இரவுப்பூனை

சமையலறை மேசையில் மீன் குழம்பு இருக்கிறது. ரசம் இருக்கிறது. வாழைத்தண்டு துவரன் இருக்கிறது. மாங்காய் ஊறுகாய் இருக்கிறது. காரச்சேவும் இருக்கிறது. எதிர்வீட்டுக் குழந்தையின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் மிச்சமாக ஒரு கேக் துண்டும் இருக்கிறது. நள்ளிரவில் வீடு திரும்பியவனுக்கு இதையெல்லாம் பார்த்து திகைப்பாக இருக்கிறது.
…..
மேல்வீட்டுக்காரர்கள் பால்கனியில் வளர்க்கும் லவ் பேர்ட்ஸ் பகலை விட இரவில் என் கவனத்தை ஈர்க்கின்றன. காவல் அற்ற இரவைக் கணக்கில் கொண்டு ஒரு பூனை அவற்றைச் சீண்ட வரும். இயன்ற மட்டும் கூண்டுக்குள் கால்களால் துழாவும். பறவைகள் கீச்சிடும். சிறிது நேரம் கூண்டை வெறித்துப் பார்த்துவிட்டு பூனை மீண்டும் முயலும். மீண்டும் கீச் கீச் சத்தங்கள். மெல்ல மெல்ல சத்தம் நின்றுவிடும். பூனை நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு போய்விடும்போல. ஒவ்வொரு இரவிலும் பூனையின் தயவில் இந்த நாடகம் நடக்கும்.
ஆரம்பத்தில் ஒரு நாள் பறவைகளின் படபடப்பு பொறுக்காமல் மேலே போய் விரட்டினேன். ஒரு நிழலென பூனை விலகி ஓடியது. முகம் காட்டாத ஒரு திருடன் நம்மிடமிருந்து சரசரவென நழுவி ஓடுவதே பெரும் அச்சத்தைத் தரக் கூடியதாகத்தான் இருக்குமென தோன்றியது.
இரவுப்பூனையைப் பற்றி வீட்டுக்காரரிடம் சொன்னேன். ‘அது வரும் சார். கூண்டுல கேப்பே கிடையாது. அதால ஒண்ணும் பண்ண முடியாது’ என்று புன்னகையோடு சொன்னார். இந்தப் பேருண்மை லவ் பேர்ட்ஸுக்குத் தெரிய வேண்டும்.
…..
நள்ளிரவில் ஒரு சன்னல் கதவு சத்தமின்றி அடைக்கப்படுகிறது.
….
போக்குவரத்து குறைந்துவிட்ட நள்ளிரவிலும் ஒரு சிக்னல் தன் கடமையைச் செய்துகொண்டிருக்கிறது. எரியும் சிவப்பு விளக்கை மதிக்கவா, கடந்துபோகவா என்ற குழப்பத்துடன் என் இரு சக்கர வாகனத்தை நிறுத்துகிறேன். ஆளற்ற சாலையில் வருகிற கொண்டாட்டத்தோடு எனக்குப் பின்னால் அசுர வேகத்தில் வருகிற லாரி என்னைப்போலவே நிற்கலாம். என்னை அடித்து எறிந்துவிட்டு பயணத்தைத் தொடரவும் செய்யலாம்.

ஒவ்வொரு இரு சக்கர வாகனமும் தேடித் தேடி நிறுத்தப்பட்டு சோதனை நடந்துகொண்டிருக்கிறது. தற்செயலாகச் சென்ற ஒரு பேருந்தின் வால் பிடித்தபடி சென்று வாகன சோதனையைத் தவிர்க்கிறேன். இன்னும் இரண்டு இடங்களைக் கடக்க வேண்டும். ஏதிலிகளின் வலியை இரவுகளும் தங்கள் பங்குக்கு உணர்த்திச் செல்கின்றன.
….
ஏடிஎம் மையத்திற்குள் ஒரு காவலாளி உறங்குகிறார். சாத்தப்பட்ட கண்ணாடிக்கதவில் ஏசி குளிர் திட்டு திட்டாக வழிகிறது. சில நேரங்களில் நம்மைப் பொறாமைக்குள்ளாக்கச் சின்னச் சின்ன விஷயங்களே போதும்.
…..

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: