தூசு

அலுவலகத்திலிருந்து வீட்டுக்குச் செல்லும்போது திருமங்கலம் சிக்னல் வழியே செல்வதை அண்மைக்காலமாக அவன் தவிர்த்து வருகிறான். சில சமயங்களில் ஊசியாய் முகத்தில் குத்தும் மழைபோல அங்கே எழும்புகிற தூசிதான் காரணம். இதை யாரேனும் நம்புவார்களா?
…..
மெட்ரோ ரயிலுக்காக மாற்றுப்பாதை என்ற பெயரில் தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் விதத்தில் பயணம் செய்ய விதிக்கப்பட்டவர்கள், பணியிடங்களுக்குத் தாமதமாகச் சென்று வசை வாங்கியவர்கள், சம்பளம் பிடிக்கப்பட்டவர்கள், குண்டுகுழிகளில் சமநிலை தவறி விழுந்து அடிபட்ட இரு சக்கர வாகன ஓட்டிகள், கூடுதலாகிவிட்ட போக்குவரத்து நெருக்கடியின் சூத்ரதாரியைப் புரிந்துகொள்ளாமல் ஒருவரை ஒருவர் பகைத்துக்கொண்டவர்கள், இடி விழுந்ததுபோன்ற ஓசைகளைத் தினமும் கேட்டுப் பழக்கப்படுத்திக்கொண்டவர்கள், லாரிகளும் ஜேசிபி வண்டிகளும் வாரி இறைத்த புழுதியைச் சுவாசித்து துன்புற்றவர்கள் போன்றவர்கள், அங்கே பணிபுரிவதாலேயே இத்தனை அல்லல்களையும் முதல் ஆளாய் அனுபவித்த வெளிமாநிலத் தொழிலாளர்கள் ஆகியோர் மெட்ரோ ரயில் தொடங்கும் நாளில் கொண்டாட்டத்துக்கிடையே யாராலாவது நினைவு கூறப்படுவார்களா?
…..
இருண்ட வீட்டுக்குள் கூரையின் ஓர் ஓட்டை வழியாக நேர்கோடென சூரிய ஒளி வந்திறங்கும். அதன் இரத்த ஓட்டம்போல ஊடாக மெல்லிய துகள்கள் நடனமாடும். எனக்கு அறிமுகமானபோது தூசி அழகாகத்தான் இருந்தது.
……
மேட்டூரில் ’ரௌத்ரம் பழகு’ தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான ஒரு படப்பிடிப்புக்காகச் சென்றிருந்தபோது, ஒரு அம்மா தங்கள் வீட்டுக்குள் எங்களைக் கூட்டிச் சென்றார். வெகுநாட்களாக பூட்டி வைக்கப்பட்டிருந்த அறை எங்களுக்காகத் திறக்கப்பட்டது. உள்ளே போய்விட்டு வந்த அவர் தன் பாதங்களைக் காட்டினார். பாதங்களில் கறுப்பு நிறத்தில் தூசு படிந்திருந்தது. மொட்டை மாடியில் காயப்போட்ட துணிகள் மீதும் தூசு. அவரது மருமகளுக்குக் குழந்தை பிறந்த சில மாதங்களில் சுவாசக்கோளாறுகளால் அல்லப்பட்டதாம். வீட்டுக்கு அருகிலேயே ஒரு தொழிற்சாலை அவ்வப்போது ஓலமிட்டுக்கொண்டிருக்கிறது. மேட்டூர் தொழில் வளர்ச்சி பெற்ற ஒரு நகரம் என்று மட்டும்தான் நான் படித்த பாடப்புத்தகங்களில் சொல்லப்பட்டிருந்தது.
…..
பொது இடங்களில் தூசி கிளம்புவது உலக வழக்கமா என்று பார்ப்பதற்காகவாவது அயல்நாடுகளுக்குச் செல்ல வேண்டும்.
……
மின்விசிறி சுழன்றுகொண்டே இருக்கிறது. தூசி இறக்கைகளில் படிந்துகொண்டே இருக்கிறது. இந்த வியப்பு ஒருநாள் என் செல்போனைக் கழற்றிப்பார்த்தபோது, பேட்டரிக்குப் பின்னால் படிந்திருந்த தூசியைப் பார்த்ததும் அப்படியே காணாமல் போனது. நாம் தூசியின் பிடியில் இருக்கிறோம்.
…..
இரவு நேரத் தூசியை ஊடுருவியபடி வந்துகொண்டிருக்கும் லாரியின் முகப்பு வெளிச்சத்தில் ஒரு முதியவர் இறைவன் போல காட்சியளிக்கிறார்.
….
என் ஊரில் வாழைப்பழக்கடை வைத்திருந்த தூசிச்செட்டியாருக்கு அப்படி ஒரு பெயர் எப்படி வந்ததோ?
…..
முதலாளி திடீரென எங்கள் அறைக்குள் நுழைந்தார். கணிப்பொறிகள் மேல் அவரது பார்வை பட்டது. ‘ஏன்யா சிஸ்டத்துல இப்படி தூசு படிஞ்சிருக்கு?’ என்று ஒரு ஆப்பரேட்டரைப் பார்த்துக் கேட்க, ‘ஒழுங்கா க்ளீன் பண்ண மாட்டேங்குறாங்க’ என்றார். ‘ஏன் பியூன்தான் தூசியைத் துடைக்கணுமா?’ என்று முதலாளி சிரித்தபடி ஆணியை இறக்கினார். சக தொழிலாளி தர்ம சங்கடத்தில் சிரித்தார். கம்யூட்டரில் பணிபுரியும் ஆப்பரேட்டர் தூசியைத் துடைக்கலாம். தூசியைத் துடைத்துத்தான் ஆக வேண்டும் என்று பணியிடம் கட்டாயப்படுத்த முடியுமா? அன்றைய தூசி கிளப்பிய கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை.
….
ஒரு பழைய படத்தில் வில்லன் அழகான பெண்களைப் பார்க்கும்போதெல்லாம் தன் எடுபிடியிடம் சொல்வார், ’கண்ல தூசி விழுந்துருச்சுடா.’
…..
நானும் நண்பர் வெற்றிவேல் சந்திர சேகரும்(இப்போது அவர் தமிழில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க ஆவணப்பட இயக்குனர், தொலைக்காட்சி தொடர்களுக்கான எழுத்தாளர், எல்லாவற்றுக்கும் மேலே ஒரு நல்ல பத்திரிகையாளர்) ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்த காலம் அது. ஒன்றாய் இரு சக்கர வாகனத்தில் சுற்றுவோம். நக்கலும் நையாண்டியுமாகப் பேச்சு களைகட்டும். அலுவலகத்திலிருந்து கிளம்பிய வண்டி ஏதேனும் டீக்கடையில் நிற்கும்போது, நரநரவென்று வாயில் மண் தட்டுப்படும். அவரும் அதே அவஸ்தையுடன் தெரிவார். கடையில் தண்ணீர் கேட்டு கபகபவென கொப்பளிப்போம். ‘வாயிலே மண் அள்ளிப்போடுறதுதான் இதுதான் போல’ என்று சிரித்துவிட்டு, தேநீருக்குப் பின் மீண்டும் கிளம்புவோம். வாயில் மண்ணை அள்ளிப் போட்டுக்கொள்ள.

கண்கள் கலங்கியதை மறைக்க விரும்புகிற தருணங்களில், ‘ஒண்ணும் இல்ல…ஏதோ தூசி விழுந்துச்சு’ என்று நழுவுகிற சந்தர்ப்பம் சினிமாக்களில் மட்டும்தான் சாத்தியம் என நினைத்தேன். இல்லவே இல்லாத தூசி என் கண்ணிலும் விழுகிற வரைக்கும்.
…..

தொண்டையில் உருளும் சளியைக் காறித் துப்பத் தெரியாத மூன்று வயதுக்குழந்தைக்கு நெபுலைசர் கொடுத்துவிட்டு மருத்துவர் சொல்கிறார், ‘குழந்தை மேல டஸ்ட் படாம பார்த்துக்குங்க.’ தூசு மண்டலத்தில் தொலைந்துபோன நகரத்தின் ஓர் இண்டு இடுக்கில் வசிக்கும் பெற்றோர் ஒருவரை ஒருவர் பரிதாபமாகப் பார்த்துக்கொள்கிறார்கள்.
…..
‘டேய்…அவன்லாம் என் கால் தூசுக்குச் சமானம்’ என்று இந்த நேரத்திலும் யாராவது பேசிக்கொண்டுதான் இருப்பார்கள் இல்லையா?

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: