குடிச்சிருக்கீங்களா?

வழக்கம்போல அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு பைக்கில் திரும்பிக்கொண்டிருந்தேன். பின்னால் என் நண்பன் அமர்ந்திருந்தான். வழியில் உதயம் திரையரங்கைக் கடந்துதான் போக வேண்டும். திரையரங்கின் இன்னொரு பக்கம் டாஸ்மாக் கடை ஒன்று இருக்கிறது. இந்தக் கடையின் மாடியில் உள்ள பார் கே.கே.நகர் வட்டாரத்தில் மிகவும் பிரபலம்.

அசோக் பில்லர் சிக்னலுக்கு இடப்பக்கம் திரும்ப முயன்ற எங்களை ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் தூரத்திலேயே வண்டியை ஓரங்கட்டச் சொல்லும் பாவனைகளுடன் நிறுத்தினார். ‘வசமா மாட்டிக்கிட்டீங்களா?’ என்ற உற்சாகம் அவர் கண்ணில் தெரிந்தது. ‘குடிச்சிருக்கீங்கள்ல?’ என்றார். இல்லை என இருவரும் தலையசைத்தோம். ‘அதெப்படி? கடைலர்ந்து வர்றதை நான் பார்த்தேனே?’ என்றார். எனக்குக் கோபமும் வந்தது. சிரிப்பும் வந்தது. ‘இல்ல சார்…நாங்க நிஜமாவே குடிக்கல’ என்று காட்டமாகச் சொன்னோம். ‘அப்போ ஏன் கடைப்பக்கம் இருந்து வந்தீங்க?’ என்று அவர் கேட்க, ‘ஏன் சார், தியேட்டரை ஒட்டி திரும்புறவங்க எல்லாருமே அந்தக் கடைல குடிச்சிட்டுத்தான் வர்றாங்கன்னு நினைச்சா எப்படி?’ என்றேன். கொஞ்சம் ஏமாற்றம் அவர் முகத்தில் தெரிந்தது.

தனி ஆளாக நிற்கும் கையறுநிலையோ என்னவோ. சட்டென்று இறுக்கம் தளர்ந்து சிரித்தார். ‘என்ன சார் பண்ணச் சொல்றீங்க? இந்நேரம் டூட்டி முடிஞ்சு நான் கிளம்பியிருக்கணும். கேஸ் ஒண்ணும் கிடைக்கல. நீங்க இந்தப் பக்கமா வந்தீங்களா…அதான் குடிச்சிருப்பீங்கன்னு நினைச்சேன்’ என்று சர்வ சாதாரணமாகச் சொன்னார். பலவீனமான பேட்ஸ்மேன்களை ரொம்ப பக்கத்தில் நின்று அவுட் ஆக்குவதைப் போல, அந்த பாரிலிருந்து திரும்புபவர்களை சிக்னலிலேயே நின்று மடக்கிவிடுவார் போலிருக்கிறது. ஒரு ரயில் சினேகத்திற்கான சிரிப்புடன் எங்களுக்கு விடைகொடுத்தார். கொஞ்சம் பேசியிருக்காவிட்டால் நாங்கள் அன்று ‘ட்ரங்க் அண்ட் ட்ரைவ்’ கேஸ்தான். நாலு எட்டு வைத்து சாலையைக் கடந்தால், அந்த பார் வாசலுக்குப் போய்விடலாம். பாரில் குடித்துவிட்டு வருபவர்களைக் கொத்தாக அள்ளலாம். பாவம்…அவருக்கு அது தோணல போல.

இரவில் குடித்துவிட்டு உதயம் திரையரங்கைக் கடப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கவும். குடிக்காமல் கடப்பவர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் செல்லவும்.
…….
நானும் நண்பனும் அலுவலக வேலைக்காகக் கோவை சென்றுவிட்டு நள்ளிரவில் திரும்பியிருந்தோம். அன்றைக்கு விநாயகர் சதுர்த்தி. நண்பரை வேளச்சேரியில் உள்ள அவரது அறையில் விட வேண்டும். கிண்டியிலிருந்து வேளச்சேரி செல்ல எங்கள் பைக் ஒரு சிக்னலில் யூ டர்ன் அடித்தபோது, சரசரவென்று காவல்துறையினர் இருவர் எங்களை நிறுத்தினார்கள். விநாகயர் சதுர்த்தியை ஒட்டி காவல் துறை வழக்கமாக செய்யும் கெடுபிடிகள் தான் என்று முதலில் நினைத்தேன். மிகவும் வழக்கமான ‘ட்ரங்க் அண்ட் ட்ரைவ்’ தேடல்தான் என்பது சில நொடிகளிலேயே புரிந்துவிட்டது.

எங்களை நிறுத்திய கான்ஸ்டபிள்களில் ஒருவர் என்னைப் பார்த்து ‘குடிச்சிருக்கீங்களா?’ என்று தமிழ் சினிமாக்களிலும் சீரியல்களிலும் வருகிற மனைவிகள் போல ஆரம்பித்தார். ‘சார், ஆபீஸ் வேலையா கோயம்புத்தூர் போய்ட்டு வர்றோம். ஒரு டிவி சேனல்ல வொர்க் பண்றோம்…..’. என்று திடீரென ஒரு எரிச்சலை எதிர்கொள்ளும் சங்கடத்தோடு விளக்கினோம். ஓரளவுக்கு மேல் எதுவும் விசாரிக்க இயலாத கான்ஸ்டபிள் என்னைச் சில நொடிகள் உற்றுப்பார்த்தார். ‘உங்க முகத்தைப் பார்த்தா குடிச்சிருக்குறது மாதிரியே இருக்கு’ என்றார். ‘என் முகம் பார்க்க அப்படித்தான் இருக்கும்’ என்றேன்.
அதிருப்தியோடு எங்களைப் போகச் சொல்லி கையைக் காட்டினார்.

’எங்கிட்ட இருக்குற பணமா, என் குணமா இல்ல அழகா… எது உன்னை ஹெவியா அட்ராக்ட் பண்ணிச்சு?’ என்று ஸ்நேக் பாபு பாணியில் எனக்குள் ஒரு கேள்வி. எம்மூஞ்சில உள்ள என்ன அம்சம் அந்த போலீசை அப்படி நினைக்க வச்சிருக்கும்? (இதுக்குத்தான் எப்பவும் ஷேவ் பண்ணி நீட்டா இருக்கணும்ங்கிறது?)
……
பாலத்துக்கு அடியில் ஒரே இருட்டு. இரு நிழல் உருவங்கள் நின்றுகொண்டிருந்தன. உற்றுப்பார்த்தால் மழை கோட் அணிந்த இரு காவல் துறை நண்பர்கள். என் வண்டியை நிறுத்தி ‘ஊதுங்க’ என்றார் ஒருவர். ‘குடிக்கல…’ என்று தொடங்கி விளக்கம் கொடுக்க வாய்ப்பே இல்லை. நானும் கொஞ்சம் களைப்பாக இருந்தேன். ‘கண்டிப்பா ஊதணுமா?’ என்றேன். ‘ம்ம்…’ என்று இறுக்கம் காட்டினார். நான் ஊத தயார் ஆக, அவரும் தயார் ஆனார். அடிவயிற்றிலிருந்து சக்தியை எல்லாம் திரட்டி, ஒரு ஊது ஊதினேன். ஞானம் அடைந்தது போல அவர் முகத்தில் ஒரு அமைதி. வெகு நேரமாகப் பசியோடு இருந்தேன். வாயைத் திறந்தால் நாற்றம் அடிப்பதை என்னாலேயே உணர முடிந்தது. காக்கிச்சட்டை நண்பரிடம் வார்த்தையே இல்லை. ‘போகலாம்’ என்று தலையை மட்டும் அசைத்தார். ஊது என்று மிரட்டலாகச் சொல்ல வேண்டியது. நம்மை நோக்கி முழுசாக முகத்தைக் காட்டவும் முடியாமல் அரைவெட்டாக காட்ட வேண்டியது.
எனக்கு அவரை நினைத்து முதலில் சிரிப்புதான் வந்தது. உண்மையில் அவர் நிலைமை பரிதாபத்துக்கு உரியது என்பதும் புரிந்தது. ஒரு இரவில் அவர் எத்தனை வீச்சங்களை சகித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது? பத்து பேருக்கு ஒன்று என பிடிபடுகிற ஒரு மதுவின் வாடைக்காக. ப்ரீத்தலைசர் கருவியைச் சில இடங்களில்தான் பார்க்க முடிகிறது. பாவம்..போலீஸ்கார்!
………
சென்னையில் ஒருநாளைக்குக் குறைந்தபட்சம் 150 ட்ரங் அண்ட் ட்ரைவ் கேஸ்கள் பிடிக்கப்படுவதாக ஒரு சமூக ஆர்வலர் சொன்னார். அந்த நடவடிக்கைக்குப் பின்னால் இப்படி சில கறுப்பு காமெடிகளும்(ப்ளாக் க்யூமர்) இருக்கின்றன.

இன்னொரு செய்தி. ‘குடிக்குறவங்க…குடிக்குறவங்கன்னு அதென்ன பிரிச்சுப்பேசிட்டே இருக்குற…நீ குடிச்சதே இல்லையா?’ என்று உங்களுக்குள் ஒரு கேள்வி எழுந்திருக்கும். நல்ல கேள்வி. நான் குடிக்காதவன் இல்லை. குடிக்க வாய்க்காதவன். எனக்கும் குடிப்பழக்கத்துக்கும் ஏனோ தொடக்கத்திலிருந்தே ஒத்துப்போகவில்லை. ‘கழுதைய எதுக்கு கஷாயம் குடிக்குற மாதிரி கஷ்டப்பட்டு முழுங்கணும்’ என்று விட்டுவிட்டேன். அவ்வளவுதான்.

என் கட்சிக்காரர் ‘ஆட்டோகிராப் சேரன்’ கணக்காக மட்டை ஆன காலங்களில் கேட்க வேண்டியதை எல்லாம்… இப்போது காவல்துறையினர் துளைத்துத் துளைத்து கேட்டால் அவர் என்னாவார் யுவர் ஆனர்?

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: