மனம்போல வாழ்வு

அவனைத் தவிர யாரும் இல்லாத வீட்டில் குளிக்கிறான். மூடிக்கொள்ள அடம்பிடிக்கும் குளியலறைக் கதவு சிரமப்பட்டு சாத்தப்படுகிறது. தினசரி வாழ்க்கையில் அறிந்தும் அறியாமலும் சில அபத்தங்கள்.
…..
இவனுக்கு எல்லோருடனும் பிணக்குகள் உண்டு. உறவின் சரளத்தில் அவை வசதியாக மறதியில் வைக்கப்படுகின்றன. மறந்துபோன பிணக்குகள் உரசல் வரும் நேரத்தில் கணக்கில் சேர்க்கப்பட்டு பகை என இவனுக்குள் உருக்கொள்கிறது.
….
அன்புக்கான சில பிரயத்தனங்களைக் குழந்தைத்தனம் என்றும் சினிமாத்தனம் என்றும் ஒதுக்கி வைக்கிறோம். தேவையானபோது யாருக்கேனும் கொடுக்கும்போதுதான் அந்தப் பிரயத்தனங்கள் நம் மனதில் அதுவரை ஒளிந்திருந்த கதை நமக்கே தெரிய வருகிறதா?
….
ஆளற்ற வீட்டிடமிருந்து விடைபெறுவது மிகவும் கடினமான செயல். கொஞ்சம் கவனப்பிசகு உள்ளவர்கள் அதை உணர்ந்திருக்க கூடும். ’கிளம்புறப்போ போன் வந்துச்சே…பூட்ட மறந்துட்டமோ?’ என்று இரண்டு தளங்கள் இறங்கி வந்த பிறகு சந்தேகம் வரும். ‘டீ சூடு பண்ணுன பிறகு கேஸை ஆஃப் பண்ணுனமா?’ என்று தெருமுனையைத் தாண்டும்போது ஒரு கேள்வி எழும். இதுவரை அவன் ஒருமுறை கூட வீட்டைப் பூட்டாமல் வந்ததில்லை. அடுப்பின் சுடரை அணைக்கத் தவறியதில்லை. சந்தேகம் மனதைத் தட்டுகிற ஒவ்வொரு முறையும் மெனக்கெட்டு பதினைந்து படிகள் ஏறிப்போய் சோதித்துப் பார்த்து திருப்தி கொள்ளாமலும் இருந்ததில்லை. அவனுக்கு சந்தேகம்… உத்தரவிட்டே பழகிய ஒரு காதலி.
….

’எங்கே என்னைப் பார்த்து சொல்லுங்க’ என்று மனைவி சொல்லும்போது, கணவனுக்குள் ஒரு பொய் அப்படியே அடங்கி கண்ணீர் விடுகிறது. அடுத்த முறை அதே பொய் தன் முகத்தில் சின்ன மருவோ தாடியோ ஒட்டிக்கொண்டு களத்தில் இறங்க வேண்டியிருக்கிறது.
…..
உரத்த குரல்களும் மௌன இடைவெளிகளுமாக விவாதம் முடிந்தது. வீட்டிற்குத் திரும்பும்போது, அதில் பேச மறந்த விஷயங்கள் வரிசையாக நினைவுக்கு வந்துகொண்டே இருக்கின்றன.
…..
வாளைச் சுழற்றி அடிக்கும் ஆவேசத்தில், ‘யாருடன் நம் சண்டை?’ என்பது சில சமயங்களில் மறந்துபோகிறது.
…..
ரகுமானின் பாடல்கள் கேட்கக் கேட்கப் பிடிக்கின்றன. தன்னைப் பார்க்கப் பார்க்க பிடிக்கும் என்று தனுஷ் சொல்கிறார். ‘பாக்க கருவண்டு மாதிரிதான் இருந்தா…இப்போ வேற மாதிரி இருக்கா’ என முத்தழகைப் புதிதாக ரசிக்கிறான் பருத்திவீரன். மாய்மாலமே…உன் பெயர்தான் மனமா?
……
ஒரு சண்டைக்குப் பிறகு நீண்ட மௌனத்தைக் கடந்துபோக வேண்டியிருக்கிறது. தாமதமாக வந்துசேர்ந்த நிதானத்தில் என் வார்த்தைகளின் விஷம் புரிகிறது. விஷத்தை நானும் உண்டு செரிக்க வேண்டும்.
…..
சாலையோர உணவகத்தில் பிரியாணியை எடுத்து விழுங்கும் நேரம்பார்த்து வந்து கையேந்துகிறாள் பரட்டைச்சிறுமி ஒருத்தி. சுள்ளென்ற கோபம் எழுகிறது. அவளுக்குமான உணவுதான் என் தட்டில் இருக்கிறது என்ற உண்மை புரிய சில நொடிகள் தேவைப்படுகிறது. கோபம் வாலை ஒடுக்கும் நாய் ஆகி எங்கோ ஓடிவிட்டது.
….

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: