தீர விசாரிப்பதே மெய், ஆனால்?

dalit

உத்தரப்பிரதேச தலித் குடும்பம் காவல்துறையினர் முன்னிலையில் ஆடை களையப்பட்ட சம்பவம் இப்போது கேள்விக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சாதாரண பிரச்னைக்குப் புகார் செய்ய வந்தவர்கள் அவர்களாகவே ஆடை களைந்துகொண்டார்கள் என்பதுபோன்ற விளக்கத்தைக் காவல் துறையின் ஓர் உயர் அதிகாரி கூறியுள்ளார். தாங்களே ஆடைகளைக் களைந்து நடுத்தெருவில் அம்மணமாக நிற்க மொத்தக் குடும்பமும் என்ன மனநிலை பிறழ்ந்தவர்களா? காவல் துறையினருக்கும் அவர்களுக்கும் இடையேயான பேச்சுவார்த்தையில் அசாதாரணமான, மோசமான ஏதோ ஒன்று இடம்பெற்றிருக்க நிறையவே வாய்ப்பிருக்கிறது. இந்தியாவில் காவல்துறை பெற்றிருக்கும் அதிகாரம் யாரும் சொல்லித் தெரிய வேண்டிய ஒன்றில்லை. அவர்களின் நடைமுறை எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள ஒரே ஒருமுறை காவல்நிலையம் சென்று வந்தால் போதுமானது. அண்மையில் என் நண்பனுக்கு வங்கிக்கடன் வாங்கித்தர வந்த ஒரு ஏஜெண்ட் அவன் தந்த காசோலையைப் பயன்படுத்தி, வங்கிக்கணக்கிலிருந்து ஏறக்குறைய 30 ஆயிரம் ரூபாயைத் திருடிவிட்டான். அதுகுறித்து புகார் கொடுக்க காவல்நிலையத்திற்குச் சென்றிருந்தோம். எங்களிடமிருந்து அடிப்படைத் தகவல்களைக் கேட்கக் கூட அவர்கள் தயாராக இல்லை. பதிவு செய்வதெல்லாம் அதிகபட்சக் கனவு. எரிந்துவிழுந்தபடியே காவலர் ஒரு வெள்ளைத்தாளைக் கொடுத்து புகாரை எழுதச் சொன்னார். ‘ரெண்டு நாள் கழிச்சு வாங்க’ என்றார். எங்களிடம் சிடுசிடுப்புடன் விசாரித்துக்கொண்டிருக்கும்போதே, ஏதோ சிபாரிசுடன் வந்த ஒருவரிடம் இன்முகத்துடன் புகாரைப் பதிவு செய்ய அவரால் முடிந்தது. அவமானத்தின் ஆரம்பக் கட்டத்திலேயே நண்பன் விழிப்படைந்து, ‘விடுடா…இவங்ககிட்ட போய் நின்னு அவமானப்பட்டுக்கிட்டு…’ என்று அத்தோடு விலகிவிட்டான்.  இன்றுவரை எனக்கும் என் நண்பனுக்கும் அந்தச் சம்பவம் ஒரு கெட்ட கனவு தான். அவர்களின் தகவல்தொடர்பு முறை எல்லோரையும் சந்தேகப்படுவதாக இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் புகார் கொடுக்க வருபவர்களில் பலவீனமான பிரிவினரைக் கேவலப்படுத்துவதாக இருக்கும் என்பதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உ.பி தலித் குடும்ப விவகாரத்தில் பிரச்னையில் அழுத்தம் கொடுக்குமளவுக்குச் செயல்பட எந்தத் தரப்புக்கு வலு இருக்கிறது? காவல் துறைக்கா, தலித் குடும்பத்துக்கா?

அவர்களே தங்கள் ஆடைகளைக் களைந்துகொண்டார்கள் என்ற செய்தி உண்மை என்றே வைத்துக்கொண்டாலும், தங்கள் பைக் காணாமல் போய்விட்டது என்று புகார் கொடுக்கச் சென்ற ஒருவருக்கு ஏன் இப்படியொரு நிலை ஏற்பட வேண்டும்? நாட்டில் ஒரு நாளுக்கு ஆயிரக்கணக்கானவர்கள் இத்தகைய புகார்களோடு காவல் நிலையங்களுக்கு ஏறி இறங்கிக்கொண்டிருக்கிறார்கள். உயர் சாதியினர் என்று சொல்லப்படுபவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் இப்படி பல்வேறு சாதியினரும் புகார் கொடுப்பவர்களில அடக்கம். அவர்கள் யாரேனும் இப்படி ஆடை களைந்து நின்றதாகச் செய்திகள் வந்ததுண்டா? சம்பந்தப்பட்டவர்கள் ஒடுக்கப்பட்ட சாதியினராக இருப்பது இதில் ஒரு முக்கியமான காரணியாக இருக்கிறதா இல்லையா?

நடுத்தெருவில் ஒரு தலித் குடும்பம் ஆடையின்றி நிற்கும் காணொளி அவர்கள் காவல்துறையினரால் அம்மணமாக்கப்பட்டார்கள் என்ற தவறான செய்தியைக் கொடுத்துவிட்டது என்றே வைத்துக்கொள்வோம். இப்படி ஒரு காணொளி வெளியானதும், அவர்கள் காவல்துறையினரின் அத்துமீறலால்தான் இந்த அவமானத்துக்கு உள்ளானார்கள் என்ற முடிவுக்குப் பலர் வரக் காரணம், இதுவரை காவல் துறையினர் மூலம் தலித்கள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருமே இப்படி அவமானங்களுக்கும் சித்திரவதைகளுக்கும் உள்ளாகியிருக்கிறார்கள். விளிம்பு நிலை மக்கள் அதிகார வர்க்கத்தால் கேவலப்படுத்தப்படுவது நம் நாட்டில் மிக சாதாரண நிகழ்வு. இந்த நிலை இருக்கும்வரை, இதுபோன்ற காணொளிகள் மூலம் முந்தைய அனுபவங்கள் காட்டும் திசையில்தான் மனித மனம் முடிவெடுக்கும்.
அதற்கு விதிவிலக்காக ஒரு ஆதாரம் அமைந்துவிட்ட சூழ்நிலையில்,அதற்கான எதிர்வினையை தவறு என்று சொல்லலாம். அதை எள்ளி நகையாட ஒன்றும் இல்லை. எதிர்வினைகள் மிகையாக இருக்கும்விதத்தில்தான் இங்கே வினைகள் நடந்துகொண்டிருக்கின்றன.

காவலர்களிடம் புகார் கொடுக்க வந்த ஒரு தலித்(மட்டும்) குடும்பம் ஆடைகளை அவிழ்த்துவிட்டு நிர்வாணமாக நிற்குமளவுக்கு நம் சமூக நிலை இருக்கிறதே என்று நொந்துகொள்வதுதான் சொரணையுள்ள சமூகத்தின் எதிர்வினையாக இருக்கும். பொது இடங்களில் நம் ஆடையை அடுத்தவர் களைந்தாலும் நாமே களைய நேர்ந்தாலும் அவமானம் ஒரே அளவுதானே.

தலித் குடும்பம் தங்களைத் தாங்களே அம்மணமாக்கிக்கொண்டது என்ற செய்தியை பிபிசி வெளியிட்ட தமிழ்க்கட்டுரையில் படித்தேன். கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்ற வாக்கியங்களோடு அந்தக் கட்டுரை தொடங்குகிறது. தீர விசாரிப்பதுதான் மெய். ஆனால் யாரிடம் விசாரிப்பது? அந்தக் கட்டுரையில் தலித் குடும்பத்தின் குரலாக காவல் துறையும் ஓர் உள்ளூர் செய்தித்தாளுமே பேசியிருக்கிறார்கள். பிரச்னையில் சம்பந்தப்பட்ட தலித்கள் ஒருவரின் குரலும் அதில் பதிவாகவில்லை. ஆனால் இந்தக் குடும்பம் ஆடை களையப்பட்ட காணொளிக்கான உடனடி எதிர்வினைகளை இப்போது பரிகசித்துக்கொண்டிருக்கும் எதிர்வினையாளர்களுக்கு அந்தக் குரல்கள் தேவைப்படவே இல்லை. பாதிக்கப்பட்ட நபர்களின் பதில் இல்லையே என்பதைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் அந்தக் கட்டுரையை பகிர்ந்துகொண்டே இருக்கிறார்கள். ஒரு குற்றம் தொடர்பான பிரச்னையில் தீர விசாரிப்பது என்பது காவல் துறை அதிகாரி கொடுக்கும் விளக்கம் தான் என்று நம்புவார்கள் எனில், இவர்கள் எவ்வளவு அப்புராணியானவர்கள்?

தலித்கள் ஆடை களையப்பட்ட காணொளியையும் அதைப் பதிவு செய்த புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் பகிர்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. சரியா தவறோ ஓரளவோ முழுமையானதோ அரசியல் புரிதல் உள்ளவர்களே இங்கே இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குப் படம் போட்டுக் காட்டி அவலத்தைப் புரிய வைக்க வேண்டிய தேவை இல்லை. பாதிக்கப்பட்டவர்களின் அடுத்த கட்ட வாழ்க்கையை அந்தப் பதிவுகளும் சேர்த்துப் பாதிக்கலாம். அவர்களை ஆதரிக்கும் செயல்பாடுதான் எனினும் ஏதோ ஒரு விதத்தில் இத்தகைய காட்சிப்பதிவுகளைப் பரப்புவது அவர்களைச் சங்கடப்படுத்தும் ஒரு செயலாகவே இருக்கும் என்றும் கருதுகிறேன். ஆனால் இப்படி துன்பியல் காட்சிகளைப் பகிர்வதில் பிரச்னைக்குரிய உள்ளம் என்று எதுவும் இயங்க வாய்ப்பு இல்லை. சட்டென ஒரு வாய்ப்பு கிட்டும்போது நடந்தது எல்லாமே பொய் என்று மறுப்பதிலும் நீங்கள் எல்லாரும் கோமாளிகள் போல அதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தீர்கள் என்பதிலும்தான் பிரச்னை இருக்கிறது.

புகைப்படம்: இன்னொரு மாநிலத்தில் இன்னொரு காரணத்துக்காகத் தாக்கப்பட்ட தலித்கள் (புகைப்படத்துக்கான நன்றி: தி இந்து)

Advertisements

வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டு

விரைந்துவந்த வாகனங்களுக்கு முன்னே
எருமைகளின் மெதுநடை.
காலம் அப்படியே உறைகிறது.
…….
முதல் கரண்டி மாவுக்காக
தோசைக்கல் கொதிக்கும் இடைவெளியில்
கல்லில் எப்போதோ விழுந்து மறைந்த
நல்லெண்ணெய் மீண்டும் மணக்கிறது.
………
கனவில் வந்தவளை
இதற்கு முன் பார்த்ததில்லை.
மாத விடாய்க்குத் தான் வைத்த
செல்லப் பெயரை என்னிடம் சொல்லி
அவள் கலகலவென சிரித்தது
மட்டும் நினைவில் இருக்கிறது.
……

கூரிய வாளிடம் பேசுகிறோம்

என்பதை அறிந்தே அவன் சொன்னான்,

வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு!’

அவனளவில் அவன் போராடிக் களைத்திருந்தான்.

ஒளிவீசும் வாளின் முனை அன்று உணர்த்திய செய்தி

தனக்குச் சாதகமானதல்ல என்பதை உணர்ந்திருந்தான்

எனினும் உள்ளுக்குள் ஒரு சிறு கீற்றாய் நம்பிக்கை.

அவனுக்கும் தனக்குமான மரண விளையாட்டு தொடரும் என்ற

வாளின் எதிர்பார்ப்பைக் குலைத்ததே

அவனுக்கு ஒரு வெற்றியாகவும் தோன்றியது.

வாளின் மௌனம் தந்த தைரியத்தில்

மீண்டும் சொன்னான்,

வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு!’

வாளின் நீண்ட அமைதி அவனுக்கு

இப்போது அச்சம் தந்தது.

வாளின் உதடுகளில் இருப்பது

புன்னகைதானா என்ற ஐயம் அவனுக்கு வந்தபோது,

புற்றிலிருந்து வெளிப்படும் பாம்பின் ஒழுங்குடன்

வாள் அவனை நோக்கி வந்துகொண்டிருந்தது.

எச்சிலை விழுங்கிக்கொண்டே அவனும்

வாளும் ஆயத்தமானார்கள்.

கடைசிநொடி துணிச்சலை இருவரும்

பெற்ற தருணத்தில் அது நிகழ்ந்தது.

வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு.

இழுத்துக்கொண்டே போன ஓர் ஆட்டம்

முடிவுக்கு வந்துவிட்டது.

தன்னைச் சீண்டிக்கொண்டே இருந்த ஒரு சவாலை

வாள் அது நினைத்தபடியே வெட்டி எறிந்துவிட்டது.

வென்ற பெருமிதத்திலும்

வன்மம் தந்த ரகசிய சந்தோஷத்திலும்

இவ்வளவு காலம் பின்வாங்கியதை

ஒரே வீச்சில் ஈடுகட்டிய ஆசுவாசத்திலும்

அனைத்தையும் விட ‘அவ்வளவுதானா?’ என்ற

வெறுமையிலும் தத்தளித்துக்கொண்டிருந்த வாளை ஈர்த்தது

திசைக்குழப்பத்தோடு வந்த ஒரு மெல்லிய ஓசை.

தெறித்து விழுந்த துண்டுகளில் ஒன்று

எங்கிருந்தோ சொன்னது,

‘வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு!’

கம்முனு கிட

சாதம் என்றும் வொயிட் ரைஸ் என்றும் சொல்லப்படும் இடங்களில் சோற்றை சோறு என்று சொல்வதும் ஒரு புரட்சியே.

……..

பொய் என்பது நிகழ்வதற்குச் சற்று முன்பே சொல்லப்படும் உண்மை எனில், பொய் நல்லது.

………

அடி என்றும் சொல்லலாம். அனுபவம் என்றும் சொல்லலாம்.

……..

யாரையோ குறிவைத்து உன்னிடம் வந்துசேர்ந்த அவதூறின் ஆயுளைக் குறைக்க ஓர் எளிய வழி, கம்முனு கிட.

………

நிறைய பேசிவிட்டேன். பேசியதைக் காப்பாற்றுவதே தனி வேலையாகிவிட்டது.

…….

திருட்டுச்சாவிகள் ஒருபோதும் மாற்றுச்சாவிகள் ஆவதில்லை.

……..

ஓரிடத்திலிருந்து புலம்பல்களோடு நான் விடைபெறும் அடுத்த நொடியில், அங்கே எனக்கான கேலிச்சித்திரங்கள் தீட்டும் வேலை தொடங்கிவிடுகிறது.

……..

விளக்கம் எதுவும் தேவை இல்லை. என்னை எப்படி நடத்த வேண்டும் என்பதை என் செயல் உலகிற்குச் சொல்லும்.

………

என்னைக் குறித்த பெருமிதங்களை விட, என் குழந்தைகள் குறித்த பெருமிதங்களைக் கடப்பது கடினமாக இருக்கிறது.

…….

அவனுக்குக் கோமாளியாக நடிப்பது ஒரு வேலை. ஒப்பனையைக் கலைத்த பிறகு, தான் கோமாளி இல்லை என்பதை உணர்த்துவது இன்னொரு வேலை.

……..

ஒரு கேள்விக்கு முந்திக்கொண்டு பதில் சொல்வதை விட, சரியான பதில் சொல்வதுதான் முக்கியம். சரியான பதில் தாமதமானால், முந்திக்கொண்டு வந்த பதிலே சரியான பதில் ஆகிவிடும்.

………

நீதி உறங்குவதில்லை. உறங்குவதுபோல் சில நேரங்களில் நடிக்கும். நீ உலுக்கிக்கொண்டே இரு.

………

நேர்மையாகப் பணிபுரியும் ஊழியனுக்கு ‘ஓவர் ஸ்மார்ட்’, ‘விளம்பரப் பேர்வழி’, ‘திமிர் பிடித்தவன்’ என்றெல்லாம் பேர் கிடைப்பது  ஊழிக்காலத்தின் சிறப்பியல்பு.

…….

ஞானம் அடைந்துவிட்டதாக உள்ளுக்குள் குரல் கேட்கும். நம்பாதே. மாவு இன்னும் ‘நைஸ்’ ஆக வேண்டும்.

….…charlie chaplin

பாப்பா… வாம்மா!

சமீபத்தில் ஒரு நாள் எனது செருப்பு வார் அறுந்துபோனது. முகப்பேர் திருமங்கலம் சந்திப்புக்கு அருகே உள்ள தெருவில் ஒரு கடை இருக்கிறது. கண்ணாடி அணிந்துகொண்டு சற்று பூசின மாதிரியான தேகத்துடன் கடைக்காரர் தோற்றமளிப்பார். வயது ஐம்பதுக்கு மேலிருக்கும். செருப்பை அவர் முன்னால் வைத்தேன். வாரைச் சரிசெய்துவிட்டு, செருப்பு முழுதுமே தையல் போட்டுவிடலாம் என்று நினைத்து அவரிடம் விசாரித்தேன். செருப்பைப் பார்த்தவர் ‘இதுக்கு ஒரு மணி நேரம் ஆகும்…பரவாயில்லியா?’ என்றார். நான் அப்போது அலுவலகம் சென்றுகொண்டிருந்தேன். அவ்வளவு நேரம் காத்திருக்க அவகாசம் இல்லை.  பொறுமையும் இல்லை. ’சரிங்க, இப்போதைக்கு வாரை மட்டும் தைச்சுக் கொடுங்க’ என்றேன். ஐந்து நிமிடங்களில் வாரைச் சரிசெய்துகொடுத்தார். ஐந்து ரூபாய்தான் கூலியாகக் கேட்டார். ‘இந்த செருப்புக்கு முழுக்க தையல் போடணும்னா அவ்வளவு டைம் ஆகும். அவசரத்துல நான் பண்ணிக்கொடுத்தா வேலைக்கு ஆகாது’ என்றார். செய்வதை நேர்த்தியாகச் செய்ய விரும்பும் அவரது அணுகுமுறை என்னை ஈர்த்தது. என்ன நடந்தாலும்  ‘ஜெர்க்’ ஆகாமல் வேடிக்கை பார்க்கும் ஒரு முதிர்ச்சி அவரிடம் இருப்பதாக எனக்குத் தோன்றியது. ‘இன்னொரு நாள் வர்றேங்க’ என்றபடி டூவீலரை நோக்கி நகர்ந்தேன். நான் சும்மா சாக்கு சொல்லிவிட்டு போவதாகவே அவர் நினைத்தார் என்பது அவரது பார்வையில் தெரிந்தது.

ஒரு மாதத்தில் அந்தத் தொழிலாளியை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இன்னொரு செருப்பின் வாரும் அறுந்தது. முன்பு அவர் கடைக்கு வந்ததை அவருக்கு நினைவுப்படுத்திவிட்டு செருப்பை வைத்தேன். அவருக்கு ஞாபகம் இருந்தது. அதற்காக ரொம்பவும் அலட்டிக்கொள்ளவில்லை. ‘போன முறை உங்ககிட்ட வந்தப்போ செருப்புக்கு முழுசா தையல் போட முடியல. நேரம் ஆனா கூட பரவால்ல. இந்த முறை முழுசா தையல் போட்டுக்கொடுத்திருங்க’ என்றேன். செருப்பைக் கையில் எடுத்துப் பார்த்துவிட்டு, ‘எண்பது ரூபா ஆகும்’ என்றார். அதற்குச் சம்மதித்துவிட்டு, அவருக்கு அருகிலேயே சம்மணம் போட்டு உட்கார்ந்தேன்.

’செருப்பு நீளமா இருக்கே’ என்றார். ‘என் ஃப்ரண்ட் அவனுக்காக வாங்குன செருப்பு இது. எனக்குக் கொடுத்தான். கொஞ்ச நாள் சும்மா வச்சிருந்து இப்பதான் போடுறேன்’ என்றேன்.

செருப்பின் விளிம்பில் நூலை விட்டு தைத்துக்கொண்டிருந்தவரிடம் சும்மா பேச்சுக் கொடுத்தேன். ‘ஆரம்பத்துலர்ந்தே செருப்பு தைக்குற வேலைதான் பார்த்துட்டிருக்கீங்களா?’ என்றேன். சில நொடிகள் அவர் வெளிப்படுத்திய அமைதி ‘நாம பேசுறத அவர் விரும்பலயோ?’ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது. சந்தேகத்தைத் தீர்த்து வைக்கிற மாதிரி சட்டென்று பதில் வந்தது. ‘ஆரம்பத்துல அரப்புப்பொடி வித்திருக்கேன். ஐஸ் வித்தேன். கொஞ்ச நாள் கோலப்பொடி வித்தேன். எல்லா வேலையும் பார்த்தாச்சு’ என்றார்  செருப்புத்தொழிலாளி.

அரப்புப் பொடி என்றால் பாத்திரம் கழுவ பயன்படுத்துகிற பொடி. சபீனா, ஏ ஒன், விம் பார் வகையறாக்கள் வருவதற்கு முன்னால் இதைத்தான் நம்மவர்கள் பயன்படுத்தினார்கள். ‘ஐஸ்ன்னா கடை கடையா, பார் பாரா விப்பாங்களே அப்படியா?’ என்று தற்செயலான ஆர்வத்துடன் கேட்டேன். ‘இல்ல…சாப்பிடுற ஐஸ்தான். பால் ஐஸ், மேங்கோ பார்…சாக்கோ பார் இந்த மாதிரி. தள்ளுவண்டில போய் இதை விப்பேன்’ என்றார்.

செருப்பில் தையல் ஏறிக்கொண்டே இருந்தது. ‘அதெல்லாம் முப்பது வருஷத்துக்கு முன்னால. அப்போ சாதா ஐஸ் 5 காசு. பால் ஐஸ் 10 காசு. மேங்கோ பார், சாக்கோ பார் ஐஸெல்லாம் 15 காசு’ என்றபடியே கண்ணாடியைத் தாழ்த்தி சாலையைக் கொஞ்சம் கவனித்துக்கொண்டார். அவரைக் கடந்துசெல்லும் பாதங்கள் அவரை ஈர்த்துக்கொண்டே இருக்கும்போல. திருமங்கலம் சந்திப்பில் மின்சார வாரிய அலுவலகத்துக்குப் பின்னால் இருக்கும் இன்றைய தெருதான் அவருக்குப் பூர்வீகமாம். ‘அதுதான் எங்க ஊரு’ என்றபோது, சென்னையின் ஆதிக் குடிமக்களில் அவரும் ஒருவர் என்பது புரிந்தது.

’பாடிக்குப் போய் ஐஸ் விப்பேன். எட்டு வருஷம் ஐஸ் வித்தேன். கூவி கூவி விக்குறதுதான் கஷ்டம். வியாபாரம் ஓரளவுக்கு மேல போகல. விட்டுட்டேன்’ என்றவரிடம், ‘ஹார்ன் வச்சு இப்போ அடிக்குறாங்களே…அதெல்லாம் அப்போ இல்லியா?’ என்று முட்டாள்தனமாகக் கேட்டேன். அந்தக் கேள்வி எனக்கு எவ்வளவு ஒரு வியப்பான அனுபவத்தைத் தரப்போகிறது என்பது அப்போது எனக்குத் தெரியாது.

என்னிடம் பேசிக்கொண்டிருந்தபோது முதன்முறையாக அவர் சிரித்தது அப்போதுதான். ’ஹார்ன் அடிச்சுதான் ஐஸ் விப்போம். என்னதான் ஹாரன் அடிச்சாலும் ஒரு தெருல நாலைஞ்சு முறையாவது கத்தித் தான் ஆகணும். அப்படி கத்திக் கத்தி தொண்டை ஒரு மாதிரி ஆகிரும். அதுதான் ஒரே தொல்ல. மத்தபடி என் சத்ததைக் கேட்டாலே ஜனங்க வெளியே வந்துருவாங்க’ என்று என்னைப் பார்த்துச் சிரித்தார்.

’ஏரியா ஆளுங்களுக்கு நல்லா பழக்கமோ?’

‘ஆமா..ஏற்கனவே கோலப்பொடி வித்ததால என்னை எல்லாருக்கும் தெரியும். அப்புறம் எனக்குக் கிடைச்ச ஹாரனும் அப்படி’…என்றபடியே என்னைப் பார்த்து தாராளமாகவே சிரித்தார்.

‘ஏன் அந்த ஹாரன்ல என்ன விசேஷம்?’

“அதுவா….ஏற்கனவே மூணு ஹாரன் வாங்கி ஒண்ணும் எடுபடல. எல்லாமே சீக்கிரமே பிஞ்சு போயிருச்சு. ஒருநாள் வழக்கம்போல வியாசர்பாடிக்கு போய் புதுசா ஹாரன் வாங்கப் போனேன். கடைக்காரன் நிறைய எடுத்துக் காட்டுனான். அதுல ஒண்ணு செலக்ட் பண்ணேன். லேசா அமுக்குனப்போ வித்யாசமா சவுண்டு வந்துச்சு. அப்போ அதை நான் பெரிசா எடுத்துக்கல. கடைக்காரன்கிட்ட 15 ரூபாய்க்குப் பேரம் பேசுனேன். அவன் 18 ரூபாய்லயே நின்னான். சரி போன்னு கொடுத்துட்டு அதை வாங்கிட்டு வந்துட்டேன். வழக்கம்போல வண்டில ஹாரனை மாட்டிட்டு ஐஸ் வித்துட்டிருந்தேன். அந்த ஹாரனும் ‘ங்கொய் ங்கொய்’ன்னுதான் சத்தம் போட்டுச்சு. ஒருமுறை சும்மானாச்சுக்கும் அதைக் கொஞ்சம் கொஞ்சமா அழுத்துனேன். ‘பாப்பா’ன்னு வாஞ்சையா கூப்பிடுற மாதிரி சத்தம் கேட்டுச்சு. முதல்ல எனக்கு அதைக் கேட்டவுடனே வேடிக்கையா இருந்துச்சு. என்னடா ஹாரன் பாப்பான்னு கூப்பிடுதுன்னு நினைச்சேன். சரி..அதே மாதிரி அமுக்கிட்டு மெல்ல மெல்ல கைய எடுப்போம்னு எடுத்தேன். இந்த முறை ‘வாம்மா’ன்னு சத்தம். எனக்குன்னா ஆச்சர்யம் தாங்கல. புதுசா ஒரு தெருவுக்குப் போய் இதே மாதிரி அழுத்துனேன். பாப்பா…வாம்மான்னு சத்தம். பக்கத்துல இருக்குறவங்க எல்லாம் பார்த்து சிரிச்சாங்க. என்னய்யா இப்படி சத்தம் போடுதுன்னு ஆச்சர்யப்பட்டாங்க. எனக்கு ஒரே குஷியாகிடுச்சு. இப்படி ஒரு முறை சவுண்டு கொடுத்தா போதும். தொண்டை வலிக்க கத்தவே தேவை இல்ல. தெருல குழந்தைங்கல்லாம் வந்து பக்கத்துல நின்னுரும். அந்த சவுண்டை வச்சே நல்லா வியாபாரம் பண்ணேன். அசால்ட்டா 15 ரூபாய்க்கு வியாபாரம் பண்ணுவேன்’’ என்று சொல்லிக்கொண்டே போனார்.

அவரது உடல் சிரிப்பில் குலுங்கியது. ஹாரன் சத்தம் கேட்ட ஒரு குழந்தை போலவே அவர் உருமாறி விட்டது போல முகத்தில் ஒரு பரவசம். நான் கேட்பதை என்னாலேயே நம்ப முடியவில்லை.

சிரிப்பு தணிந்து ‘அப்புறம் ஏன் தொழிலை விட்டீங்க?’ என்று கேட்டேன்.

‘அது ஒரு தனிக்கதைப்பா’ என்றார். அவரது சிரிப்பு நிற்கவில்லை.

“மத்த வியாபாரிங்க எல்லாம் என்னைப் பாத்தா மிரளுவாங்க. ஒருத்தன் இந்த ஹாரனை 50 ரூபாய்க்கு விலைக்குக் கேட்டான். நான் எப்படி கொடுப்பேன்? எனக்கு இதை வச்சுதானே ஐஸ் விக்கிற வேலையே ஜாலி ஆச்சு. நான் ஐஸ் விக்கிற தொழில்ல ஒருத்தனை இறக்கிவிட்டேன். இந்த ஹாரன் வாங்க அவனையும் கூட்டிட்டுதான் போனேன். ‘நீ மட்டும் நல்ல ஹாரன் வாங்கிகிட்ட. எனக்கு சாதா ஹாரன் வாங்கிக்கொடுத்துட்டேன்’னு எங்கிட்ட சண்டைக்கு வந்துட்டே இருந்தான்.  ஒருநாளைக்கு வண்டிய ஐஸ் கம்பெனிக்கு வெளியே நிப்பாட்டிட்டு உள்ள போயிருந்தேன். கொஞ்சம் நேரம் கழிச்சு பார்த்தா வண்டில ஹாரனை காணோம். எவனோ தூக்கிட்டுப் போயிட்டான்னுதான் நினைச்சேன். நிறைய பேர்ட்ட விசாரிச்சிப் பார்த்தேன். மறுநாள் பக்கத்து காவால பார்த்தா, யாரோ ஹாரனை உடைச்சு போட்டிருந்தாங்க. நம்மாளுதான் உடைச்சுப்போட்டிருக்கான்னு தெரிஞ்சது. எனக்குக் கோபம் தாங்கல. கன்னாபின்னான்னு திட்டி அவனை அடிக்கப் போய்ட்டேன். அதுக்குப் பிறகு தொழில் பண்ணவே எனக்குப் பிடிக்கல. எதுக்குத் தொண்டை தண்ணி வத்த கத்தி ஐஸ் விக்கணும்னு மறுபடியும் கோல மாவு விக்கப் போய்ட்டேன். அதுவும் சரியா வரல. செருப்பு தைக்கிற தொழிலுக்கே வந்துட்டேன்” என்று  முடித்தார் அதே சிரிப்புடன்.

எனக்கு ஒரு மாயாஜாலக் கதையைக் கேட்டது போலிருந்தது. ஒரு ஹாரன் ஒருவரைக் கொஞ்ச காலம் அற்புதத்தில் திளைக்கவைத்துவிட்டுச் சென்றுவிட்டது. காலியான ஐஸ் பெட்டியோடு வீடு திரும்புவோமா, எதுவும் விற்காமல் அதே கனத்துடன் திரும்புவோமா என்று ஊசலாட்டத்தில் இருந்த அவரது பிழைப்பை ஹாரன் உறுதிப்படுத்தியிருக்கிறது. அயல்நாட்டுக் கதையில் பைப்பரைப் பின்தொடர்ந்த குழந்தைகளைப் போல, இவருக்குப் பின்னாலும் குழந்தைகள் திரண்டிருக்கிறார்கள். வியாபாரம் கொழித்திருக்கிறது. கையைச் சுட்ட ஐஸ் வியாபாரம் காசுகளைப் பொழியத் தொடங்கியதை இவர் மனைவி மக்கள் பார்த்து வியந்திருப்பார்கள். வந்ததுபோலவே ஹாரன் மறைந்தும்விட்டது. போகும்போது, அவருடைய வியாபாரத்தையே பிடுங்கிக்கொண்டும் போய்விட்டது.  காலம் அவருக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுத்துவிட்டு திடீரென பறித்தது ஏனோ? அதிர்ஷ்டம் என்றாலே அப்படித்தானே? ஆனால் இப்படி ஓர் அதிர்ஷ்டம் எத்தனை பேருக்கு வாய்த்திருக்கும்?

அவர் ஐஸ் விற்ற காலத்திலிருந்து விடுபட்டு மறுபடியும் நிகழ்காலத்துக்கு வந்தவராக மௌனமாக செருப்பு தைப்பதைத் தொடர்ந்தாலும் அந்தச் சிரிப்பு அவர் முகத்திலிருந்து மறையவே இல்லை. ‘இந்த செருப்பெல்லாம் மழைக்கு தாங்காது. வெயிலுக்குத்தான் நல்லாருக்கும். வெயில் வர்ற வரைக்கும் ரப்பர் செருப்பு போட்டுக்கோ’ என்றபடியே செருப்பை என் முன்னால் வைத்தார்.

புதுத்தையல் ஏறிய செருப்பு பாதத்துக்கு வலுவேற்றியது போலிருந்தது. இன்பமும் துன்பத்தையும் விசித்திரங்களில் பொதிந்து தரும் வாழ்க்கை மீது வியப்பு ஏற்பட்டது. ‘பாப்பா…வாம்மா’ என்று ஹாரன் சத்தம் அன்று முழுதும் மனதில் கேட்டுக்கொண்டே இருந்தது.

நன்றி: www.sengodimedia.com

அம்மாச்சியின் கதை

அம்மாச்சியின் கதை:
…….
என் அம்மாச்சி கோபக்கார கணக்கன்
ஒருவனுக்கு வாழ்க்கைப்பட்டவள்.
அவன் கோபத்துக்கு இடையே
ஒளித்துவைத்திருந்த காதலில்
ஐந்து பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள்.
அவர்களின் சிறிய, பெரிய சண்டைகளை
கணவனை மீறாத சுதந்திரத்தோடு
தன்னால் இயன்றவரை
சுமூகமாகத் தீர்த்துவைப்பாள்.
எனினும் பிள்ளைகளில் சிலருக்கு
அவள் மீது வருத்தம் உண்டு.
பிள்ளைகளுக்குப் பிறந்த பிள்ளைகளையும்
தன் பிள்ளைகளாகவே அவள் பாவித்தாள்.
அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகளையும்
அவ்வாறே கொஞ்சி மகிழ்ந்தாள்.
தனக்கு முன்பே விடைபெற்ற கணவனின்
புகைப்படத்தைப் பக்கத்திலேயே வைத்து
வணங்கிவந்தாள்.
தன்னைக் கவனித்துக்கொண்ட மருமகளின்
செய்கைகள் தன்னைப் போலவே இருக்க வேண்டும் என்பது
அவளது விருப்பமாக இருந்தது.
சில முனகல்களோடு
ஏமாற்றத்தை ஏற்றுக்கொண்டாள்.
இறுதிக்காலத்தைப் படுக்கையிலேயே கழித்த அம்மாச்சி
ஒரு மழை நாளில்
சட்டென்று மூச்சை நிறுத்தி,
ஈரம் பிடித்த விறகுகளுக்கிடையே
நீண்ட நேரம் காத்திருந்து எரிந்து முடிந்துபோனாள்.
இந்தக் கோடையின் மதியம் ஒன்றில்
ஆளரவம் அடங்கிய தெருவில்
என்னைக் கடந்துபோன
மடி தொங்கிய நாய்
அவளை நினைவுப்படுத்திவிட்டு செல்கிறது.

சிறு மழை

சித்திரைத் தகிப்பின் ஊடே
பெய்யும் சிறு மழையில்
அங்கும் இங்கும் ஆக இருக்கும் இருவர்
ஒருவரை ஒருவர் நினைப்பதும்
பிறகு அவரவர் மழையைக் கடந்து செல்வதும் நிகழ்கிறது.

…..

அரண்மனை நுழைவாயிலுக்கான கதவைச்

செதுக்க வேண்டிய தச்சன்

மரத்தைத் தேர்வு செய்வதுபோல

வெயிலோடும் உறுமலோடும் நிற்கிற

காருடைய முன் டயரை

வெகு நேரம் முகர்ந்துபார்த்து

காலைத் தூக்குகிறது தெருநாய்.

…..

சாபத்தின் நிழல் படிந்த வாழ்க்கையிலும்
அவன் மகிழ்ச்சியாகவே இருக்கிறான்.
சாபமே இவ்வளவு மகிழ்ச்சி எனில்
வரமாய அமையும் வாழ்க்கை
எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்
என்ற ஏக்கம் எழும்போது மட்டும்
கொஞ்சம் வாடுவான்.
மெல்ல பாடுவான்.
பாடல் வரிகளில் தேடுவான்.
மகிழ்ச்சியை மீட்டெடுப்பான்.
அவன் மகிழ்ச்சியாகவே இருக்கிறான்.

……

……

.

கிரிக்கெட் ரசிகன் அல்லாதவனின் ஒப்புதல் வாக்குமூலம்

கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் நல்லவர்கள். இன்றைய கிரிக்கெட்டை அவர்கள் பிரித்து மேய்ந்துகொண்டிருக்கும்போது, ‘க்ளூஸ்னர் ஆடுன மேட்ச் இன்னும் என் கண்ணுக்குள்ளயே நிக்குது, ஆஸ்திரேலியாவுக்கு எதிரா தனி ஆளா ரிச்சர்டுசன் ஆடுன ஆட்டம் இருக்கே…, ஸ்டீவ் வாவ் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரா ஒரு ரன் எடுத்து ஃபைனலுக்கு நுழைஞ்ச சந்தோஷத்துல துள்ளிக்குதிச்சானே அடேங்கப்பா…’ என நான் எனக்குத் தெரிந்த கிரிக்கெட்டை எடுத்துவிடுவேன். அதற்கும் வரவேற்பு கொடுத்து ஆட்டத்தில் இணைந்துகொள்வார்கள். மனதுக்குள் ‘என்னா அப்டேட்டு’ என்று கலாய்த்திருக்கலாம். ஆனால் பழைய ஞாபகங்களையும் வாரி எடுத்துக்கொள்ள தவறுவதில்லை. கிரிக்கெட்டை ஆராதிக்கும் ஒவ்வொருவருக்கும் அதன் துடிப்பான, கொண்டாடத் தகுந்த தருணங்கள் உயிர்மூச்சு போலதான். அவர்களுக்காகவாவது இந்தியா இன்றைக்கு ஜெயித்திருக்கலாம். என்னைப் போன்றவர்களுக்கென்ன…கிரிக்கெட்டில் ஆர்வமும் இல்லை. இந்திய அணி மீது ஈடுபாடும் இல்லை. இன்று நிம்மதியாகத் தூங்கிவிடுவோம். இன்றைய மேட்சுக்காக நேற்று இரவே தூக்கம் தொலைத்தவர்களும் என் நண்பர் வட்டத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்தியாவின் தோல்வி கசப்பான அனுபவம் தான்.

சரி ‘யாருக்கோ வந்த விருந்து’ மாதிரி கிரிக்கெட்டைப் பேசுகிறேனே… மற்ற விளையாட்டுகளில் அப்டேடட் ஆக இருக்கிறேனா என்றால், வடிவேலு மாதிரி பேண்ட்டின் வெற்று பாக்கெட்களை எடுத்துக்காட்டும் நிலைமைதான். ஒரு விளையாட்டுக்கு இந்தளவுக்கு பாரபட்சமான முக்கியத்துவம் ஒரு நாட்டில் இருக்கக் கூடாது என்ற ஒரே எண்ணம்தான் கிரிக்கெட்டை இப்படி கூசாமல் பழிக்க வைக்கிறது. அவ்வளவுதான் யுவர் ஆனர்!

Previous Older Entries Next Newer Entries