ஆனாலும் அவர் ஒரு கலைஞன்

rajiniஅவர் பேராசையிலும் குழப்பத்திலும் அதீத தன்னம்பிக்கையிலும் இன்று சறுக்கி விழுந்திருக்கலாம்.

ஆனாலும் அவர் ஒரு கலைஞன். ‘இதெப்படிருக்கு?’ என அவர் கெக்கலிப்பார். சிகரெட்டை வாயில் தூக்கிப்போட்டு விளையாட்டு காட்டுவார். ‘தனியா இருக்குற பொண்ணுகிட்ட ஒரு ஆண் எப்படி நடக்கணுமோ அப்படித்தான் நான் நடந்துக்கிட்டேன். அப்போ ஒரு பொண்ணு எப்படி நடக்கணுமோ அப்படி நீ நடந்துக்கிட்ட?’ என்று தனக்கு விழுந்த நெற்றியடியை நாசூக்காக மறைப்பார். ‘கெட்ட பய சார் காளி’ என கண்ணீரோடு சவால் விடுவார். ‘லகலகலக’வென சிரித்து சீண்டுவார்.

வணிகம் என்ற வார்த்தையையே அவர் பற்றிக்கொண்டு நின்றாலும், அவர் நடிப்பு என்பதை அறியாதவர் அல்ல. வணிகப்படங்களில் உயிரைக் கொடுத்து நடித்தாலும் அந்த நடிப்பு கவனிக்கப்படாது என்பதும் அவருக்குத் தெரியாதது அல்ல. விசில் சத்தங்களும் கைத்தட்டல்களுமே தங்களுக்குச் சொந்தம் என்பதையும் பல வருடங்களுக்குப் பிறகும் நினைவுகூறத்தக்க குறிப்புகள் சொந்தமல்ல என்பதையும் சூப்பர்ஸ்டார்கள் அறிவார்கள்.

ஆனாலும்… சினிமாவை எழுதித் தீர்க்கும் நம்மைப் போலவே அவருக்கும் சினிமா தான் உயிர். அறிவுச்சமூகம் சூப்பர் ஸ்டார்களை போஸ்ட் மார்ட்டம் செய்யலாம். அவரது ஒரு தோல்வியில் ‘ ச்சீ’ என இகழ்ந்து இழிவுப்படுத்தக் கூடாது. அவரது படம் வருவதை ஒட்டி, இணையத்தில் அவரைக் கடுமையாக விமர்சித்து எழுதப்பட்ட கட்டுரைத்தொடர் முடக்கப்பட்டது. அதற்கு நம்மில் எத்தனை பேர் கண்டனம் தெரிவித்திருப்போம்? கேள்வி கேட்க வேண்டிய நேரத்தில், வெற்றுக்கேலிகளால் என்ன பயன்? ஒருவேளை இந்தச் சறுக்கல் நடக்காமல், சூப்பர் ஸ்டார்களின் வழக்கமான கணிப்புகளின்படி ‘லிங்கா’ சாதனையாகி இருந்தால், அவர் குறித்த இந்தக் கேலிகளும் கிண்டல்களும் அவசியமே இல்லாமல் போயிருக்குமா? வெற்றி பெற்றவன் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவன் ஆகிவிடுகிறான் என்ற உலகம் தழுவிய மனநிலையின்படி, வழக்கம்போல சூப்பர் ஸ்டாருக்கு சலாம் போட்டுக்கொண்டிருந்திப்போமா?

சூப்பர்ஸ்டார்களை மட்டுமல்ல, உலகில் பிறந்த உயிர்களில் 99 சதவீதம் பேருக்கும் இது பொருந்தும்.( மீதம் இருக்கும் ஒரு சதவீதத்தினரான வாரன் ஆண்டர்சன், ஜார்ஜ் புஷ், ராஜ பக்சே போன்ற வகையறாக்களைக் காலம் கழுவி ஊற்றும். காறித்துப்பும். செருப்பு வீசும். காலத்தின் கருவிகள் நாம் என்பதை உணர்ந்து, அதைச் செயல்படுத்தும் துணிவு நமக்கு இருந்தால் மட்டும் போதுமானது.)

நமது தவறை மற்றவர்கள் எந்த தன்மையான மொழியில் சுட்டிக்காட்ட வேண்டும் என நாம் விரும்புகிறோமோ, அதே மொழியைத்தான் சூப்பர்ஸ்டார்களும் விரும்புவார்கள்.

சூப்பர் ஸ்டார்களின் படங்கள் மகத்தான வெற்றி பெறும்போதும் அவை ஒரு கூட்டு முயற்சி என்பதை நாம் மறக்கிறோம். அவை தோல்வி அடையும்போதும் அதை மறந்துவிடுகிறோம்.தோல்வியில் சூப்பர் ஸ்டார்களைத் தூற்றி மகிழும் நம் மனம் அவர்களின் வெற்றியின்போது அவர்களைக் கணக்கு வழக்கின்றி கொண்டாடும்? ஆனால் சூப்பர் ஸ்டார்களின் வெற்றிகள் நம் வெற்றிகளாக என்றைக்கும் ஆகாது.

காண்பவர்கள் எல்லாம் நம்மை வணங்கிக்கொண்டே இருந்தால், ‘நாம் கடவுளா மனிதனா’ என்று ஏதேனும் ஒரு கணத்தில் நமக்கு சந்தேகம் வருமா வராதா? கடவுளாகித்தான் பார்ப்போமே என நம்மில் சிலர் ஒரு கல்லை எறிந்துதான் பார்ப்போமா இல்லையா? சூப்பர் ஸ்டார்களை வணங்கியது யார் தவறு? தகுதிக்கு மீறி அவர்களை வளர்த்துவிட்டவர் யார்?

சூப்பர் ஸ்டார்கள் தங்கள் களம் மறந்து அரசியலுக்கு வர முயல்வதை நாம் எதிர்க்கலாம். அதில் அவர்களுக்கு நடக்கும் வருடக்கணக்கான ஊசலாட்டங்களை நாம் பகடி செய்யலாம். அவர்களிடம் தெளிவான விளக்கங்களைக் கோரலாம். அதற்கு முன்னால் சூப்பர் ஸ்டார்கள் கையில் எடுக்கிற அளவுக்கு நம் மண்ணின் அரசியல் ஆகிவிட்டதன் அவலத்தை நாமும் நம்மை வழிநடத்துபவர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அவருக்கு இது ஒரு கசப்பான நாள். ஆள் உயர மாலைகளைக் கழுத்தில் சுமந்தபடி, இனிப்புகளைத் திகட்ட திகட்ட சுவைத்த சூப்பர் ஸ்டார்கள் கசப்பான மருந்துகளையும் பருக வேண்டும். இது எல்லோருக்குமான விதிமுறை. ஆனால் இந்த நாளை அவருக்கான மிகவும் குரூரமான நாளாக நாம் மாற்ற நியாயம் இல்லை.

கோடிக்கணக்கில் பணம் ஈட்டிக்கொடுத்த அதே சூத்திரம் மாறாமல் பாத்திரம் ஏற்று மீண்டும் வெற்றி பெறும் வழியை சூப்பர் ஸ்டார் இப்போது சிந்தித்துக்கொண்டிருக்கலாம். தான் உருவாக்கிய பிம்பம் அனுமதிக்கும் அளவுக்கு மாற்றுப்பாதையில் நடக்கவும் செய்யலாம். ஓய்வு நெருங்கும் வயதில், தன்னை விரும்புகிற எதிர் தரப்பினர் கூட வியக்கிற மாதிரி, தன் திறமையை என்றும் பதிவு செய்யும் விதத்தில் ஒரு படத்தில் நடிக்க முன்வரலாம். எதைத் தேர்வு செய்ய வேண்டுமானாலும் சூப்பர் ஸ்டார்களுக்குக் கொஞ்சம் ஆசுவாசம் வேண்டும். எழுத்துகளால், புகைப்படங்களால், பேச்சுகளால் அவர்களை வெறுமனே அவமானப்படுத்துவதால் ஆக்கபூர்வமாக எதுவும் நடக்கப்போவதில்லை.

சூப்பர் ஸ்டாரின் வணிகப் படையெடுப்புக்கு ஆட்பட்டு, இரண்டு மடங்கு கட்டணம் கொடுத்து படம் பார்த்தவர்களுக்கு கூட அவரை இழிவுப்படுத்த உரிமை இல்லை. செவிவழிச்செய்தியாக அனைத்தையும் கேட்டுத் தெரிந்துகொண்டவர்கள் இப்படி வானுக்கும் பூமிக்குமாகக் குதிக்க வேண்டுமா?

-இப்படிக்கு, ‘பெரியோரை வியப்பதும் இலமே, சிறியோரை இகழ்தலும் இலமே’ என்று கூறும் தமிழ்ச்சமூகத்தில் பிறந்து, மூத்தோர் வாக்கை மறந்து, எத்தனையோ கலைகளும் தொழில்களும் இருக்கும்போது சினிமா என்ற ஒன்றின் மீது மட்டும் அதிக ஈர்ப்பை வளர்த்துக்கொண்ட இலட்சக்கணக்கானவர்களில் ஒருவன்.

புகைப்படம் நன்றி:ஸ்டில்ஸ் ரவி

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: