கடைசி வார்த்தை

சிட்னியின் புறநகர்ப்பகுதியில் பணி முடிந்து, வீடு திரும்பிக்கொண்டிருந்த பிரபா யாரோ ஒருவனிடம் கத்திக்குத்து பட்டு சரிந்துவிழுகிறார். அவர் இந்தியாவில் இருக்கும் தன் கணவரோடு அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார். அன்றைய தினத்தின் கடைசி வார்த்தையாக, ‘என்னைக் குத்திவிட்டான்’ என்று முனகுவோம் என அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார்.

வேறு சாதியைச் சேர்ந்தவரைக் காதலித்ததற்காக தன் தந்தையால் அடித்துக்கொன்று எரிக்கப்பட்ட சிவகங்கை தமிழ்ச்செல்வி சொன்ன கடைசி வார்த்தைகள், ‘எப்படியும் என்னை உயிரோடு விட மாட்டீங்க. தம்பி தங்கச்சிய நல்லா பார்த்துக்குங்க. சாகப் போற எனக்கு நகை எதுக்குப்பா?’ என் நகையை தங்கச்சிக்குக் கொடுங்க.’

இரு கொலைகளுமே வெவ்வேறு நோக்கம் கொண்டவை. எனினும் கொல்லப்பட்டவர்களின் கடைசி வார்த்தைகளோடு நம் கவனத்துக்கு வந்திருப்பதால் ஒரே தளத்தில் வைத்துப் பார்க்க தோன்றுகிறது.

இறப்பதற்கு முன் ஒருவர் சொல்லும் வார்த்தைகள் என்றைக்கும் அழியாத எழுத்தாகிவிடுகின்றன. யார் யாருக்கோ அந்த வார்த்தைகள் ஒரு துர்கனவின் வலியைக் கொடுப்பதாக அமைந்துவிடுகின்றன.

அடுத்த மாதம் மனைவியைப் பார்க்கும் ஆவலுடன் பெங்களூருவில் இருந்த பிரபாவின் கணவர் அந்த வார்த்தைகளைக் கேட்டு எவ்வளவு துடித்திருப்பார்? ஆபத்தில் இருந்த மனைவியைக் காப்பாற்ற முடியாத கையறுநிலையும் மரணத்தைத் தழுவும் நிலையில் மனைவியின் கடைசி வார்த்தைகளும் ஆறாத ரணமாக அவரை வாழ்நாள் முழுக்க துன்புறுத்தும்.

தமிழ்ச்செல்வியின் கடைசி வார்த்தைகளைக் காவல்துறையிடம் சொல்லி தந்தையின் கையாட்கள் வருத்தப்பட்டதாக செய்திகள் சொல்கின்றன. இந்த வருத்தம் அவரது தலையில் விறகுக்கட்டையால் அடிக்கும் முன்னால் வந்திருந்தால் அந்தப் பெண் உயிர் பிழைத்திருக்கக் கூடும். கொலை வெறியாக மாறிவிட்ட சாதிப்பற்று குறைந்தபட்ச இரக்கத்தையும் விழுங்கிவிட்டது.

கொல்லப்படுகிற, அநியாயமாகச் செத்துப்போகிற எல்லோருக்குமே கடைசி வார்த்தைகள் இருக்கத்தான் செய்கின்றன. அதிர்ஷ்டவசமாக அவை நம்மை வந்தடைவதில்லை.

அகாலமாக மரணிப்பவர்களே, உங்களுக்கு ஒரு வேண்டுகோள்…தயவு செய்து மௌனமாக விடைபெறுங்கள். உங்கள் வார்த்தைகள் எங்களைப் பைத்தியம் ஆக்குகின்றன.

கொலைகாரர்களே, உங்களால் கொல்லப்படுபவர்கள் ஒரு வார்த்தையும் பேசாமல் இறக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். அவர்கள் விட்டுச் செல்லும் வார்த்தைகள் உங்கள் மீதான மீளா சாபமாக இறங்கும் வலிமை படைத்தவை. அவை உங்களைக் கொல்லும் வெறியை மூன்றாவது நபர்களுக்கு விஷம் போல ஊட்டுவதாகவும் இருக்கின்றன.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: