இப்படிக்கு, ‘வண்டு’ முருகன்

கொசுவின் ஒப்புதல் வாக்குமூலம் இரத்தம்.

….
மாவீரன் கையைப் பிசைகிறான்.
மகளுக்குப் பேன் தொல்லை.
….
‘அம்மா இங்கே வா வா
ஆசை முத்தம் தா தா
இலையில் சோறு போட்டு
ஈயைத் தூர ஓட்டு…’அந்தக் காலத்தைச் சேர்ந்த நமக்கு அறிமுகமான முதல் பூச்சி ஈயா?
….
தலையிலிருந்து ஈறுகள் அகலும் ஆசுவாசத்தைவிட, அவை சினுக்கோலியின் இடுக்குகளுக்கிடையே சிக்கிச் சாகும் சத்தத்தில் கிடைக்கும் குதூகலம் முக்கியம். இப்போது அதே குதூகலம் கொசு அடிக்கிற பேட்டில் கிடைக்கிறது.
….
சட்டைகளும் பேண்டுகளும் தொங்கும் ஸ்டேண்டின் மீது சிறு எறும்புகளின் ஊர்வலம். இன்னும் சிறிது நேரத்தில் பார்க்கப்போகிற ஒரு ஹாரர் படத்துக்கான ட்ரெயிலர்?

சட்டையை மீண்டும் மீண்டும் உதறி அணிந்தாலும் அந்த எறும்பைத் துரத்த முடியவில்லை. அது இப்போது மனதில் ஊர்ந்துகொண்டிருக்கிறது.
….
கண்ணாடித்தொட்டி நீரில் ஒரு மீன் சலனமின்றி மிதக்கிறது . அது இறந்துவிட்டதாக நான் சொன்னேன். அந்த மீன் உறங்கிக்கொண்டிருப்பதாகக் குழந்தை சொன்னது.
….
வீட்டுக்குள் நடமாடிக்கொண்டிருக்கும் கரப்பான் பூச்சி பறக்கத் துவங்கும்போது அதன் மரண தேதி நிச்சயிக்கப்படுகிறது.
…..
’படிச்சுக் கிழிச்சுட்டேன்!?’ என்ற கறையானின் நக்கல் சகிக்க முடியவில்லை.
….
அடுத்த குழந்தையைப் பற்றி அடிக்கடி பேசும் அவள் அவனைக் கூப்பிட்டு நிலைப்படியைக் காட்டுகிறாள். குளவி கூடு கட்டத் தொடங்கியிருக்கிறது. அவன் ஒண்ணுமே தெரியாததுபோல முழிக்கிறான். ’குளவி கூடு கட்டுற வீட்டில் சீக்கிரமே குழந்தை பிறக்கும்னு சொல்வாங்க’ என்கிறாள் வெட்கத்துடன். அடுத்த குழந்தையை விட, அவளிடமிருந்து வருகிற இந்த வார்த்தைகளைக் கேட்பதில் அவனுக்கு ஒரு கிறக்கம். வெளியே போயிருந்த குளவி துளி மண்ணெடுத்துவிட்டு மீண்டும் வீட்டுக்குள் நுழைகிறது.
….
டீக்கடை நிழல், டூ வீலர் பார்க்கிங் ஏரியா, சிமெண்ட் ரோடு என தொடர்பே இல்லாத இடங்களில் எப்போதேனும் மண் புழுவைக் காண நேரிடுகிறது. காப்பகங்களில் உள்ள முதியோரை நேர்கொண்டு பார்க்கவே இயலாததற்கு நிகரான குற்றவுணர்ச்சியை நம்முள் எழுப்பியபடி மண்புழு மெல்ல நகர்கிறது. நுண்பெருக்கியில் தென்படுகிற ஒரு ரத்தக்குழாயின் அசைவுடன்.
…..
நள்ளிரவில் வீடு உறக்கம் உதறி எழுகிறது. அம்மாவைத் தேள் கொட்டியிருக்கிறது. பிள்ளைகள் அம்மாவைச் சூழ்ந்துகொள்கிறார்கள். வலியில் முனகும் அம்மா, ‘நல்ல வேளை, தேள் என்னைக் கொட்டுச்சு’ என்று ஆறுதல் கொள்கிறாள். பள்ளி நாட்களில் படித்த Nissim Ezekiel கவிதையில் வருகிற அம்மாவுக்கு அவரவர் அம்மா சாயல்.
…..
’ஏங்க…நீங்க கொடுத்த பென் ட்ரைவ்ல வைரஸ் இருக்கு’…’ஆண்ட்டி வைரஸ் சாஃப்ட்வேர் போட்டுருக்கீங்கள்ல’, ‘வைரஸ் ப்ராப்ளம்…ஒரு 1500 ரூபா செலவாகும்’….பூச்சிகள் மனிதனைத் துரத்திக்கொண்டே இருக்கின்றன.
….

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: