ஒரு photo, ஒரு like

’நான் நல்லாருக்கேனா?’ என்று நமக்கு நெருக்கமானவர்களிடம் கூட கேட்க மனம் துணிவதில்லை. அந்தக் கூச்சம் ஒரு பெரும் சுமை என்போர் முக நூலில் அதை இறக்கி வைத்துவிட்டு எவ்வளவு ஆசுவாசமாகச் சிரிக்கிறார்கள்?

….

ஒருவரின் புகைப்படத்துக்கு முதல் ஆளாக like போடுவதற்கு உரிமை என்ற ஒன்று தேவைப்படுகிறதோ?

….

அவனு(ளு)டைய புகைப்படம் ஏனோ பிடிக்கவில்லை. வெறுமனே கடந்துபோன கண்கள் கொள்கை அடிப்படையில் முடிவெடுத்து திரும்பி வருகின்றன. like!

….

அவள் தனது புகைப்படத்தைத் தவிர்த்துக்கொண்டே இருக்கிறாள். ஆண்விழிகள் அவள் எழுத்தில் முகம் பார்த்துவிடுகின்றன. இன்பாக்ஸில் நள்ளிரவில் ஒரு ’ஹாய்’ விழுகிறது.

….

இரு கைகளையும் குறுக்கே கட்டிக்கொண்டு அவள் சிரிப்பது அழகாகத்தான் இருக்கிறது. ஆனாலும் அதில் தெரிகிற அதீத தன்னம்பிக்கை ஏனோ உறுத்துகிறது. லைக் போடக் கூடாது என்ற தீர்மானத்துடன் நகர்ந்தால், என் like ஏற்கனவே விழுந்திருக்கிறது.

அமில வீச்சில் முகம் வெந்துபோன பெண்ணும் அவள் கணவனும் திருமணத்தில் நிறைவாகச் சிரிக்கிறார்கள். இதுவரை தான் கடந்துவந்த அன்பு, நட்பு, காதல், காமம் அனைத்தும் போலிதானோ என்ற பதற்றத்துடன் ஒரு like லிஸ்ட்டில் சேர்கிறது.

….

என்ன எழுதினாலும் திரும்பிபார்க்காதவர்கள் எல்லாம் என் ப்ரொபைல் புகைப்படத்தை மாற்றும்போது தவறாமல் like போட்டுவிடுகிறார்கள். அடிப்படை மனிதாபிமானம் என்பது இதுதானா?

….

சொந்த ஊருக்குப் போய் ஒரு வருடம் ஆகப் போகிறதே என்ற ஏக்கத்தில் இருப்பவன் முன்னால் அந்தக் குளம் சட்டென்று தோன்றுகிறது. பாதி தெரிகிற படித்துறை, பாசி படிந்த அதன் படிகள் ஏறிப்போனால் வருகிற நடுநிலைப்பள்ளி, அதுக்கு நேராகப் பிள்ளையார் கோயில், அதன் சுவரைத் தேய்க்கிற ஆடுகள், அவற்றை வேடிக்கை காட்டியபடி  மகனுக்குச் சோறுட்டுகிற வேணியக்கா….என மெல்ல ஊருக்குள் நுழைகிறான். ஏனோ பாதியிலேயே ஊரிலிருந்து திரும்புபவன் அந்தக் குளத்தை share செய்துவிட்டு, புகைப்படம் எடுத்தவனின் ப்ரொஃபைலைத் தேடுகிறான்.

…..

என்னுடன் அலுவலகத்தில் பணிபுரிபவன் தான். டீக்கடையில் தான் அடிக்கடி சந்தித்துக்கொள்வோம். ’பஜ்ஜி சாப்பிடுறீங்களா?’ என்று கடந்த வாரம் கூட கேட்டான். இப்போது ஷில்லாங்கில் இருக்கிறான். அங்குள்ள  ‘சிக்குமங்கு சிக்குமங்கு சச்சப்பாப்பா’ சாயல் குழந்தைகளோடு அரட்டையடித்தபடி ஏதோ ஒரு சந்தையில் அலைந்துகொண்டிருக்கிறான். உடனே like போட்டேன்.

எச்சில் வடிய ஒரு குழந்தை சிரிக்கிறது. தொட்டிலுக்கு வெளியே ஒரு மென்பாதம் மட்டும் தெரிகிறது. தங்கள் தோட்டத்தில் விளைந்த சுரைக்காயை ஓர் அம்மணக் குழந்தை உற்சாகமாக ஏந்திக்கொண்டு வருகிறது. மழலைகளுக்கென புத்தியில் இருக்கும் அத்தனை வார்த்தைகளும் தோற்றுப்போய் ஒரு ‘like’இல் அடங்கிவிடுகின்றன.

….

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: