இப்போ நாங்க ஹேப்பியா இருக்கோம்!

‘சுருதி, மாமாவுக்குப் பாட்டு பாடிக் காமி’ என்று என் மச்சான் சொல்ல, சுருதி தயாராகிறாள். பெரும்பாலும் தனது திறமை மற்றவர்களுடைய பொழுதுபோக்கின் பொருட்டு சோதிக்கப்படும் சந்தர்ப்பங்களில் சுருதி நாக்கை நீட்டிக் காட்டிச் சிரிப்பாள். ‘வேற வேலைய பாருங்க’ என்பது அதன் பொருள். இந்த முறை முரண்டு பிடிக்காமல் உற்சாகமாகப் பாடத் தொடங்கினாள். ‘ச…ரி…க…ம…ப..த…நீ….சா…… ’ என சுருதி பாட, நானும் உற்சாகம் அடைந்தேன். மறுபடியும் ‘சரிகமபதநி.’ மச்சான் முகத்தில் பெருமிதம். வாய்ப்பாட்டு வகுப்புக்குப் போகும் என் மகளோடு இரு மாதங்களாக சுருதியும் சென்று வருகிறாள். நன்றாகப் பாடுகிறாளாம்.
சட்டென்று சுருதியின் பாடல் முடிகிறது, ‘சரிகமபதநி…வாடா வாடா பன்னி மூஞ்சு வாயா!’ ‘இதை நீங்க எதிர்பார்க்கலைல?’ என்பதுபோல சுருதி கலகலவென சிரிக்கிறாள். அவளைத் தூக்கிக் கொஞ்சுவதைத் தவிர, எனக்கு வேறு எதுவும் தோன்றவில்லை. அவளோ கையில் சிக்காமல் ஓடுகிறாள்.
…..
இருக்கைகளின் வகைகள்தான் அன்று ஆதிரா எழுத வேண்டிய பாடம். நாற்காலி, மேசை, ஸ்டூல், சோபா போன்ற வார்த்தைகளை நோட்டுப்புத்தகத்தில் எழுதிக்கொண்டிருந்தவளுக்கு அவ்வப்போது குழப்பம் வருகிறது. ‘ஆதி…சேர்ன்னு சொல்றோம்ல அதான் நாற்காலி. நாலு கால் இருக்குறதால நாற்காலின்னு சொல்றோம்…மூணு கால் இருந்தா முக்காலி….’ என அவளுக்கு விளக்கத் தொடங்கினேன். ‘ரெண்டு கால் இருந்தா ரெக்காலியா?’ என்று ஆதிரா கேட்க, கொஞ்சம் திகைத்துவிட்டு ‘ரெண்டு கால் இருந்தா எப்படி அது தரைல நிக்கும்? எப்படி நாம உட்கார முடியும்?’ என்றேன் அசட்டுச் சிரிப்புடன். அவளது அடுத்த கேள்வியைச் சில நொடிகளிலேயே நான் யூகித்துவிட்டேன். நான் சமாளிப்பதற்குள் காலம் கடந்துவிட்டது. ‘ஒரு கால் இருந்தா ஒக்காலியா?’, அப்பாவியாகக் கேட்டாள் ஆதி. அலைபேசியில் பேசிக்கொண்டிருந்த மனைவி பேச்சை ஒரு நொடி நிறுத்திவிட்டு, ‘இதுக்குப் பதில் சொல்லுங்க பார்ப்போம்’ என்ற தொனியில் சிரித்தாள். நான் மீண்டும் சமாளிக்க ஆயத்தம் ஆனேன்.
……
‘என்ன சாப்பிடுறடா?’ என்று ஆதியிடம் கேட்டேன். முகப்பேரில் உள்ள ஓர் உணவு விடுதிக்கு நானும் அவளும் சென்றிருந்தோம். பெரிய மனுஷி போல மெனு கார்டை வாங்கிப் பார்த்தாள். அவளுக்கு சிக்கன் 65உம், இறால் ஃப்ரைடு ரைஸும். 10 நிமிடங்கள் கடந்திருக்கும். உணவு வரவில்லை. ‘பசிக்குது டாடி்’ என அவ்வப்போது ஆதி சொல்லிக்கொண்டே இருந்தாள். ‘இருடா, நிறைய பேரு சாப்பிட வந்திருக்காங்க. ஒருத்தர் ஒருத்தராதானே ரெடி பண்ணிக் கொடுக்க முடியும்’ என்றேன். ஆதி சிரித்துக்கொண்டே சொல்கிறாள், ‘இல்லியே…சமைக்குறவங்களுக்கெல்லாம் பத்து கை இருக்குறதா சொல்றாங்களே?!’ விடுதியின் உரிமையாளருக்கே உரிய தொனி கேள்வியில் இருந்தது. எனக்குச் சிரிப்பு வந்தது. கொஞ்சம் பயமும் வந்தது. குழந்தைகள் எதையெல்லாம் பெரியவர்களைப் பார்த்துக் கற்றுக்கொண்டு விடுகிறார்கள். இனி இவளை வைத்துக்கொண்டு யாரையும் கலாய்க்கக் கூடாது சாமி.
……..
சுருதியின் இன்னொரு வீடு, பக்கத்திலேயே வசிக்கும் ஹரியின் வீடு. இருவரும் அந்தளவுக்கு இணை பிரியாத நண்பர்கள். சாயங்காலம் சுருதி ஹரியின் வீட்டுக்கு விளையாடப் போனால், இரவு ஒன்பது மணிக்கு மேல்தான் அம்மா அப்பாவுக்கு நேரம் ஒதுக்க முடியும். கடைசியில் அழுகையின் ஊடே தரதரவென வீட்டுக்கு அழைத்து வரப்படுவாள். ஒருநாள் நான் சுருதியின் வீட்டுக்குப் போயிருந்தபோது அவள் உம்மென்று உட்கார்ந்திருந்தாள். ஹரி அவளை அடித்துவிட்டானாம். ’இனி அவன் கூட சேராத…என்ன…நம்ம வீட்டுக்குள்ளயே விளையாடு’ என்று ஆளுக்கு ஆள் சமாதானப்படுத்தினோம். சுருதி மௌனமாகத் தலையாட்டினாள்.
அடுத்த நாள் போனபோது ஹரியின் வீட்டிலிருந்து சுருதியின் குரல் கேட்டது, ‘ஹாய் மாமா!’ அடிக்கடி ஹரியோடு கைகோத்துக்கொண்டு வீட்டுக்கு வந்து என்னைப் பார்த்துவிட்டுப் போனாள். ‘நேத்து ரெண்டு பேரும் சண்டை போட்டீங்க?’ என்று நாங்கள் சுருதியிடம் விளையாட்டாகக் கேட்க, அவள் முகம் கொள்ளாத சிரிப்போடு சொல்லிக்கொண்டே இருந்தாள், ‘ஹரி சாரி சொல்லிட்டான். இப்போ நாங்க ஹேப்பியா இருக்கோம்…இப்போ நாங்க ஹேப்பியா இருக்கோம்!’

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: