பறக்கும் யானைக்குட்டி

ஒரு காட்டுல ஒரு யானைக்குட்டி இருந்துச்சு. அம்மா அப்பாவோட சந்தோஷமா இருந்துச்சு. ஒருநாள் என்ன நடந்துச்சுன்னா… சில மோசமான மனுசங்க வந்து யானைகளை எல்லாம் விரட்டிட்டாங்க. அதோட வீட்டைப் பிடிங்கிகிட்டாங்களாம். பாவம், யானைக்குட்டி ஒரே நாள்ல அம்மா அப்பா ரெண்டு பேரையும் பிரிஞ்சிடுச்சு. கண்டே பிடிக்க முடியல. யாரும் இல்லன்னு யானைக்குட்டி அழுதுச்சு. அதுக்குப் பயமாவும் இருந்துச்சு.

அது அழுறதைக் கேட்டு ஒரு தேவதை அங்கே வந்துச்சு. ‘ஏன் செல்லம் அழுறே?’ ன்னு தேவதை கேட்டுச்சா, அதுக்கு யானைக்குட்டி நடந்ததெல்லாம் சொல்லிச்சாம். உடனே தேவதை, ‘அழாதே குட்டி…உனக்கு ஒரு வரம் கொடுக்குறேன்’னு சொல்லிட்டு ஒரு வரம் கொடுத்து மறைஞ்சிடுச்சு. அது என்ன வரம்ன்னா…யானைக்குட்டிக்குத் திடீர்னு பறக்குற சக்தி வந்துடுச்சு. ஒரு முறை மட்டும்தான் பறக்க முடியும். அதை வச்சு யானைக்குட்டி தப்பிச்சுக்கணும். ’கால்களை எசகுபிசகா வைக்கக் கூடாது. கீழே சறுக்கி விழுந்துட்டா நமக்கெல்லாம் பெரிசா அடிபடும்’ன்னு அதோட அம்மா அடிக்கடி சொல்வாங்க. அதனால நடக்கும்போது கூட ரொம்ப ஜாக்கிரதையாதான் யானைக்குட்டி நடக்கும். பறந்துபோகுற சக்தி கிடைச்சாலும் அதுக்கு முதல்ல பயமாதான் இருந்துச்சு. இருந்தாலும் தைரியத்தை வரவழைச்சுக்கிட்டு அப்படியே மெதுவா பறக்க ஆரம்பிச்சது.

வழில பஞ்சு பஞ்சா மேகம்லாம் வந்துச்சு. அதையெல்லாம் தொட்டுப்பார்த்துக்கிட்டே யானைக்குட்டி பறந்துச்சு. களைப்பே இல்ல. யானைக்குட்டி ஜாலி ஆகிடுச்சு. கடைசில இன்னொரு காடு கண்ல பட்டுச்சு. அங்கே நிறைய யானைகள் மேய்ஞ்சிட்டிருந்துச்சு. அதுதான் இப்போ நாம போக வேண்டிய இடம்னு குட்டிக்குத் தோணுச்சு. கண்ண மூடி தேவதைய வேண்டுனதும், யாரோ கீழே இறக்கி விடுற மாதிரி இருந்துச்சு. ‘அப்பாடா’ன்னு சந்தோஷமா காட்டுல போய் இறங்குச்சு. எல்லா யானைகளும் இதுக்காவே காத்திட்டிருந்த மாதிரி ‘ஹாய்’ சொல்லுச்சு. ஃப்ரண்டா சேத்துக்கிச்சு. அம்மா அப்பா சீக்கிரம் வரணும் சாமின்னு தினமும் ப்ரேயர் பண்ணிக்கிட்டே காட்டுல அந்த யானைக்குட்டி ரவுண்டு அடிக்க ஆரம்பிச்சுதாம்.

இப்படி ஒரு கதையோ, வேறொன்றோ கீழ்க்கண்ட காணொளியைப் பார்த்தால் உங்களுக்கும் நிச்சயம் தோன்றும். கென்யாவில் உள்ள இமனைட்டி காட்டில் வாழ்ந்த ‘கிதகா’ என்ற யானைக்குட்டி தனது கூட்டத்திலிருந்து மனிதர்களின் ஆக்கிரமிப்பால் பிரிக்கப்பட்டது. Sheldrick Wildlife Trust அமைப்பு இந்தக் குட்டியை வேறொரு யானைக்கூட்டத்தில் கொண்டுபோய் சேர்த்தார்கள். இது அந்த பெரும்பணியைப் பதிவுசெய்த காணொளிதான். தன்னார்வலர்களோடு கிதகா முதலில் மல்லுக்கட்டுவதும் ஒரு குழந்தையை அலேக்காகத் தூக்குவதுபோல அவர்கள் இதைத் தூக்கிச் செல்வதும் மெல்லிய சிரிப்புக்கிடையே மனதை நெகிழச் செய்தன. யானைகள் எங்கிருந்தோ வந்த அந்தக் குழந்தையை அப்படியே அரவணைத்துக்கொண்டன.

http://blog.therainforestsite.com/babyelephantrescue/

ஒரு யானைக்குட்டியைச் சுமந்துகொண்டு வெண்மேகங்களை ஊடுருவியபடி ஃப்ளைட் செல்கிறது. ஒரு குழந்தைகள் கதை அப்படியே நிஜமானது போலிருந்தது. பறக்கும் யானைக்குட்டி எனக்கு ஒரு பெரிய தன்னம்பிக்கையைத் தந்தது. துயரங்கள் மட்டுமே உலகிற்கு விதிக்கப்பட்டவை அல்ல. இங்கே அற்புதங்களுக்கும் இடம் உண்டு. ஓர் உயிரைத் துன்புறுத்த ஒருவர் இருந்தால், அதற்கு இளைப்பாறுதல் தரவும் ஒருவர் இருப்பார்.

நல்லவன் வாழ்வான், துன்பத்தில் இருப்பவர்களுக்குத் தேவதைகள் உதவும், எல்லோரும் மகிழ்ச்சியாக ஒன்றுசேர்ந்தார்கள் என்று முடிகிற எல்லா குழந்தைகள் கதைகளும் நிஜமானால் எப்படி இருக்கும்?

முக நூலில் ‘ரெயின்ஃபாரெஸ்ட் சைட்’ இணைய தளத்தில் இருக்கும் இந்தக் காணொளியைப் பகிர்வு செய்த நண்பர் யாரென்று குறித்துவைக்க அவசரத்தில் மறந்துவிட்டேன். நன்றி நண்பா! அப்புறம் சந்தோஷ்…இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொண்டிருக்கும்போதுதான், ‘அடடே…இது நம்ம மச்சியோட லிங்க் கதைகளின் ஸ்டைலாச்சே’ என்று தோன்றியது. அவசரத் தருணங்களில் நான் உன் சட்டையை அணிந்துகொண்டு வெளியே சென்ற மேன்சன் நாட்கள்தான் எனக்கு நினைவுக்கு வந்தது. நன்றிடா மச்சான்!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: