எல்லோர் நினைவிலும் ஒரு நாய்

சாலையை அவசர அவசரமாகத் துப்பறிவது, அதே அவசரத்துடன் உச்சா, கிறுக்குப் பிடித்த மாதிரி சிறு ஓட்டம், தெரு நாய்கள் எதிர்ப்பட்டால் ஒரு சிறு சண்டை…. வெளியே அவிழ்த்துவிடப்பட்ட நாய் மீண்டும் வீட்டுக்குள் மறைந்தது.

…..

நள்ளிரவில் தெருவைக் கடக்கும் இரு சக்கர வாகனங்களைத் துரத்துவதில் போதை கண்டுவிட்ட நாய்களைத் திருத்துவது கடினம்.

….

கடந்துபோன காரின் முன்னிருக்கையில் ஓட்டுனரோடு கதைக்கும் பாவனையில் லாப்ரடார் நாய் உட்கார்ந்திருந்தது. உரிமையாளர் பின்னிருக்கையில் பெருந்தன்மையுடன்.

….

டீக்கடையில் அறிமுகமான நாய்களில் வெள்ளை சற்று வயதான நாய். கண்கள் எப்போதும் பொங்கிக்கொண்டே இருக்கும். பூச்சித்தொல்லையோ என்னவோ காதுகளைச் சடசடவென அடித்துக்கொண்டே இருக்கும். நான் வைக்கிற பிஸ்கெட்களை ஒரு நொடி தயங்கிய பிறகுதான் சாப்பிடத் துவங்கும். ஆறேழு மாதங்களாக இதுதான் வழக்கம். ஒருநாள் என்னையும் என்னைப் பாசத்துடன் வரவேற்கும் நாயையும் ஒருவர் ஆர்வமாகப் பார்த்தார். அவர் முன்னால் கூச்சமும் பெருமிதமுமாக பிஸ்கெட்களை வைத்தேன். ‘பாஸ்…கேக் வாங்கிப்போடுங்க’ என்றார். அவர் எங்கள் அலுவலகத்திலேயே வேறு பிரிவில் பணிபுரிகிறார்.

சட்டென எனக்குள் ஒருவித எதிர்ப்பும் கிளம்பியது. ‘என்னால முடிஞ்சதைதான் வாங்கிப்போட முடியும்…இவர் யாரு இதான் வாங்கிப்போடணும்ங்கிறதுக்கு’ என்று எரிச்சலாக உணர்ந்தேன். தொடர்ந்து அவர் சொன்னார், ‘அந்த நாய்க்கு பல் கிடையாது…பாவம்!’ வெள்ளையைத் திரும்பிப் பார்க்கிறேன். வழக்கம்போல தயங்கிவிட்டு என்னைப் பார்த்துக்கொண்டே பிஸ்கட்களை விழுங்குகிறது.

….

அலுவலகத்துக்கு வெளியே செக்யூரிட்டி குறுக்கும் நெடுக்குமாக நடக்கிறார். அவரைக் கடந்துபோகும் ஒரு நாய் சற்று அங்கே நிற்கிறது. ஓங்கி மிதிப்பதுபோல பூட்ஸ் காலை அதன் தலை மேலே ஆட்டுகிறார்.  ‘ஸாரி…நான் இதை ரசிக்குற நிலைமைல இப்போ இல்ல’ என்று பார்வையாலேயே சொல்லிவிட்டு நாய் நகர்ந்தது.

….

கோயம்புத்தூரை நெருங்கும் ஒரு புறநகர்ச்சாலையில் காரை நிறுத்தினோம். சாலையோரத்தில் இருந்த விசாலமான டீக்கடை எங்களை வசீகரித்தது. தேநீரும் சென்னையைத் தாண்டினால் வசப்படுகிற  உண்மையான சுவையில் இருந்தது. ஒரு ஷூட்டுக்காக நாங்கள் பார்க்க வேண்டியவருக்குத் தொலைபேசியில் தெரிவித்துவிட்டு காத்திருந்தோம். கடையை ஒட்டிய சந்திலிருந்து அந்த செவளை நாய் வெளிப்பட்டது. ஓட்டமும் நடையுமாக, வாலை ஆட்டிக்கொண்டே அது வந்த காட்சி இன்னும் என் மனதில் நிற்கிறது. சுற்றும்முற்றும் பார்த்தேன். அதற்குப் பழக்கமானவர்கள் யாரும் இல்லை. அந்தத் தருணத்துக்கு சப் டைட்டில் போடுவதென்றால், ‘வாங்க…வாங்க…வீட்டுல எல்லாரும் நல்லாருக்காங்களா?’ என்றுதான் போட வேண்டும். யாரென்றே தெரியாத எங்களுக்குத்தான் இவ்வளவு வரவேற்பு. செவளை நான்கு பொறைகளுடன் தான் வீடு திரும்பியது. சூழலுக்கு ஏற்ப தகவமைத்துக்கொள்வதை நாயிடமிருந்தும் மனிதன் கற்றுக்கொள்ளலாம்.

….

மழை பெய்கிறது. அலுவலகத்தின் போர்டிகோவில் சிலர் காத்திருக்கிறோம். எதிரே நிற்கும் காருக்கு அடியில் குனிந்து செக்யூரிட்டி எதையோ தேடுகிறார். அவருடைய அதட்டலின் முடிவில் ஒரு நாய் வெளிப்பட்டு ஓடுகிறது. கேட் அருகே சில நொடிகள் மழைத்தூறல்களுக்குத் தயங்கி நிற்கிறது. செக்யூரிட்டி மீண்டும் சத்தம் எழுப்ப, நனைந்தபடி தெருவில் ஓடுகிறது. ’சாரோட காருக்கு அடில படுத்திருக்கு. யாராவது பார்த்து சொன்னாங்கன்னா எங்களுக்குப் பிரச்னை’ என்று எங்களிடம் சொல்கிறார் செக்யூரிட்டி. ஒரு நாய்க்கு அடைக்கலம் மறுத்த சிறு வருத்தம் அவர் முகத்தில் தெரிந்தது. மழையானாலும் காருக்கு அடியில் ஒண்டிய நாயால் ஒருவருக்கு வேலை பறிபோகலாம் என்பது மிகையான அச்சமாக எனக்குத் தோன்றவில்லை.

…..

இரவு பதினொரு மணி இருக்கும். இந்த வேளைகளில் தேநீர் பருகுவதற்கென்றே ஒரு டீக்கடையைத் தேர்வு செய்து வைத்திருக்கிறேன். டீக்கடைக்காரருக்கு 35 வயதிருக்கலாம். வாடிக்கையாளர்களிடம் பேச்சு கொடுத்தாலும், வேலையில் கண்ணாக இருப்பார். சில்லறை பாக்கிக்கு சாக்லெட் தர மாட்டார். தேநீருக்காகக் காத்திருந்தபோது என் முன்னால் ஒரு நாய் வந்து நின்றது. வழக்கம்போல என் பார்வை பிஸ்கெட் பாட்டில் நோக்கித் திரும்பியது. ‘வேணாம் சார்…அது ஏதாவது கேட்குற மாதிரி நிக்கும். ஆனா சாப்பிடாது’ என்றார் கடைக்காரர். அவர் சொன்னதை மீறி பிஸ்கெட் வாங்கி வைத்தேன். நாய் முகர்ந்துபார்த்துவிட்டு போய்விட்டது. ’நீங்க பெரிய ஆள் தலைவா’ என்ற என் பார்வையை அடக்கமாக உள்வாங்கிவிட்டு டீ க்ளாஸை வைத்தார்.

‘எங்க வீட்டுல ஒரு நாய் இருந்திச்சு சார்’ என்று புன்னகையோடு ஆரம்பித்தார். ‘வீட்டுல சிக்கன் குழம்பு வச்சோம்னா, எங்கிட்ட வாலை ஆட்டி ஆட்டி ஒரு பீஸ் வாங்கும். அதை பின் வாசல்ல ஒரு இடத்துல ஒளிச்சு வச்சுட்டு வரும். அடுத்து என் தம்பிகிட்ட வந்து வாலை ஆட்டும். அவன் கொடுக்குற பீஸையும் பழைய இடத்துலயே ஒளிச்சு வச்சுட்டு வரும். அடுத்து எங்கப்பாகிட்ட வந்து நிக்கும். இப்படி எல்லாத்துகிட்டயும் இருந்து வாங்கிட்டுப் போய் மொத்தமா வச்சு சாப்பிடும். நாம போயி சிக்கனை எடுத்தோம்னு வச்சுக்குங்க…உர்ர்ர்ன்னு சவுண்டு விடும். பிஸ்கெட்ன்னா கொடுத்துரும். செம புத்திசாலியான நாய் சார். ஒருமுறை ஊருக்குப் போறப்போ கவனிக்க ஆள் இல்லன்னு எங்கப்பாவோட ஃப்ரண்ட் வீட்டுல விட்டுட்டு போனோம். திரும்பி வந்து கேட்டா, எங்கேயோ ஓடிருச்சுன்னுட்டாரு. அதுக்கு என்னாச்சுன்னே தெரியல… நல்ல நாய் சார்’ என்று மனசே இல்லாமல் பேச்சை முடித்தார் கடைக்காரர். எல்லோர் நினைவிலும் ஒரு நாய் வாலைக் குழைத்துக்கொண்டே இருக்கிறது.

Advertisements

2 Comments (+add yours?)

  1. Samudra
    Mar 02, 2015 @ 09:10:40

    good blog

    Reply

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: