பிரச்னையும் காலண்டர் தத்துவங்களும்

இரவுகளில் வாழ்க்கை ஒரு வைரம் போல மனதில் மின்னுகிறது. நாளை புதிதாய் தொடங்கும் என ஒரு நம்பிக்கை பிறக்கிறது. மறு நாள் காலை வந்தால் அதே மனம் ‘நான் அவனில்லை’ என்கிறது.

…..
பிரச்னை வந்தால் நமக்கு நாமே ஆணியடித்துக்கொண்டு உட்கார்ந்துவிடுவது இயல்பானது. சுகமானதும் கூட. நீண்ட பெருமூச்சுகளுக்குப் பிறகு எப்படி அதைக் கடக்கலாம் என்று வழி தேடி கிளம்பும்போது நம் இருப்பு உறுதிப்படுத்தப்படுகிறது.
…..
உதவிக்கு யாரும் அற்ற வீட்டில் நுழைந்த பாம்பு போல ஒருகாலத்தில் நம்மைச் சில பிரச்னைகள் அச்சுறுத்தின. இன்று அவை ஒரு தவளை போல வேடிக்கையாக நமக்குக் கீழே தத்திச் செல்வதைக் கவனித்தீர்களா?
…..
என்னை நலம் விசாரிப்பவர்களிடம் ‘ஏதோ வண்டி ஓடுது’ என்று வண்டி ஓட்டுவதை நான் நிறுத்திய நன்னாளிலிருந்து என் வண்டி நன்றாக ஓடத் தொடங்கியது.
…..
எதிரிகள் கூட நம் வெற்றியை ஒருநாள் ஒத்துக்கொள்வார்கள். நமக்குப் பக்கத்திலேயே இருப்பவர்கள் ஒத்துக்கொள்வதுதான் பெரிய விஷயம். எனினும் நம் மனம் ஒத்துக்கொள்கிற வெற்றியே இலக்கு என்பதை மறக்க வேண்டாம்.
…..
புல்லைத் தின்று தன்னைச் சரிசெய்துகொள்ளும் நாய் போல பிரச்னைகளுக்குத் தீர்வு தேடும் முனைப்பு எனக்குள் வேண்டும்.
…..
சில சமயங்களில் நம்மை நோக்கி வருகிற பிரச்னையின் அளவை விட, நம்முடைய அளவைச் சிறியதாக ஆக்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. காரணம் எளிமையானது. ஈகோ போட்டுத்தள்ளப்படுகிறது. பதற்றம் நீங்கி மனம் லேசாகிறது. தீர்வு சீக்கிரமே கண்ணுக்குத் தட்டுப்படுகிறது.
……
பிரச்னை அவனுக்குப் பிரச்னை இல்லை. பிரச்னையின்போது அவன் எப்படி நடந்துகொள்கிறான் என்பதுதான் அவனுக்குப் பிரச்னை.
……
உன் பிரச்னை பற்றி அவன் விசாரிக்கிறான். அவன் என்றைக்குமே உனக்குப் பொருட்டில்லை. எனினும் அவனிடம் உன் பிரச்னையை இயன்றவரைக்கும் சொல். ஒருவேளை அவனிடம்கூட தீர்வு இருக்கலாம்.
……
பிரச்னைகள் வரும். போகும். எனினும் எப்போதும் பிரச்னைகளைப் பற்றியே பேசுபவர்களிடமிருந்து சற்று விலகியே இருத்தல் நமக்கு நல்லது.
…..
கூட இருப்பவர்களால் என் பிரச்னை தீர்க்கப்பட்டிருக்கிறது. என்னால் தான் பிரச்னை தீர்ந்தது என நான் நினைக்கத் தொடங்குகையில் எனக்கு மீண்டும் ஓர் அடி காத்திருக்கிறது.
….
பாம்புக்கடி பட்டவனுக்கு நஞ்சை விட பயமே முதல் எதிரி. விபத்தை வேகமாக நெருங்கிக்கொண்டிருப்பவனுக்கு மலைப்பே எதிரி.

வெற்றிகள் நம் நினைவில் இருக்கின்றன. வெற்றியைத் தேடித்தந்த வழிமுறைகளைத்தான் மறந்துவிடுகிறோம்.
….
வெற்றியா தோல்வியா என்று கேட்டால் வெற்றிதான் என் சாய்ஸ். வெற்றியா வாழ்க்கையா என்று கேட்டால் வாழ்க்கைதான். அப்புறம் வெறும் வெற்றியை வைத்து என்ன செய்வது?

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: