செவளையும் விளக்குமாறு அடியும்

டீக்கடையில் எங்களோடு சினேகம் பேசும் நாய்களில் செவளைதான் செம கெத்து. குரைத்துதான் ரொட்டி கேட்கும். மார்பில் விரிந்து இடுப்பில் சிறுத்த மனிதர்களையும் விலங்குகளையும் பார்க்கும்போது மனதில் ஒருவித கம்பீர அதிர்வுகளை உணர்வோம் இல்லையா. செவளையும் அப்படி ஓர் எதிர்கொள்ளலுக்கு உரியது. ஒருநாள் மெல்லிசாகக் கூட சத்தம் எழுப்ப முடியாமல் இருமிக்கொண்டே இருந்தது. அருகில் வந்து எதுவும் கேட்கவும் இல்லை. அடுத்த நாளும் அதே அவதியைக் கவனித்தேன்.

உடலில் எந்த காயமும் இல்லை. ‘யாரோ விளக்குமாற்றால அடிச்சுருக்காங்க சார்…விளக்குமாற்றால அடிச்சா நாய் இப்படி ஆகிரும்’ என்று டீக்கடைக்காரர் அமானுஷ்யமான ஒரு காரணத்தைச் சொன்னார். அதை நம்ப முடியவில்லை எனினும், ’சிங்கம் மாதிரி இருக்குற உன்னை விளக்குமாற்றால அடிச்சவன் எவ்வளவு கோழையா இருப்பான்?’ என்ற ஆதங்கத்தோடுதான் செவளையை மறுநாள் பார்க்கத்தோன்றியது.

அடுத்து வந்த பத்து நாட்களும் நம்பிக்கை ஊட்டுவதாக இல்லை. பிஸ்கெட்களையும் கேக்கையும் சில நொடிகளில் தீர்த்து ‘அடுத்து?’ என்று குரைக்கிற செவளை ஒரு பிஸ்கெட்டுக்கே திணறியது. ‘செத்துரும் சார்’ என்றார் டீக்கடைக்காரர். வலிப்பை நினைவூட்டும் சத்தமில்லா இருமலிலிருந்து செவளை நீங்கவில்லை. அதன் கண்கள் ’என்னை அப்படியே விட்ருங்க’ என்று சொல்வது போலிருந்தது. என்னுடன் வருகிற நண்பர்களும், ‘என்னாச்சு இந்த நாய்க்கு?’ என்ற புருவம் சுருக்கிய விசாரிப்புகள் மூலம் அவநம்பிக்கை தெரிவித்தார்கள். டீக்கடைக்காரர் விளக்குமாறு அடியைப் பற்றி சொல்வாரோ என்று அஞ்சினேன். நல்ல வேளை, அவர் வாடிக்கையாளர்களுக்கு வடை மடித்துக்கொடுப்பதில் மும்முரமாக இருந்தார். ஒரு நாய் விளக்குமாறு அடிவாங்குவதும் அதனால் நோயில் விழுவதும் என்னால் சீரணிக்கவே முடியாத கற்பனையாக இருந்தது.

தொடர்ச்சியாக இரு நாள் விடுமுறைக்குப் பிறகு அலுவலகம் வந்தேன். டீக்கடைப்பக்கம் போனால் செவளை அமைதியாகப் படுத்திருந்தது. வால் ஆடவில்லை. அதன் கண்கள் மட்டும் ‘வா’ என்றன. இழுப்பு சற்று குறைந்திருந்தது. அதுவாக வந்து என்னிடம் எதுவும் கேட்கவில்லை.

அதற்கு அடுத்த நாட்களில் செவளையிடம் இன்னும் கொஞ்சம் முன்னேற்றத்தைக் கவனிக்க முடிந்தது. மார்பை இழுத்து இழுத்து மூச்சு விட்டுக்கொண்டே இரண்டு பிஸ்கெட்களைத் தின்றது. இப்படி இன்னும் நான்கைந்து நாட்கள் கடந்தன.

ஒருநாள் காலையில் பக்கவாட்டில் உள்ள சாலையிலிருந்து வெளிப்பட்ட செவளை என் முன்னால் வந்து நின்றது. இளைப்பு நின்றிருந்தது. பழைய ஆர்வமும் கெத்துமாக என்னைப் பார்த்தது. நான் நேரம் கடத்த கடத்த, கம்பீரத்தைப் பவ்யமாக்கி இரு கால்களையும் நீட்டி சோம்பல் முறித்தது. சடசடவென உடலை உதறியது. காதைத் துளைப்பதுபோல ‘லொள்’ என்ற சத்தம். ‘அண்ணே, பிஸ்கெட் கொடுங்கண்ணே’ என்றேன், கொஞ்சம் தாமதித்தாலும் செவளையின் கால்கள் என் நெஞ்சில் இருக்கும் என்ற அச்சத்துடன்.

ஏறக்குறைய ஒரு மாதமாகத் தன்னை வாட்டிய உடல்நலக்கோளாறு என்னவென்று செவளைக்குத் தெரியாது. ஆனால் அதிலிருந்து மீண்டுவிட்டது. செவளை தன்னைத் தானே சரிசெய்துகொண்டுவிட்டது. செவளைகளுக்கு விளக்குமாற்று அடியாவது, வேல்கம்பு வீச்சாவது?!

….

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: