காலக்கெடு

அலமாரியில் சேர்ந்துகொண்டே போகும் புத்தகங்களைக் குற்றவுணர்ச்சியோடு கடந்துசெல்வதுதான் என் வழக்கம். அன்று ஏனோ ஏதேனும் படித்தே ஆக வேண்டும் என்று தோன்றியது. ஒரு கட்டுரைத் தொகுப்பைத் தேர்வு செய்து படிக்கத் தொடங்கினேன். உறக்கத்தையும் மீறி வாசிப்பு ஒரு முக்கால் மணி நேரத்துக்குத் தொடர்ந்தது. எனினும் மனதில் குமைச்சல் தீரவில்லை. எனக்குத் தெரியும். எனக்கான அன்றைய வேலை படிப்பதல்ல, வேறொன்று. ஒரு நண்பர் என்னிடம் ஒரு கட்டுரை கேட்டு பத்து நாட்களுக்கு மேலாகிற்று. எனக்கு நானே தினமும் ஒரு காரணம் சொல்லி அதைத் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தேன். இன்று புத்தகம் படித்து அந்த வேலையைக் கொஞ்சம் ஒத்தி வைத்திருக்கிறேன். ஒரு கெடுவிலிருந்து தப்பிக்க மனம் புத்தகத்திற்குள் ஒளிகிறது. அதைச் சுட்டிக்காட்டி எகத்தாளமாகச் சிரிக்கவும் செய்கிறது.
……
பள்ளி, கல்லூரி நாட்களில் ஆசிரியர்கள் கொடுக்கும் ஒரு யதார்த்தமான அறிவுரையை நீங்களும் கேட்டிருக்கலாம். ‘கடைசி நேரத்துல புதுசா எதுவும் படிக்கக் கூடாதுடே. ஏற்கனவே படிச்சதை ரிவைஸ் பண்ணுங்க போதும்’ என்ற அந்த வார்த்தைகள் கேட்க நன்றாக இருக்கும். ஆனால் எல்லோராலும் செயல்படுத்த முடியாது. படிப்பு பரம எதிரி போல என்னை வருத்திய கல்லூரிக்காலங்களில் இந்த அறிவுரையை நான் கண்டுகொள்ளவே மாட்டேன். எதுவுமே படிக்காதவனுக்கு புதுசு என்ன பழசு என்ன? ஊரிலிருந்து கல்லூரிக்குப் பேருந்தில் போகும்போது, அவசரத்தின் உச்சத்தில் பாடப்புத்தகத்தின் புதிய பக்கங்களும் புரட்டப்படும். இதுவரை படித்தறியாத சில பகுதிகள் வசீகரமாக இருக்கும். எளிமையாக இருக்கும். ‘ச்சே…இதைப் போய் படிக்காம இருந்திருக்கோமே’ என்று மனம் நொந்துகொள்ளும். ஆனால் இனி செய்வதற்கு ஒன்றும் இல்லை. இதுவரை அவ்வப்போது படித்த அத்தியாயங்கள் ‘எங்களையும் கொஞ்சம் கவனி…நினைவுல நிக்குற மாதிரி இருக்கும்…டக்குனு ஓடிருவோம்’ என்பதுபோல மிரட்ட, புதியதை விட்டுவிட்டு பழைய பாடங்களுக்கு ஓடி வர வேண்டியிருக்கும். சுருக்கமாகச் சொன்னால்… அது ஒரு சுக வேதனை!
காலக்கெடுவின் கடைசி நிமிடங்களில் சிக்கிக்கொண்டு ஒரு வேலையைச் செய்யும்போது, முதலில் மூச்சு முட்டுகிறது. மேற்கொண்டு நகர இயலாமல் ஒரு மூலையில் முட்டிக்கொண்டு நிற்க வேண்டியிருக்கிறது. நிறைய நேரத்தை விழுங்கிக்கொண்டு மெல்ல மெல்ல காரியம் துலங்குகிறது. அந்த வேலையின் எளிமையும் அழகும் புரிபடுகிறது. மனதில் ஒருவித வேதனையும் பரவுகிறது. உரிய நேரத்தில் தொடங்கியிருந்தால், எவ்வளவு அழகாக வந்திருக்கும்? உரிய நேரத்தில்…?
……
வீட்டில் அப்படியொன்றும் குப்பை சேர்ந்திருக்கவில்லை. வரவேற்பறையில் இருந்த மேசையில் செய்தித்தாள் குலைந்துகிடக்கிறது. கசக்கப்பட்ட சில பேப்பர் துண்டுகள் தரையில் கிடக்கின்றன. படுக்கையில் போர்வை கலைந்திருக்கிறது. பெரும்பாலும் அதைப் பொருட்படுத்தாமல் சாப்பிடுவதும் பேசுவதும் தொலைக்காட்சி பார்ப்பதும் நடக்கும். அன்று ஏனோ ‘தூய்மை இந்தியா’ திட்டத்துக்கு விளம்பர தூதுவன் ஆன பிரபலம் போல ஒரு பதற்றம். ‘க்ளீன் பண்ணுடா’ என்று மனைவிக்கும் மகளுக்கும் சொல்லிவிட்டு, நானும் அந்த வேலையில் குதிக்கிறேன். தள்ளிப்போட்டுக்கொண்டே இருக்கும் வேலை ஆட்டிப்படைக்கிறது. ’வீட்டைப் பெருக்கு…அப்பதான் மலையேறுவேன்’ என்று விசித்திர நிபந்தனைகள் விதிக்கிறது. வேலையை வளர விட்டவன் அனுபவித்துதான் தீர வேண்டும்.
…..
‘இந்த வேலைக்கு நீங்க அதிக டைம் எடுத்துக்கிறது பிரச்னை இல்ல. அது நிச்சயம் நல்லா வரும். ஆனா அந்த வேலை மேல மத்தவங்களுக்கு எதிர்பார்ப்பும் அதிகமாகிட்டே போகும்..இல்லியா?’…ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் ஒரு பெண் அதிகாரி அழகான புன்னகையின் ஊடே சொன்ன நாசூக்கான அறிவுரை.
…..
சரவணனுக்கு முகம் வெளுத்துப்போயிருந்தது. ‘ராத்திரி பூரா தூங்கவே இல்ல. நாளைக்குக் காலைல ஆர்ட்டிக்கிள் கொடுக்கணுமேன்னு ஒரே பதட்டமா இருந்துச்சு. ரெண்டு மணிக்கு எந்திரிச்சு உட்கார்ந்து கடகடன்னு எழுதி முடிச்சிட்டேன்’ என்றார். அவரிடம் பேசி ஐந்து வருடங்கள் இருக்கும். அதைச் சொல்லும்போது அவர் முகத்தில் பார்த்த பெருமிதத்தை இன்று வரை மறக்க முடியவில்லை.

வேலைகள் காத்திருக்கும்போது உறக்கம் கூடுதலாக நம்மைக் கவர்கிறது. வழக்கமான நேரத்தை விட முன்பே வந்து நிற்கிறது. நம்மைச் சுற்றிலும் உறங்குபவர்கள் அந்த இரவின் மிகப் பெரும் அதிர்ஷ்ட சாலிகளாகத் தெரிகிறார்கள். இதுபோன்ற சவால்களில் உறக்கத்திடம் நானே கையை நீட்டி அவுட் ஆகிவிடுவேன். அதிகாலைகளிலும் அலாரங்களிலும் என் மொத்த நம்பிக்கையையும் வைத்துவிடுவேன். சரவணன் போன்றவர்களுக்கு அது முன் வைத்த காலைப் பின் வைக்கிற மாதிரியான இழுக்கு. உள்ளங்காலில் ஏறி உறுத்திக்கொண்டே இருக்கிற சிறு முள். வேலையை முடித்தால்தான் அவர்களுக்கு உறக்கம் வரும். எனக்கு வேலை அதிகம் இருக்கும்போதுதான் உறக்கம் வரும்.
….
சமையலறையில் மெட்ரோ வாட்டர் பைப்பின் மரை கழன்றுவிட்டது. பைப்பை முழுமையாக மூட இயலாமல் தண்ணீர் சொட்டிக்கொண்டே இருந்தது. ‘பழைய வீட்டுல இருக்குறப்போ ஒரு ப்ளம்பர் வந்தாருல்ல. அவரைக் கூப்பிடுங்க’ என்றார் மனைவி. ‘ஏண்டா…பைப்பை சாஃப்ட்டா ஹேண்டில் பண்ணணும்..இது கூட தெரியாதா…?’ என்று கோபப்பட்டேன். ப்ளம்பரைத் தேட வேண்டும் என்ற என் ஆதங்கம் கோபமாக வெளிப்படுவதை எனக்கு முன்னால் மனைவி உணர்ந்து, கேவலமாகப் பார்த்துவிட்டு அகன்றுவிட்டார். சொட்டிக்கொண்டே இருக்கும் தண்ணீர் எரிச்சலையும் குற்றவுணர்ச்சியையும் தூண்டிக்கொண்டே இருந்தது. ப்ளம்பர் பக்கம் நான் போகவே இல்லை. ஒரு மாதம் கடந்துவிட்டது. மனைவி சொல்லிச் சொல்லி சோர்ந்து, ‘எப்பதான் கூப்பிட்டு வர்றீங்கன்னு பார்ப்போம்’ என்ற மனநிலைக்குச் சென்றுவிட்டார். ‘சும்மா யாரையும் கூப்பிட்டு வந்துர முடியாது. இதெல்லாம் ரொம்ப பழசு. வேலையை இழுத்துவிட்டு குழாயையே மாத்தணும்னு சொல்லிரக் கூடாதுடா’ என்று நான் பேசுவது எனக்கே பலவீனமானதாகத் தோன்றியது. சமையலறைக்குப் போனாலே தண்ணீர் சொட்டும் சத்தம் காதில் துளையிட்டதுபோலிருந்தது. ஆனாலும் மனம் அசைந்துகொடுக்கவில்லை. ஒருநாள் பக்கத்துவீட்டில் பழுதடைந்த மோட்டாரை ஒருவர் சரிபண்ணிக்கொண்டிருந்தார். அங்கே வேலை முடிந்ததும் அவரை எங்கள் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போனேன். ஐந்து நிமிடத்தில் வேலையை முடித்துவிட்டுப் போய்விட்டார். பைப் சிக்கென மூடியது. ஸிங்கில் உள்ள பாத்திரத்தின் மீது தாளம் போடுகிற தண்ணீர் சத்தம் இல்லை. ஒரு மாதமாக அழுத்திக்கொண்டிருந்த பிரச்னை சில நிமிடங்களில் தீர்க்கப்பட்டுவிட்டது. மனைவியைத்தான் என்னால் பெருமையாகப் பார்க்க முடியவில்லை.
…..
ஒரு குடும்பஸ்தனாக சென்னையில் வாழத் தொடங்கி எட்டு ஆண்டுகளாகப் போகின்றன. ஏறக்குறைய இரு ஆண்டுகளுக்கு ஒரு வாடகை வீடு என்ற விகிதத்தில் வீடு மாறியிருக்கிறோம். எல்லா பொருட்களையும் லாரியில் போட்டுக்கொண்டு வீடு மாறுவது கூட போகப் போக சிரமம் குறைந்த வேலையாகிவிட்டது. புது முகவரிக்கேற்ப ரேஷன் கார்டு மாற்றுவதுதான் என்னால் தாண்ட முடியாத நெருப்பு வளையமாக அச்சுறுத்திக்கொண்டே இருக்கும். அதை இயன்றவரைக்கும் தள்ளிப்போட்டுக்கொண்டே வருவேன். தற்போது குடியிருக்கும் வீட்டுக்கு வந்து இரு ஆண்டுகள் ஆகவிருக்கிறது. ‘நம்ம ஜாதகப்படி அடுத்த வாடகை வீட்டுக்குப் போக வேண்டிய காலம் நெருங்கிவிட்டதே…இந்த வீட்டில் இருக்கும்போதே முகவரி மாற்றிவிடலாம்’ என்று அபூர்வமாக ஒருவித விழிப்புக்குள்ளாகி, அம்பத்தூரில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகத்துக்குப் போய் விண்ணப்பித்தேன். முகவரிச்சான்றுகளைச் சரிபார்த்துவிட்டு, ஒப்புகைச்சீட்டு கொடுத்தார்கள். அதை ரேஷன் கடையில் காட்டிவிட்டு மீண்டும் அதே அலுவலகத்திடம் கொடுக்க வேண்டும்.

ரேஷன் கடையில் கார்டை நீக்கம் செய்துவிட்டு அம்பத்தூருக்குப் போவதை ஒருமாதத்துக்கு மேல் தள்ளிப்போட்ட பிறகுதான் பயம் வந்தது. ஒருநாள் எனக்கு நானே வேப்பிலை அடித்துக்கொண்டு போய் நின்றேன். ஒரு கறாரான அதிகாரி அட்டையையும் ஒப்புகைச் சீட்டையும் வாங்கிப்பார்த்தார். முகத்தில் மிகுந்த அதிருப்தியோடு கேட்டார், ‘ஏன் சார் இவ்வளவு லேட்டு? ஒரு வாரத்துல வந்திருக்கலாமே?’ பால் பொங்கும் நேரத்தில் பானை உடையப் போகிறதோ என்ற பதற்றத்துடன் சிரித்தேன். அவரே, ‘வெளியூருக்குப் போயிருப்பீங்க’ என்று ஒரு நொடியில் இலகுவாகிக் கனிந்து சிரிக்க, நான் வேக வேகமாகத் தலையாட்டினேன். ஒன்றுமே நடக்காததுபோல கையெழுத்து போட்டு, தங்கள் பதிவேட்டில் முகவரியையும் எழுதிவிட்டு கார்டை என்னிடம் கொடுத்தார். உற்சாகமாக வண்டியை கிளப்பினேன். அடுத்த வேலை…எனக்குப் புதிதாக ஒதுக்கப்பட்ட ரேஷன் கடைக்குப் போய் கார்டைப் பதிவு செய்ய இன்னொரு நாள் செல்ல வேண்டும். இந்த இன்னொரு நாள் என்பது எனது தேர்வு. ‘விடிஞ்சிரும்!’ என்கிறது மனசு.
…….
இரவு 11 மணி. மனைவியும் மகளும் தூங்கியிருப்பார்கள் என்ற நம்பிக்கையோடு மாடிப்படி ஏறிய என்னை ஹாலில் எரியும் விளக்கொளி தூரத்திலேயே எச்சரிக்கை செய்கிறது. இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்துக்கொண்டு அருகருகே அமர்ந்திருக்கிறார்கள். மகளின் பாடப்புத்தகத்தை வைத்துக்கொண்டு மனைவி குமுறிக்கொண்டிருக்கிறார். ‘படிக்க வா…படிக்க வான்னு சாயங்காலத்துலர்ந்தே கூப்பிட்டனே…வந்தியா நீ? இப்போ இவ்வளவு ஹோம் வொர்க் இருக்கே…தூக்கத்தோட கிடந்து நீதானே கஷ்டப்படுற?’ என்ற மனைவியின் வார்த்தைகளிலிருந்து கண்டிப்பை மட்டும் கண்டு மகள் திமிறிக்கொண்டிருந்தாள். ‘அந்தந்த வேலைய அப்பப்போ முடிச்சிரணும்டா’ என்று அவளிடம் சொல்லும்போதே, எனக்குள் ‘கெக்கே பிக்கே’ என ஒரே சிரிப்பு சத்தம். இந்த மன சாட்சியை மியூட் பண்ணவே முடியாதா!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: