ஆள் இல்லாத டீக்கடையும் இழுபடும் கல்லாப்பெட்டியும்

The WordPress.com stats helper monkeys prepared a 2014 annual report for this blog.

2012இல் நண்பன் சந்தோஷ் நாராயணன்(பிரபல மினிமலிஸ்ட் ஓவியர்…பிரபல முக நூல் சிறுகதை எழுத்தாளர், பிரபல விளம்பரத்துறை வடிவமைப்பாளர், பிரபல…இப்படி இன்னும் சில பிரபலங்களுக்குச் சொந்தக்காரரான சந்தோஷ் தான்)  எனக்கு ஒரு வலைத்தளத்தை உருவாக்கிக்கொடுத்தார். தொடக்க காலத்தில் அதற்கென சில கட்டுரைகளை எழுதி பதிவேற்றி வந்தேன்.  புது மாட்டைக் குளிப்பாட்டும் உற்சாகம் சீக்கிரமே முடிந்துபோனது. ஒரு நீண்ட இடைவெளி. அப்புறம் தற்செயலாக விழித்துக்கொண்டு, முக நூலில் எழுதிய சில பதிவுகளை மட்டும் இதில் மறுபதிவு செய்யத் தொடங்கினேன். இன்றுவரை அதுதான் தொடர்கிறது.

கடந்த ஆண்டு எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் குங்குமம் இதழில் எழுதிவந்த தொடரில் என் வலைத்தளத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்.  ‘தி இந்து’விலும் என் வலைத்தளம் குறித்து ஓர் அறிமுகக் குறிப்பு இடம்பெற்றது. பரவலான வாசகர்களிடம் என் வலைத்தளம் சென்றடையும் வாய்ப்பாக இவை அமைந்திருக்கும். மற்றபடி நெருங்கிய நண்பர்கள் ஓரிருவரைத்தாண்டி பெரும்பாலானவர்களிடம் என் வலைத்தளத்தைப் பற்றி இதுவரை நான் கூறியதில்லை. இன்னும் நிறைய எழுதிய பிறகு சொல்லலாம் என்று நினைத்தேன். புத்தாண்டை ஒட்டி வோர்ட்பிரஸ்.காம் தந்துள்ள ஆண்டு அறிக்கை கொஞ்சம் உற்சாகத்தைத் தந்திருக்கிறது. அது கொடுத்த புள்ளிவிவரங்கள் ‘ஆள் இல்லாத டீக்கடையிலும் கல்லாப்பெட்டி கொஞ்சம் இழுபடத்தான் செய்திருக்கிறது ’ என்ற நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. நான் எதிர்பார்த்தபடி, விரும்பியபடி இன்னும் எழுதவில்லைதான். எனினும் நண்பர்களிடம் பகிரலாமே என்று இப்போது ஏனோ தோன்றுகிறது.

நிறைய கவிதைகள், சிறு குறிப்புகள், என் மகள் ஆதிராவுடனான சில மகிழ்ச்சித்தருணங்கள் என எனது வலைத்தளம் ஒரு டைரி போல தோற்றம் தருவதாக உணர்கிறேன்.  மொத்தப் பதிவுகள் 98 என புள்ளிவிவரம் கூறுகிறது. இன்னும் இரண்டு பதிவுகள் போட்டிருந்தால் சதம் அடித்திருக்கலாம்.

கேரம் விளையாட்டில் உலக சாதனை படைத்த தமிழரான மரிய இருதயம் அவர்களின் மனைவி  2012இல் சாலை விபத்தில் இறந்தார். நாளிதழ்களில் ஒரு பத்திச் செய்தியாக வந்த அந்த விபத்துச் செய்திகளில் அவர் ஓர் உலக சாதனையாளர் என்பது போகிற போக்கில் குறிப்பிடப்பட்டிருந்தது. கேரம் துறையில் இப்படிப்பட்ட ஒரு நிபுணர் நம்மிடையே இருக்கிறார் என்பது என்னைப் போலவே என் தலைமுறையைச் சேர்ந்த பலருக்கு அப்போதுதான் தெரிந்திருக்கும். அறியப்படாத மரிய இருதயம் குறித்து ஒரு சிறு கட்டுரையை ஏதோ ஓர் உந்துதலில் எழுதினேன். என்னளவில் ஒரு விளையாட்டு வீரருக்கு மரியாதை செய்த நிறைவு கிடைத்தது. 2014இல் டென்னிஸ் வீராங்கனை மரிய ஷரபோவா ‘சச்சின் டெண்டுல்கரை எனக்குத் தெரியாது’ என்று ஓர் அதிர்ச்சி பேட்டி கொடுத்தார். அப்போது சச்சின் தேசமான இங்கிருந்து பலர் மரிய ஷரபோவாவைக் கடுமையாக விமர்சித்தார்கள். அதில் ஒரு நல்ல காரியமும் நடந்தது. ‘மரிய ஷரபோவா சச்சினைத் தெரியாமல் இருந்தா இருக்கட்டும். நம்மோட மத்த விளையாட்டு வீரர்களை நாம ஞாபகம் வச்சிருக்கோமா?’ என்று சிலர் நம் மனசாட்சிக்கு குட்டு வைத்தார்கள். இதையொட்டிய முக நூல் விவாதங்களில் தடகள வீராங்கனை சாந்தி போன்ற சாதனையாளர்களுடன் மரிய இருதயமும் நினைவு கூறப்பட்டார். ஏற்கனவே மரிய இருதயம் மீதான உரிமையுணர்ச்சியில் இருந்த எனக்கு ஆறுதலாக இருந்தது. ‘நான் மரிய இருதயம் பத்தி ரெண்டு வருஷத்துக்கு முன்பே எழுதிருக்கேன்’ என்று நண்பர்களிடம் பெருமைப்பட்டேன். ஏதோ ஒரு வெற்றிடத்தை நிரப்பும் முயற்சியில் தன்னிச்சையாய் எழுதத் தொடங்கிய எழுதிய வலைத்தளம் குறித்து பெருமிதம் கொள்வதற்கான ஒரே செய்தி இதுதான். மற்றபடி ஒரு மெல்லிசை நிகழ்ச்சிக்கு முன்னால் சும்மா காதில் விழுகிற  கீ போர்டு இசைத்துண்டுபோல, சாப்பாட்டுக்கு முன்னால் வைக்கப்படுகிற சூப் போல தான் என் குறிப்புகளைச் சொல்ல முடியும்.

16 நாடுகளிலிருந்து வலைத்தளத்தைப் பார்வையிட்டிருக்கிறார்கள், கடந்த ஆண்டில் மட்டும் 1000 பேர் வருகை தந்திருக்கிறார்கள், சான் பிரான்சிஸ்கோ கேபிள் கார் மூலம் இவர்களை சவாரி செய்ய வைத்தால் 17 நடை தேவைப்படும் என்றெல்லாம் சொல்லி, ஓர் ஆறுதல் பரிசை முதல் பரிசு போல வோர்ட்ப்ரஸ்.காம் உணர வைக்கிறது. சந்தோஷம் தரக்கூடிய பொய்யை நம்பாமல் இருக்கலாம். மனதிலிருந்து முழுக்க உதறிவிட முடியாதுதானே?

அறிமுகமே இல்லாத சில நண்பர்கள் என் வலைப்பதிவைப் படித்து பாராட்டினார்கள். அறிமுகமான நண்பர்களும் இதை நேரம் கிடைக்கும்போது படித்திருக்கிறார்கள். குகையில் எதிரொலி கேட்க கேட்கத்தானே நமக்குக் கத்தத் தோன்றுகிறது?! அனைவருக்கும் என் நன்றி.

Click here to see the complete report.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: