மனம் என்னும் புதிர்!

நேற்றைய இரவின் உறக்கத்தின் ஊடே ஒரு கனவு. என்னை நெடுங்காலமாய் துரத்தி வரும் எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வாய் அது இருந்தது. என் தோள்களை அழுத்தி வந்த சுமை நீங்கிவிட்டதென கனவிலேயே மகிழ முடிந்தது. அது என்ன கனவென்று மறந்தும் விட்டது.
……
கடையைக் கடந்துபோன ஒரு மாடு சாணம் போட்டது. சிறிது நேரம் கழித்து நான் அங்கே வரும்போது ஏதோ ஒரு பாதத்தின் சுவடு தெரிந்தது. மீண்டும் அதைக் கடந்துபோகும்போது, சாணத்தில் பதிந்தது என் பாதமா என்ற சந்தேகம் வந்தது.
…..
சாலையில் கிடந்த ஆணியை சில அடிகளுக்கு முன்பே கவனித்துவிட்டேன். எனினும் அதன் மீது என் பைக் ஏறி இறங்கியது. நிறுத்த முடியாதபடியோ, விலகிச் செல்ல முடியாதபடியோ அப்படியொன்றும் வேகம் இல்லை. ஒருவேளை நான் விரும்பியே வண்டியை விட்டேனோ?
….
பள்ளியை நெருங்கும்போது ஆதியிடம் கேட்டேன். ‘நேத்து நைட் கதை சொன்னேன்ல…ரெண்டாவதா என்ன கதை சொன்னேன்… ஞாபகம் இருக்காடா?’, (ஒரு நாளின் முக்கால் வாசி நேரம் மகளோடு நேரம் செலவிடாத தகப்பன் ஓடும் பைக்கில் வல்லடியாக நடத்தும் பாசப்போராட்டம்!) ’ம்ம்ம்ம்…..அதுவா….முதல்ல யானை கதை…ரெண்டாவதா?’, பைக்கின் பின்னால் இருக்கும் ஆதி யோசிக்கிறாள். ஒன்று அதில் வருகிற கேரக்டரை நினைவுகூர்வாள். இல்லையெனில் ‘ப்ச்..தெரியலை’ என்பாள். அன்று ஏனோ என்னிடம் திருப்பிக் கேட்டுவிட்டாள், ‘நீங்களே சொல்லுங்களேன்’. என் நிலைமை….பக்குன்னு பக்குன்னு பக்குன்னு! உறக்கத்தின் ஊடே சொன்ன கதை. அது என்ன கதை? பள்ளியை அடைந்து சாலையோரம் வண்டியை நிறுத்துகிறேன். வாசல் வரைக்கும் அவளோடு நடக்கிறேன். என்ன கதை? என்ன கதை? என்னைச் சரியாகவே புரிந்து வைத்திருக்கும் ஆதி விடையை எதிர்பார்க்காமல் சக குழந்தைகளோடு சேர்ந்து நடக்கிறாள். கண்கள் அவளைக் கவனித்தாலும், மனம் கதையைத் தேடுகிறது. சக பெற்றோர்கள் டாட்டா காட்டிவிட்டு மறைந்துகொண்டிருக்கிறார்கள். சட்டென ஞாபகம் வருகிறது…தினமும் பிஸ்கெட் கொடுத்த பாப்பாவுக்கு காக்கை பரிசு கொடுத்த கதை! ஆதி வகுப்பறைக்குள் போய்விட்டாள்.
….
ஏதோ ஒரு மெட்டு உதடுகளில் துடிக்கிறது. நான் வாய்விட்டு பாடினால் அந்த மெட்டு மீது இருக்கும் காதலே போய்விடும். மனம் முணுமுணுத்துக்கொண்டே இருக்கிறது. வண்டியில் போகும்போதும் அலுவலகத்தில் இருக்கும்போதும் சாப்பிடும்போதும் துரத்திக்கொண்டே இருக்கிறது. அண்மையில் விரும்பிக் கேட்ட சில பாடல்களை இரவில் தேடிக் கேட்கிறேன். சிறு பெண்ணாக இருந்த காலத்தில் சுஜாதா பாடிய பாடல் வருகிறது.‘நீ இல்லாதபோது ஏங்கும் நெஞ்சம் சொல்லாத கதை நூறு…அது நில்லாத புது ஆறு….’ அதன் சரணத்தில் ஒளிந்திருந்தது அந்த மெட்டு.

டீமில் என்னைப் போலவே என் நண்பரிடமும் மறதி கொஞ்சம் விளையாடும். அண்மையில் வந்த ஒரு படத்தைப் பற்றிய பேச்சு எழுகிறது. இருவரும் ஆழ்ந்து பேசுகிறோம். ‘அது என்ன படம்…?’ என்று அவரை நான் கேட்க, அவர் என்னைக் கேட்கிறார். என்ன படம்…? நான் போராடி சொல்லிவிட்டேன். ஆனால் அது தலைப்பில் பாதிதான். ‘இதே டைட்டில் தான்…ஆனா இந்த டைட்டில் இல்ல…நாம ஒரு முடிவுக்கு வந்துர வேணாம்…’ என்கிறார். ’நம்ம நிலைமை இப்படி ஆகிப்போச்சே’ என்று நாங்கள் சிரித்துக்கொண்டிருக்கும்போதே இருவருக்குமே படத்தின் பெயர் ஞாபகத்துக்கு வந்துவிட்டது. ஒற்றுமையே வலிமை, மறதியிலும்.
…..
அந்தக் கடையில் ஒரு நாயும் வளர்க்கப்படுகிறது. நல்ல கறுப்பு நிறம். கடைக்காரரின் வாகனம்போல, வாரிசுபோல அங்கே அதற்கு இடம் இருந்தது. அடிக்கடி கடைக்குப் போகும் எனக்கும் அது ஓரளவு பழக்கம்தான். பேரைச் சொல்லிக் கூப்பிட்டால், குரைப்பைச் சற்று நிறுத்தி வாலாட்டும். அன்றும் ஆசையோடு கூப்பிட்டேன். யாரையோ பார்த்துக் குரைத்துக்கொண்டிருந்த நாயிடம் எந்த மாற்றமும் இல்லை. கூடுதலாக என்னை நோக்கி உறுமியது. எனக்கும் ஏதோ ஓர் உறுத்தல். ‘என்னாச்சு ஜூலி உனக்கு?’ என்று என்னையும் சேர்த்து அதனிடம் விசாரித்தேன். கடைக்காரர் சொன்னார், ‘அது பேர் ஜூலி இல்ல…ரோஸி…!’ என் மனம் கமுக்கமாக ‘ஆத்தாடி!’ என்றது.

எல்லா காயங்களுக்கும் நம் வடிவேலுவிடம் மருந்து இருக்கிறது. தன் சட்டையின் பட்டன்களைத் தடவிக்கொண்டே வடிவேலு குழம்புகிறார், ‘கண்ணதாசனா, ஜேசுதாசா?’
…..

மறதிக்காக மனதைச் சாட்டையால் விளாச ஆத்திரம் வந்தாலும் அதைச் செய்ய முடியவில்லை. அலுவலக கேண்டீனில் கடந்துபோன ஒருவரிடமிருந்து பிஸ்கெட் ஃப்ளேவரில் ஒருவித பெர்ஃப்யூம் வாசனை. சட்டென்று நிற்கிறேன். ஹால் முழுதும் பரவியிள்ள உணவுகளின் வாசனைகளையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு அந்த வாசனை உள்ளே ஊடுருவுகிறது. ஏறக்குறைய 30, 35 வருடங்களுக்குப் பிறகு இந்த வாசனை. மனதில் ஓடிய ஸ்கேனிங் முடிந்தது. ஐந்து வயதில் கடம்பூரில் வசித்தபோது எங்கள் வீட்டுக்கு எதிரே பேச்சிலர் அண்ணன்கள் சிலர் வீடெடுத்து தங்கியிருந்தார்கள். அவர்களில் ஒருவர் புருஸ்லீ முடிவெட்டுடன் கறுப்பு கமல் போலிருப்பார். அவர் பயன்படுத்திய செண்டின் வாசனை பல வருடங்களுக்குப் பிறகு நாசியில் புகுந்து மனதில் வெளிப்படுகிறது. இந்த மனதைப் பாம்பென்று அடிக்கவும் முடியாது. பழுதென்று தள்ளவும் முடியாது!
……

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: