ்யூம். பள்ளித்தலைவன்(ஸ்கூல் லீடர்) இருவரையும் பிடித்து தலைமை ஆசிரியர் பெதலீஸ் சாரிடம் கொண்டுபோய் நிறுத்திவிட்டான். அவரது மேஜையில் இருக்கும் ரூல் தடி எப்போதும் பளபளவென்று இருக்கும். அந்தப் பளபளப்புக்குப் பின்னால் சிவக்க சிவக்க அதில் அடிவாங்குகிற பல மாணவர்களின் உள்ளங்கைகள் இருந்தன. விளையாட்டுக்குச் சண்டை போட்டால் கூட தப்பாய்யா? மனம் புலம்பியது.   ‘ரெண்டு பேரும் கட்டிப்புரண்டு சண்டை போடுறாங்க சார்’ என்று தலைவன் சொல்ல, ‘சும்மா விளையாட்டுக்குத்தான் சார்’ என்று நாங்கள் இழுக்கிறோம். ‘என்னடா விளையாட்டுக்கு?’ என்றபடி எங்கள் இருவர் கையிலும் ரூல் தடியால் கோடு போட்டார். அடி வாங்கி முடித்த பின், கையைத் தேய்த்துக்கொண்டே முனங்கினேன், ‘விளையாட்டுக்குத்தான் சண்டை போட்டோம்!’  ரூல் தடியை மேஜையில் போட்ட ஆசிரியர் முகத்தில் சின்னதாக ஒரு குழப்பம். ‘விளையாட்டுக்கா?’ என்று அவர் கேட்க, கண்களில் நீருடன் ‘ஆமாம் சார். விளையாட்டுக்குத்தான்.’ என்றேன். ‘அட பாவிகளா, நீங்க உண்மையாவே சண்டை போட்டதா நினைச்சுல்லா உங்களை அடிச்சிட்டேன்’ என்று வேதனையில் சிரித்தார். பள்ளித்தலைவன் அதே விறைப்புடன்  நின்றுகொண்டிருந்தான்.

……

’சனியனே, நீ சாகுறதுக்கு என் லாரிதான் கிடைச்சுதா?’

‘நான் ரெண்டு சைடுலயும் மோட்டார் சைக்கிள் வருது..நடுவுல புகுந்து போய்டலாம்னு நினைச்சேங்க’-தமிழ் சினிமாவில் மறக்கவே முடியாத ஒரு காட்சிப்பிழை தருணம்.

……

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: