காட்சிக்குறிப்புகள்

முக்கால்வாசி ஷட்டர் இறங்கிய கடைக்குள் இரு கால்கள் மட்டும் தெரிகின்றன. முன்னும் பின்னும் நகரும் கால்களோடு ஒரு ’மாப்’பும் சேர்ந்து வேகமாக நகர்ந்துகொண்டிருக்கின்றது. முகப்பேரில் உள்ள மிட்டாய்க்கடையின் தரையை மணிப்பூரிலிருந்தோ அஸ்ஸாமிலிருந்தோ வந்த கால்கள் துடைப்பது ‘ஸ்வச் பாரத்’தில் சேருமா?

……

அவசரத்தில் விழுங்கப்பட்ட முள் மீன் போலவே தொண்டையைக் கடந்து சென்றது. தொண்டையும் மீனைப் போலவே உள்ளே தள்ளியது. தப்பிச்சேன்!

…..

’சாமிக்கிட்ட வேண்டிக்கோ’ என்று சன்னதியில் என்னோடு நிற்கும் ஏழு வயது மகளிடம் சொல்கிறேன். அவள் சன்னதியை நோக்கி ஒரு நொடி கண்ணை மூடித் திறக்கிறாள். வேண்டுதல் முடிந்தது.

…..

கோயிலுக்குள் கூட்டத்தைப் பொருட்படுத்தாமல் செருப்பு போடும் மூலையில் ஒரு கறுப்புநிற நாய்க்குட்டி விளையாடிக்கொண்டிருக்கிறது. அதைக் கவனித்துக்கொண்டிருக்கும்போதே இன்னொரு நாய்க்குட்டி அதே நிறத்தில் வந்து அதன் மேல் விழுகிறது. சில நொடிகளில் எங்கிருந்தோ இன்னொரு நாய்க்குட்டி வந்து இதுகளோடு இணைந்துகொள்கிறது. அதுவும் கறுப்பு நிறம். வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிற மகள் சந்தோஷத்தில் கைதட்டி சிரிக்கிறாள். நாய்க்குட்டிகள் நமக்கு அறிமுகமாக வேண்டிய ‘க்ளாசிக்’கான முறை இதுதானோ?

……

ஆள் தெரியாத திருப்பத்தின் நடுவே என் பைக்கும் அவனது பைக்கும் எதிரெதிரே தரையைத் தேய்த்துக்கொண்டு நின்றன. ஒரு நொடி இடைவெளியில் ஒரு மோதல் தவிர்க்கப்பட்டிருக்கிறது. ‘ஒண்ணுமே நடக்கல’ என்பதுபோல நானும் கிளம்பினேன். அவனும் கிளம்பிவிட்டான்.

…..

அவன் அந்தப் புத்தகத்தை ஒரு இரவில் கையில் எடுத்தான். அவள் அடுத்த நாள் காலையில் கவனித்தபோது, புத்தகம் சோபாவில் இருந்தது. இன்னொரு காலையில் டிவி பெட்டி மேல் அமர்ந்திருந்தது. வேறொரு காலையில் நாற்காலி மீது ஏறியிருந்தது. மற்றொரு முறை சமையலறை மேஜை மீது இடம்பிடித்திருந்தது. ஒருநாளும் உறக்கம் கலையாத அவன் அருகில் புத்தகம் இருந்ததில்லை. ஆனால் அவனிடமிருந்துதான் அது செல்கிறது. அவனுக்கும் புத்தகத்துக்கும் கூடவே அவளுக்கும் இடையே ஒரு விளையாட்டும் இப்படியாக நடக்கிறது.

……

ஏதோ விபத்தில் அடிவாங்கிய லேண்ட் ரோவர் கார் சாலையைக் கடக்கிறது, கருப்பு நிற பாலித்தீன் கவரால் தன்னைப் பாதி மறைத்துக்கொண்டு. கெட்டாலும் மேன்மக்கள்?

…..

நேற்று கேத்ரினா கைஃப் மோகத்தில் தோய்ந்த குறுஞ்சிரிப்போடு மாம்பழ ஜூஸ் குடித்தார். இன்று அதே மோகத்தோடு குளியலறையின் டைல்ஸ் சுவர்களைத் தடவிக்கொடுக்கிறார். கேத்ரினாவின் மோகம் அடுத்து எதன் மீதோ?

……

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: