நாயினும் கடையேன்!

அலைந்து திரிந்து களைத்த ஒரு நாய் மரத்தடியில் படுத்து உறங்குகிறது. அதன் மீது மஞ்சள் நிறப்பூக்கள் விழுகின்றன.
….
அம்பானியே ஆனாலும் தெருநாய் படுத்துப்புரண்ட மண்ணில்தான் வீடு கட்ட வேண்டும்.

பிச்சைக்காரரின் கெஞ்சலோடு பின்னால் வருகிற செவலை தன் எதிரி ஒருவனை எதிர்கொண்டபோது பார்த்தேன். அதன் நாலு கால் பாய்ச்சலில் வெளிப்பட்டது, பழக்கப்படுத்தவே முடியாத ஒரு காட்டு விலங்கு.
….
இரவு நேர வாட்ச்மேன்களுக்கு கொசு பேட், எஃப் எம் பாடல்களோடு ஏதேனும் ஒரு நாயும் தனிமையைக் கடக்க உதவுகிறது.
….
யாரோ ஒருவருடைய பைக் தான். அதன் முன்சக்கரத்தை முகர்ந்துபார்த்துவிட்டு காலைத் தூக்க முயன்ற நாயை விரட்டுகிறேன். ‘எங்க ஏரியாக்குள்ள வந்தா மார்க் பண்றதுதான் வழக்கம்…வேணாம்னா எப்படி?’ என்பதுபோல பார்த்துவிட்டு நகர்கிறது நாய்.
….
’ச்சீ…நாயே’, ‘நாய்ப்பிழைப்பு சார்’, ‘என்னை என்ன நாய்ன்னு நினைச்சியா?’, ‘நாய்க்காதல்’ …மனித குலம் நாயை மையமாக வைத்து எத்தனை வசவுகளை உருவாக்கியிருக்கிறது. ‘நாயினும் கடையேன்’ என்று தனது பணிவுக்கு நாயை அளவுகோலாக்குகிற அறியாமை வேறு. நாய் நாயாகவே வாழ்கிறது. மனிதன் மனிதனாக வாழ்கிறானா?
….
மனைவியின் வீட்டுக்குச் செல்லும் வழியில் பைரவருக்கென ஒரு சிறு கோயில் உண்டு. ஒரு நாயின் துணையோடு பைரவர் பீடத்தில் நிற்கிறார். என்னோடு நடக்கிற மனைவி சொல்கிறார், ‘பைரவர் சாமில்ல..இங்கே எப்பவுமே நிறைய நாய்கள் நிக்கும்.’ எவ்வளவோ இடம் இருந்தும் புறக்கணித்துவிட்டு, மத்தியான வெயிலைச் சுவரோரம் ஒடுங்கியபடி தாங்கிக்கொண்டு அங்கே ஏழெட்டு நாய்கள் படுத்திருந்ததைக் கவனித்தேன்.
…..
அந்தச் சிறுவன் தெருவில் தனக்குத் தானே ஒரு பந்தை உருட்டி விளையாடிக்கொண்டிருக்கிறான். தரையில் முகம் வைத்து படுத்திருக்கும் நாயைத் தொட்டு பந்து திரும்புகிறது. அதன் கண்கள் மட்டும் அசைகின்றன. விளையாட்டுகளில் ஆர்வம் இழந்துவிட்டாலும், பேரனின் விளையாட்டை வேடிக்கை பார்க்கும் தாத்தாக்கள்தான் சட்டென என் நினைவுக்கு வந்தார்கள்.

இடம் ஒரு ஆந்திரா மெஸ். கூட்டம் குறைந்துபோன பின்மதியம். அன்றைய தினத்தின் கடைசி வாடிக்கையாளர்களான எங்களுக்கு உறவினர்கள் போல ஊழியர்கள் உணவு பரிமாறுகிறார்கள். வேலைகள் முடிந்த ஆசுவாசத்தில் உரிமையாளர் சில பாடல்களை ஒலிபரப்புகிறார். ‘ப்ரே பண்ணுவேன்…நீ எங்க போனாலும்….’, ‘ஜானி ஜானி எஸ் பாப்பா…ஈட்டிங் சுகர் நோ பாப்பா’….என ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?’ படத்தின் பாடல்கள் வரிசையாக ஒலித்து முடிகின்றன. திடீரென மெஸ்ஸுக்குள் நாய்களின் குரைப்பொலி. தொடங்கிய ஒரு பாடல் வேகமாக நிறுத்தப்படுகிறது. ‘அண்ணா…ப்ளீஸ் அந்தப் பாட்டைப் போடுங்களேன்’ என்று தோழி கோரிக்கை வைக்கிறார். உரிமையாளர் கொஞ்சம் குழம்பி, அப்புறம் சுதாரித்துக்கொண்டு, பாடலைத் தொடர்கிறார். ‘நாயே நாயே நாயே நா……யே…’ என்று மெஸ்ஸுக்குள் இப்போது நாய்களின் படையெடுப்பு. ‘இப்படியும் இருக்காங்களே மனுசாளுங்க’ என்கிற மாதிரி உரிமையாளர் சிரித்துக்கொண்டார். எங்களோடு உணவருந்திய மற்றவர்கள் எங்கள் மீது வீசிய விநோத பார்வையை உணர முடிந்தது. நமக்கு பாட்டுதான் முக்கியம். அதுவும் நாய் தான் முக்கியம். அதே ‘இதற்குத் தானே ஆசைப்பட்டாய்?’தான். நாயை வைத்து திட்டினாலும், நாயைப் பாடுபொருளாகக் கொண்ட ஒரு பாடல். நாய்கள் மீது அன்போடு , கூடவே அலட்சியமும் வைத்திருக்கும் மனித சமூகம் அதை இருட்டடிப்பு செய்துவிட்டது, வழக்கம்போல.
…..
மகன்கள் இருவரும் படிப்புக்காகவும் வேலைக்காகவும் நகரத்துக்கு வந்துவிட்டார்கள். பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குவதைத் தவிர வேறெதுவும் தெரியாத ஒரு அம்மாவும் அப்பாவும் இப்போது ஒரு நாயை வளர்த்து வருகிறார்கள். இன்னொரு மகன்போல.
…..
ஞாயிற்றுக்கிழமைகளில் வெறிச்சோடிக்கிடக்கும் பள்ளியின் வளாகம் அன்று ஒரு விழாவால் அல்லல்படுகிறது. குழந்தைகள் கூட்டம் கூட்டமாக நடக்கிறார்கள். ஓடுகிறார்கள். விளையாடுகிறார்கள். இளைப்பாறுகிறார்கள். மறுபடியும் விளையாடுகிறார்கள். இவர்களுக்கிடையே ஒரு நாய் சுதந்திரம் பறிபோன வருத்தம் எதுவுமின்றி நடமாடுகிறது. எல்லோரும் போன பிறகு அது வளாகத்தைத் தன்னந்தனியே மீண்டும் ஆளத் தொடங்கும்.
….

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: