ஆயிரம் வகை இட்லிகள்

டாக்டர் இட்லி இனியவனைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? எனக்கு இன்றுதான் தினகரன் செய்தித்தாள் மூலமாகத் தெரியும். இனியவன் விதவிதமாக இட்லி செய்வதில் நிபுணர் என்பதை நாம் எளிதில் புரிந்துகொள்ள முடியும்.

குறிப்பாக, நாளை வியாசர்பாடியில் ஒரு பள்ளி வளாகத்தில் இனியவன் முன்னின்று நடத்தவுள்ள ஒரு நிகழ்ச்சிதான் என்னை அவரைக் கவனிக்க வைத்தது. அவர் ஆயிரம் ரகங்களில் இட்லி செய்து மக்களின் பார்வைக்கு வைக்கப்போகிறார். சர்க்கரை நோயாளிகள் சாப்பிடத்தக்கது, பல தானியங்கள் சேர்க்கப்பட்டது, ஆரஞ்சு, ஆப்பிள் உள்ளிட்ட பழங்களில் செய்யப்பட்டது, கேரட், பீட்ரூட் போன்ற காய்கறிகளில் செய்யப்பட்டது, இளநீர், மூலிகை, சாக்லேட் இப்படி இட்லி ரகங்களின் பட்டியல் நீள்கிறது. இவர் ஏற்கனவே 124 கிலோ மாவில் ஒரு இட்லி செய்து சாதனை செய்திருக்கிறார்.

’1000 ஆயிரம் வகை இட்லி செய்யும் சாதனை நிகழ்ச்சி’ என்ற தலைப்பைப் பார்த்த முதல் நொடியில் , ‘ஆமா…இப்போ ரொம்ப முக்கியம்’ என்றுதான் எனக்கு முதலில் தோன்றியது. இட்லி இனியவன்களை ஏன் அலட்சியமாகக் கடந்துபோக வேண்டும் என்ற கேள்வியும் கூடவே எழுந்தது.

இன்றைய சமூகச்சூழலில் இட்லி நம்மால் வஞ்சிக்கப்பட்ட ஓர் உணவு. உளுந்தின் ‘நற்குணங்கள்’ (உண்மையிலேயே) கொண்டதும் வேக வைப்பதால் எண்ணெயோடு துளியும் தொடர்பில்லாததும் எளிதில் செரிக்கக் கூடியதுமான இட்லி இன்று கறுப்பு வெள்ளை திரைப்படம் போல ஆகிவிட்டது. நோயாளிகளோ, ருசி அறிந்து உண்ணத் தெரியாதவர்களோ, நாகரீகத்தில் பின்தங்கியவர்களோ, பணத்தைச் சில்லறைக் காசுகளாக வைத்திருப்பவர்களோ மட்டுமே தேர்வு செய்யும் ஓர் உணவு. இப்படி பலவிதங்களில் புறக்கணிக்கப்பட்ட ஒரு நல்ல விஷயத்தை மீண்டும் மக்களிடம் கொண்டுசேர்க்க இத்தகைய நிகழ்ச்சிகள் அவசியம் தான்.

நூறு தேள்களுக்கு மத்தியில் ஒரு மாதம் வாழ்வது, லாரியை உள்ளங்கைகளில் ஓட விடுவது, நட்டு போல்ட் வகையறாக்களைக் கடித்து நொறுக்குவது மாதிரியான வெறும் ’சாதனை போதை’ சமாச்சாரமாக இது தோன்றவில்லை.

இன்னொரு பார்வையிலும் இட்லி இனியவன்களின் சாதனைகள் நமக்குத் தேவையானவையாகத் தோன்றுகின்றன. இலங்கைப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி ’தீவிரவாத’த்தை வென்றதற்காக அந்த நாட்டுக்கு வாழ்த்து தெரிவித்து நம் வயிற்றில் அமிலம் வார்க்கிறார். இன்னொரு பக்கம், ’இந்த நாட்டில் எல்லோருமே இந்துக்கள் தான்’ என்று ஆர். எஸ். எஸ் தலைமை பிதற்றுகிறது. ’எந்த நேரத்துலயும் உன் நிலத்தைப் பிடுங்கி எனக்கு வேண்டிய கம்பெனிக்குக் கொடுப்பேன். கிடைக்குற பணத்தை வாங்கிட்டு நீ போய்ட்டே இருக்கணும்’ என்ற பட்டப்பகல் கொள்ளையை ஒரு சட்டமாகவே ஓர் அரசால் கொண்டுவர முடிகிறது. கொஞ்சம் சுரணையுள்ள ஒருவரை எப்போதும் கொதிப்பிலேயே வைத்திருக்க போதுமான அளவுக்கு நம்மைச் சுற்றி அபத்தங்களும் பயங்கரங்களும் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன.

இவற்றுக்கிடையே பெருமூச்சு விட்டுக்கொள்ள ஓர் இளைப்பாறல் போல, போர்க்களத்தில் சண்டை நடந்தாலும், கருவூலத்தில் பார்க்க வேண்டிய கணக்குபோல, குடும்பத் தலைவர் மரணப்படுக்கையில் கிடந்தாலும் தொழுவத்தில் உள்ள கால்நடைகளுக்குச் செய்ய வேண்டிய பராமரிப்பு போல இதுபோன்ற நிகழ்வுகளும் நம்மிடையே நடந்துதான் ஆக வேண்டும். இறுகியே கிடக்கிற சமூகத்துக்கு நிச்சயம் இதுபோன்ற சின்னச் சின்ன நெகிழ்ச்சிகள் தேவை. ‘என்னத்த செஞ்சு …என்னத்த சமைச்சு…என்னத்த வாழ்ந்து’ என்று அனைவருமே ’என்னத்த கன்னையா’க்கள்’ போல பேசிக்கொண்டிருந்தால் சமூகம் உருப்படாது.

ஆயிரம் வகை இட்லிகள் இனியவனின் சாதனை வேட்கையோ விழிப்புணர்வு முயற்சியோ அவரை வாழ்த்துவோம்.

சில நீதிபதிகள், முன்னாள் அரசு உயர் அதிகாரிகள் இப்படி பல பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். பவர் ஸ்டார் சீனிவாசனும் விருந்தினர்களில் ஒருவர். பவர் ஸ்டாருக்கான தடபுடல்களில் இட்லிகள் சீண்டுவார் இல்லாமல் போய்விடக் கூடாது என்பது மட்டுமே என் கவலை.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: